சர்க்கரை உடலுக்கு நல்லதா… கெட்டதா..?

அண்மையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தான் புதிதாக ஆரம்பித்துள்ள ஒரு யூடியூப் சேனலில் சர்க்கரை உடலுக்கு மிகமிக கெடுதியானது என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதே கருத்தை பல்வேறு இயற்கை வைத்தியர்களும் பல்வேறு தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

அவர்கள் கூற்றுப்படி, சர்க்கரையில் எந்தவித சத்தும் கிடையாது. சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை எல்லா வியாதிகளும் வரும். அத்துடன்,சர்க்கரை என்பது சுக்ரோஸ் என்னும் மூலக்கூறு. அது குளுகோஸ் மற்றும் ஃப்ரக்ட்டோஸ் இன்னும் இரண்டு மூலக்கூறுகளாக வயிற்றுக்குள் பிரிகிறது. அதில் இந்த ஃப்ரக்ட்டோஸ் கல்லீரலுக்கு மிகவும் கெடுதல் விளைவிப்பது போன்ற கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

அந்த நடிகர் தனது கருத்துக்களுக்கு ஆதரவாக ஒரு சில புத்தகங்களையும், உலக சுகாதார அமைப்பின் சில கட்டுரைகளையும் மேற்கோள் காட்டுகிறார் (அவை அந்த அமைப்புகளின் இனையதளங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன).

இதுபோன்ற கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறமோ உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் தினம் தினம் சர்க்கரை மிகுந்த, இனிப்பான சாக்லேட்டுகளையும், ஐஸ்கிரீம் வகைகளையும் ஒருகை பார்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். 

மேலும் மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. அப்படியானால் உண்மையில் சர்க்கரை மனிதனுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று சற்று சிந்தித்து ஆராய்ந்து பார்ப்போம். 

சர்க்கரையின் கெடுதல் பற்றி விளக்க அந்த சின்னத்திரை நடிகர் ஒரு பரிசோதனையை விவரிக்கிறார். அதாவது, ஒரு சிறிய தண்ணீர் தொட்டியில் ஒரு எலியை தூக்கிப்போட்டு அத்துடன் ஒரு மிதக்கும் கட்டையையும் போட்டு வைத்தால் அந்த எலி சுற்றிசுற்றி வந்து தன் அறிவால் அந்த கட்டையின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு மூழ்காமல் தப்பித்து விடுமாம். 

ஆனால் அந்த எலிக்கு சிறிதளவு சர்க்கரையை சாப்பிடக்கொடுத்தால் அந்த எலி மூளை குழம்பி என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் சுற்றிசுற்றி வந்து நீரில் மூழ்கி விடுமாம். 

அடிப்படையில் இந்த பரிசோதனையே தவறான ஒன்று. ஏனென்றால் எலிகளுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். அதற்கு ஆதாரமாக, கரும்புக் காடுகளில் நாம் எலிகளை அதிகம் காணலாம். அப்படி கரும்புக் காடுகளில் சுற்றித்திரியும் எலிகளை பிடிக்க பாம்புகள் வேறு அங்கே வரும். இந்த பரிசோதனையின் படி, பார்த்தால் கரும்புச்சாறு குடிக்கும் எலிகள் கரும்புக் காட்டில் போதையில் இருப்பதுபோல் மதி மயங்கி இங்கும் அங்குமாக அலைந்துகொண்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லையே. 

இந்த பரிசோதனையை போல ஒரு மனிதனுக்கும் வாயில் சாராயத்தை அளவுக்கு மீறி ஊற்றினால் அந்த மனிதனும் நடுத்தெருவில் அதுபோன்ற போதையில் சுற்றிசுற்றி வந்து கொண்டிருப்பான்.  ஒரு விலங்கு தானாக உண்ணும் உணவைவிட நாம் திணிக்கும் அதிகப்படியான உணவு அந்த விலங்குக்கு கெடுதலைத்தானே தரும். ஆகவே, இதுபோன்ற செயற்கையான பரிசோதனைகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை மட்டும் அல்ல: அவை கண்டிக்கத்தக்கவையும் ஆகும். 

ஆனால் கரும்புகளை வளைத்து வளைத்து உடைத்து சாப்பிடும் யானைகளுக்கு அதுபோன்ற மூளை குழப்பம் எதுவும் வருவதில்லை. 

