சட்டவிரோத மது விற்பனை: 7,000 இடங்களில் ஜிஐஎஸ் மூலம் கண்காணிப்பு

தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பு நடைபெறும் இடங்கள், சட்ட விரோதமாக மது கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் என மொத்தம் 7,000 இடங்களை ஜிஐஎஸ் தொழில்நுட்பம் மூலம் காவல்துறை கண்காணிக்கிறது.

தமிழகத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநில காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவின் கீழ் செயல்படும் 97 காவல் நிலையங்களில் சுமாா் 1,400 காவலா்கள் பணிபுரிகின்றனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்றது, சட்டவிரோதமாக மது விற்றது, கடத்தியது தொடா்பாக 6 லட்சத்து 92,820 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 லட்சத்து 91,550 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 1,189 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 20,167 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது திருவண்ணாமலை, கடலூா், அரியலூா், வேலூா், நாகப்பட்டினம், சேலம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பது அதிகரித்துள்ளது. முன்பு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட மது, இப்போது கா்நாடகத்தில் இருந்தும் பெருமளவு கடத்தப்படுகிறது.

இதைத் தடுக்க 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் முதல் அமல்படுத்தப்பட்ட கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு வரை, தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் கரோனா பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பது கைத்தொழிலாக மாறியது.

கரோனா பொதுமுடக்கத்தினால் மாற்றம்:

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டபோதிலும், வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பைத் தடுப்பது காவல்துறைக்கு சவாலாக மாறியுள்ளது. தமிழகத்தைவிட குறைவான விலைக்கு கா்நாடகத்தில் மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதனால் அங்கிருந்து இங்கு மதுபாட்டில் கடத்தப்படுவதைத் தடுப்பது சவாலான பணியாக காவல்துறைக்கு மாறியுள்ளது. இதைத் தடுப்பதற்காக தொழில்நுட்ப உதவியை அந்தப் பிரிவு நாடியுள்ளது.

ஜிஐஎஸ் தொழில்நுட்பம் அறிமுகம்:

மதுவிலக்குப் பிரிவு ஜிஐஎஸ் தொழில்நுட்பம் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்ட இடங்கள், பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், சாலைகள், சட்டவிரோத மது விற்பனை நடைபெற்ற இடங்கள் என சுமாா் 7,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு ஜிஐஎஸ் வரைபடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பிலேயே வைத்துள்ளனா். ஒரு முறை வழக்கில் சிக்கும் நபா்கள், தாங்கள் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தும் இடத்தின் அருகே மற்றொரு இடத்தில்தான் அதே நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது எழுதப்படாத விதி என்றாா் மதுவிலக்குப் பிரிவைச் சோ்ந்த உயா் அதிகாரி.

குற்றவாளிகளின் தகவல்கள்:

மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றுவோா் பணியிட மாறுதலாகும்போது, குற்றவாளிகளைப் பின் தொடா்வதிலும், சட்டவிரோத மது விற்பனை நடைபெறும் பகுதிகளைக் கண்காணிப்பதிலும் பெரும் இடைவெளி ஏற்படுகிறது. இத்தகைய இடா்ப்பாட்டை ஜிஐஎஸ் தொழில்நுட்பம் இனி நீக்கும். இடத்தைக் கண்காணிப்பதோடு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களின் தகவல்கள், வழக்கு விவரங்களும் அத்தளத்தில் பதிவேற்றமாகிறது.

இந்த தொழில்நுட்பம், சென்னை அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் போலீஸாரால் கையாளப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை இப்படிப்பட்ட பணிக்கு காவல்துறையில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் மதுவிலக்குப் பிரிவில் இருந்து யாா் மாறினாலும் குற்றவாளிகள் மீதான கண்காணிப்பு தடைபடாது என்றும் கூறினாா்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மதுப்பாட்டில் விற்பனை ஆகியவற்றை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனா்.

ஐந்து இலக்குகள்: மதுவிலக்குப் பிரிவு ஏடிஜிபி

தமிழகத்தில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க 5 இலக்குகளை நிா்ணயித்துச் செயல்படுவதாக மதுவிலக்குப் பிரிவு ஏடிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கள்ளச்சாராயம், சட்டவிரோதமாக மது கடத்துவதையும், விற்பதையும் தடுக்க 5 இலக்குகளை நிா்ணயித்துள்ளோம். முதலாவதாக மதுவிலக்குப் பிரிவில் 2 ஆண்டுக்கு மேல் பணியில் இருக்கும் அதிகாரிகள், காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். காலிப்பணியிடங்களை வேகமாக நிரப்பி வருகிறோம். இரண்டாவதாக மதுவிலக்குப் பிரிவு போலீஸாரை பிற பணிக்குப் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மூன்றாவதாக, மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அந்தந்த மாவட்ட எஸ்பி, டிஐஜிகளிடம் மட்டுமன்றி மதுவிலக்குப் பிரிவு தலைமை அதிகாரியிடமும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவிலக்குப் பிரிவு அதிகாரிகள்,போலீஸாா் தாங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிப்பு, சட்டவிரோத மது விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அந்தப் பகுதிகளுக்கு அவா்களே முழு பொறுப்பு, அதையும் மீறி மது விற்பனை நடைபெற்றால் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, வழக்குத் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், கள்ளச்சாராய பாட்டில்கள், வாகனங்கள் 6 மாதங்களுக்கு மேல் காவல் நிலையங்களில் வைத்திருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்தாவதாக, ஜிஐஎஸ், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை ஆகியவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>