சத்தியமங்கலம் அருகிலுள்ள வனப்பகுதிகள் வழியாக லாரிகளில் சர்க்கரை ஆலைகளுக்காக ஏற்றிவரப்படும் கரும்புகளை யானைகள் புத்திசாலித்தனமாக வழிமறித்து கரும்புகளை வலுக்கட்டாயமாக பிடுங்கித்தின்பதை நாம் செய்திகளில் காண்கிறோம்.  

இதன்படி, சர்க்கரை, மூளையை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு பொருள் என்னும் வாதம் ஆதாரமற்ற ஒன்று என்பது தெளிவாக விளங்கும்.

சர்க்கரையைப்பற்றி மேலும் அறிய நாமும் ஒரு மிக எளிய பரிசோதனையை நம் வீட்டிலேயே செய்வோம். ஏதாவது ஒரு இனிப்பை ஒரு தட்டில் வைத்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு அரை மணி நேரத்திற்குள் அந்த இனிப்பைச் சுற்றி ஈக்களும், எறும்புகளும் மொய்க்க ஆரம்பித்துவிடும்.  ஒரு இரண்டு நாள்கள் அந்த இனிப்பை வெளியிலேயே வைத்திருந்தால் அதன்மேல் பச்சை நிறத்தில் பூஞ்சைக்காளான்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். 

இதன்மூலம் விளங்கும் உண்மை என்னவென்றால், பிரம்மாண்டமான யானை முதல் சிறிய ஈ, எறும்பு ஈடாக கண்ணுக்குத் தெரியாத பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வரை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சர்க்கரை ஒரு அடிப்படை உணவாகும். பின்னர் எப்படி அது மனிதனுக்கு மட்டும் விஷமாக இருக்க முடியும்.

“சர்க்கரையில் எந்தவித சத்தும் இல்லை” என்று சொல்லும் வாதம் மிக வினோதமானது. இப்படி சொல்பவர்கள் தண்ணீரில் என்ன சத்து இருக்கிறது என்று சொல்வார்களா. பிறகு நாம் ஏன் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நாம் உண்ணும் கொழுப்புகளில் மட்டும் என்ன சத்து இருக்கின்றது.    நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. தண்ணீர் என்பது ஒரு பிரபஞ்ச கரைப்பான். 

நம் உடலில் சத்துக்கள் சிறுகுடலில் திரவ வடிவில் உறிஞ்சப்படுவதால் நமக்கு தண்ணீர் தேவை. ஆனால் ஒரு சில விட்டமின்கள் தண்ணீரில் கரையாது. அவை கொழுப்பில் தான் கரையும். ஆகவே, நாம் உணவில் கொழுப்பையும் சேர்த்துக் கொள்கிறோம். அதுபோல உடலில் ஆற்றல் பெறுவதற்கு சர்க்கரை மிகமிகத் தேவை. 

கரும்பு என்பது புல்வகை. அது மூங்கில் இனத்தை சேர்ந்த ஒரு தாவரம். சர்க்கரை என்பது அந்த தாவரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பொருள். பிறகு எப்படி இந்த சர்க்கரை மனிதனுக்கு ஆபத்தான பொருளாக இருக்க முடியும். மேலும் இந்த சர்க்கரை கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களின் உபயோகத்தில் இருந்து வருகிறது. 

சுக்ரோஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை ஒரு மிகப்பெரிய மாவு போன்ற மூலக்கூறு. உண்மையில் அதற்கு சுவையே கிடையாது. ஆனால், அது தண்ணீரில் கரையும்போது மிக எளிதாக குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்ட்டோஸ் என்று சிறிய மூலக்கூறுகளாக பிரிந்துவிடும். நாவில் சர்க்கரை பட்டவுடன் வாயில் உள்ள உமிழ்நீரால் பிரிக்கப்பட்டு அதனால் உண்டாகும் குளுக்கோஸ்தான் நம் நாவில் இனிப்பு சுவையை தருகிறது. குளுக்கோஸ், செயற்கையாக ஸ்டார்ச் அதிகம் உள்ள மரவள்ளிக்கிழங்கு மாவு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

ஸ்டார்ச் என்பதும் மிக நீளமான ஒரு சர்க்கரை மூலக்கூறுதான். அது அவ்வளவு எளிதாக நீரில் கரையாது. எனவே ஸ்டார்ச்சைத் தின்றால் நாவு இனிக்காது.

குளுக்கோஸ் என்பது உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலை மிக விரைவாக வழங்கக் கூடியது. மேலும் வயிற்றால் மிக எளிதாகவும் விரைவாகவும் உறிஞ்சப்படக் கூடியது. இதன் காரணமாகத்தான் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள் சோர்வடையும்போது உடனடி ஆற்றல்பெற குளுகோசை சாப்பிடுகிறார்கள்.  

மற்றொரு மூலக்கூறான ஃப்ரக்ட்டோஸ் கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. உடலுக்கு வேறு எப்போதெல்லாம் குளுக்கோஸ் தேவையோ அப்போதெல்லாம் ஃப்ரக்ட்டோஸ் குளுகோஸ் ஆக மாற்றப்பட்டு தேவையான இடங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும்.  

ஃப்ரக்ட்டோஸ் என்பது பழங்களில் இருக்கும் ஒரு சர்க்கரை. பழம் என்பதில் ஆங்கில வார்த்தையான ஃப்ரூட்  என்பதிலிருந்து வந்ததுதான் ஃப்ரக்ட்டோஸ் என்னும் பெயர். ஃப்ரக்ட்டோஸ் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என்றால் இந்த சின்னத்திரை நடிகர் மற்றும் இயற்கை வைத்தியர்கள் நாம் இனிமேல் எந்தவிதமான பழங்களையம் சாப்பிடக்கூடாது என்று சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை சாப்பிட்டாலும் நமக்கு புற்றுநோய் வரும் என்று அவர்கள் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  இவர்களது கருத்துக்கள் விஞ்ஞான ஆதாரமற்றவை என்பது இதன் மூலம் விளங்கும். 

இதுபோன்ற கருத்துக்களை ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அப்பொழுது வாழ்ந்தவர்கள் அந்தக் கருத்துக்களை உடனே நம்பி இருப்பார்கள். ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தகவல் தொழில்நுட்ப யுகத்தில்.  

ஃப்ரெக்டொஸ் உடலுக்கு தீமை விளைவிக்கும் என்று ஒருவர் சொன்னால் , அவை என்னென்ன நன்மைகள் செய்கின்றன என்பதை எல்லோரும் இணையத்தில் சென்று பார்க்க முடியும்.   

ஆனால் அளவுக்கு மீறினால் இதே ஃப்ரெக்டொஸ் கல்லீரலுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதும் உண்மைதான். அதுவே சர்க்கரை நல்லதா கெட்டதா என்னும் கேள்விக்கும் பதில். 

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால், மனிதகுலத்துக்கு, உணவுப்பொருள்களில் முதல் எதிரி உப்புதான். உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பது உப்பு. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது சிறுநீரகத்தில் உள்ள வடிகட்டிகளான மெல்லிய நெப்ரான்கள் சோப்புக்குமிழி போல் உடைபட்டு சிறுநீரகம் செயலிழக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ரத்தக்குழாய்கள் வெடிக்கின்றன. 25 வயதில் மாரடைப்பால் இளைஞர் மரணம் என்று செய்திகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதற்கு காரணம் உயர் ரத்தஅழுத்தமும், அது உண்டாக்கும் உப்பும் தான் என்பதையும் உணர வேண்டும். 

ஆனால், 25 வயதில் சர்க்கரையால் இன்னார் உயிரிழந்தார் என்ற புள்ளி விவரத்தை காட்டமுடியுமா. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் ரத்த அழுத்தம் என்பது சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் வரக்கூடிய ஒன்று. ஆகவே சர்க்கரையை விட உப்பு மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சர்க்கரையினால் வரும் நீரிழிவு நோய் இருபதாம் நூற்றாண்டு நோய் அல்ல . புராண காலத்திலேயே ராஜா அரிச்சந்திரனுக்கு நீரிழிவுநோய் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 

ஆனால் தற்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தங்களும், உடல் உழைப்பற்ற சுகபோக வாழ்க்கை முறைகளுமே சர்க்கரையை விட நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணிகள். 

உப்புக்கு அடுத்த படியாக உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பது மக்கள் குடிக்கும் பியர் போன்ற ஆல்கஹால் வகையறாக்கள். அவை கல்லீரலை நேரடியாக தாக்குகின்ற பொருள்கள். ஆகவே நாம் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் உப்பு மற்றும் ஆல்கஹாலை நிறுத்துவது பற்றியே.

இயற்கை வைத்தியர்கள் கரும்புச்சாறு ஒரு சத்துள்ள பானம் என்று சொல்லி அதனை  குடிக்கவும் ஊக்குவிக்கிறார்கள். அது உண்மைதான். கரும்புச்சாறில் வெறும் சர்க்கரை மட்டும் அல்லாமல் கால்சியம்,பொட்டாசியம், சோடியம் மெக்னீசியம், இரும்பு போன்ற தனிமங்களும் பல்வேறு விட்டமின்களும் உள்ளன.  

ஆனால் தெருவோரத்தில் கரும்பை வெட்டி உருளைகளுக்குள் செலுத்தி பிழியப்படும் கரும்புச்சாறு உடலுக்கு மிகமிக கெடுதியான ஒன்று. ஏனென்றால் அவர்கள் வைத்திருக்கும் வெட்டப்பட்ட கரும்பின் முனைகளில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த உருளைகளிலும் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆகையால் வீதியோரங்களில் விற்கப்படும் கரும்புச்சாற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மிக மிக அதிகமாக இருக்கும். வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு வீதியோரங்களில் நாம் குடிக்கும் கரும்புச்சாறும் ஒரு காரணம். அதனால் வீதியோரங்களில் விற்கப்படும் கரும்புச்சாறு கடைகளில் புதியதாக சுத்தம் செய்யப்பட்ட கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட கரும்புச்சாற்றையே பருக வேண்டும். 

இந்த இடத்தில் ஒரு புள்ளிவிவரத்தை தெரிவிக்க விரும்புகிறேன். நம் நாட்டில் கோக்ககோலாவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அநேகம் பேர் அறியாதது, கோக்ககோலாவில் இருக்கும் சர்க்கரை அளவும் கரும்புசாறில் இருக்கும் சர்க்கரை அளவும் ஒன்றே. இரண்டிலும் இருக்கும் சர்க்கரையின் அளவு 13 சதவிகிதமாகும். எடுத்துக்காட்டாக ஒரு நூறு மில்லிலிட்டர் அதாவது ஒரு கிளாஸ் கரும்புசாறை எடுத்துக்கொண்டால் அதில் 13 கிராம் சர்க்கரை இருக்கும். இந்த 13 கிராம் சர்க்கரை என்பது கிட்டத்தட்ட மூன்று தேக்கரண்டி அளவு சர்க்கரை ஆகும்.  

எனவே கோக்ககோலா மிக அதிக அளவில் சர்க்கரையை உடலில் சேர்கின்றது என்று சொல்பவர்கள் அதே அளவு சர்க்கரையை கரும்புச்சாறும் உடலுக்கு தருகிறது என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும். 

இதுதவிர, சுகாதாரமற்ற கரும்புச்சாறும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கரும்புச்சாறு தவிர இளநீரிலும் கூட குளுக்கோஸ் மிக அதிகயளவில் உள்ளது.

நோயாளிகளுக்கு அவசரகால உதவியாக சுத்தமான இளநீரை ஊசி மூலம் உடலில் ஏற்றியிருக்கிறார்கள் என்று செய்திகள் உள்ளன. சர்க்கரை எதிர்ப்பாளர்கள் இளநீரை குடிக்கக்கூடாது என்று சொல்வார்களா. 

சர்க்கரையை விட வெல்லம்தான் நல்லது என்று ஒரு கருத்து மக்களிடையே நிலவுகிறது. நீரிழிவு நோயுள்ளவர்களும் வெல்லத்தை சாப்பிடலாம் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. 

அடிப்படையில் வெல்லமும், சர்க்கரையும் ஒன்று தான். வெல்லம் என்பது 80 சதவிகிதம் சுக்ரோசும், 10 சதவிகிதம் குளுகோசும் உள்ள ஒரு இனிப்புக் கலவை. மீதம் உள்ள பத்து சதவிகிதத்தில் 5 சதவிகிதம் கனிமங்களும், 5  சதவிகிதம் தண்ணீரும் ஆகும். 

வெல்லத்தில் இருக்கும் கனிமங்கள் நீக்கப்பட்ட பிறகு கிடைப்பது சர்க்கரை. எனவே சர்க்கரை என்பது தூய்மையானது. இது கிட்டத்தட்ட நாம் குழாயில் இருந்து நேரடியாக குடிக்கும் நீருக்கும் சுத்திகரிக்கப்பட்ட பின் குடிக்கும் மினரல்வாட்டர் என்பதற்கும் உள்ள வித்தியாசமாகும்.  

மேலும் தற்போது குடிசைத்தொழிலாக செய்யப்பட்டுகொண்டிருக்கும் வெல்ல உற்பத்தி சுகாதாரமற்ற முறையில் நடைபெறுகிறது. எப்படி ஒரு ஓட்டலில் சமையல் அறைக்கு சென்று பார்த்தவர்கள் ஓட்டலில் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்களோ அதுபோல வெல்லம் தயாரிக்கும் இடத்தில் சென்று பார்ப்பவர்கள் வெல்லம் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். அத்துடன் வெல்லம் தயாரிப்பவர்கள் “ஹைட்ரோஸ்” என்று சொல்லக்கூடிய சோடியம்சல்பைடு போன்ற வேதிபொருளையும் வெல்லத்துடன் சேர்ப்பது பலர் அறியாதது. 

இதுதவிர குடிசையில் தயாரிக்கப்படும் வெல்லத்துடன் பல இடங்களில் சர்க்கரையும் சேர்க்கப்படும். அது உண்மையில் ஒரு கலப்படம் ஆகும்.  அப்படி செய்தால் அதற்கு அரசாங்கத்திடம் இருந்து தண்டனை உண்டு. இப்படி கலப்படம் செய்வதற்குக் காரணம் வெல்லத்தின் விலையைவிட சர்க்கரையின் விலை குறைவு என்பது. இதுபோன்ற குறைகளைக் களைவதற்காக, தற்போது வெல்லம் ஆலைகளில் சுகாதாரமான முறையில், தரக்கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

சர்க்கரை உற்பத்தியில் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. கனிமவளங்களை இழக்காமல் சர்க்கரைகள் தயாரிக்கப்படுகின்றன. அவை வெல்லத்தின் நன்மையையும் சர்க்கரையின் தூய்மையையும் சேர்த்து அளிப்பவை.

இதுதவிர, குளுக்கோஸ் விரைவாக உடலில் கிரகிக்கப்படும் வேகத்தை குறைக்க சில மூலிகை பொருள்களுடன் கலந்த சர்க்கரையும் தற்போது கிடைக்கிறது. இதை உள்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக ஏறும். அது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். 

முடிவாக சர்க்கரை என்பது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்று கேட்டால் நிச்சயமாக அது உடலுக்கு தேவையான ஒன்றுதான். ஆனால் நாம் தமிழில் சொல்வதுபோல அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அனைவரும் உணர வேண்டும். அளவுக்கு மீறினால் உப்பும் நஞ்சு; ஊறுகாயும் நஞ்சு;.பாலும் நஞ்சு; பழங்களும் நஞ்சு; எண்ணெயும் நஞ்சு: இவ்வளவு ஏன் தண்ணீருமே நஞ்சு.
எனவே, இனிப்புகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள். அதன் சுவையை அனுபவியுங்கள். ஆனால் அதை ஒருகட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

அதேசமயம் இணையதளம் மூலம் தவறான தகவலை பரப்பும் அனைவருக்கும் இதனை உணர்ந்துகொண்டு தெளிவு பெற வேண்டுகிறேன்.  

தற்போது  பரவலாக  “சர்க்கரை  தயாரிப்பாளர்கள் அனைவரும் மாஃபியா” என்று ஒரு வார்த்தையை அந்த சின்னத்திரை நடிகர் மற்றும் இயற்கை வைத்தியர்கள் பிரயோகப்படுத்தி  வருகிறார்கள். அது அவர்களது அறியாமையையும், சிறுபிள்ளைத்தனத்தையும் காட்டுகிறது. எனது வேண்டுகோள் என்னவென்றால் மக்கள் அனைவரும் பிறர் சொல்வதை
கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டுவிட்டு தங்கள் சுயமுயற்சியால் உண்மையை காண வேண்டும். இந்தக் கட்டுரையில் நான் அளித்திருக்கும் தரவுகளை நீங்களே தனியாக ஆராய்ந்து பார்க்கவும் நான் வேண்டுகிறேன். 

தொடர்புக்கு…  nrkrish.tnl@gmail.com

 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>