சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடியின மாணவி

ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு சாதிச் சான்றிதழ் வழங்காததால் மேல்நிலைப் படிப்பை முடித்தும் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளார். உடனடியாக அரசு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது ஆழ்வார்குறிச்சிப் பேரூராட்சி. இங்கு பல்வேறு சமூகத்தினரும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட மதத்தினரும் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு காட்டு நாயக்கர் சமூகத்தினர் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். ஒரே இடத்தில் இல்லாமல் நாடோடியாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக யாசக வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுப் பொருள்களான பிளாஸ்டிக், பழைய இரும்பு ஆகியவற்றைச் சேகரித்து அவற்றை பழைய இரும்புக் கடைகளில் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வசித்து வருகின்றனர்.

முன்னோர்கள் யாரும் படிக்காத நிலையில், இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் பள்ளிகளுக்குச் சென்று மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளனர். ஆனால் சாதிச் சான்றிதழ் இல்லாததால் தொடர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். இங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு 12 ஆம் வகுப்பு முடித்துள்ள விஜயலட்சுமி என்பவர் இங்குள்ள கல்லூரியில் சேர விண்ணப்பித்த நிலையில் சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இது குறித்து விஜயலட்சுமி கூறும்போது, நான் இங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 480 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளேன். தொடர்ந்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாது என்று கூறிவிட்டனர். இதற்கு முன்பும் இது போன்று சாதிச் சான்றிதழ் இல்லாததால் பலர் மேல்நிலைப் படிப்பை முடித்த நிலையில் கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விட்டு விட்டனர். 

மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளதால் படிக்கும் ஆர்வமுள்ள என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. எனவே உடனடியாக எனக்கும், எங்கள் சமூகத்தினருக்கும் காட்டுநாயக்கர் என்பதற்கான சாதிச் சான்றிதழ் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து  கல்லூரிப் படிப்பைத் தொடர உதவ வேண்டும் என்றார்.

சங்கர்

விஜயலட்சுமியின் தந்தை சங்கர் கூறும்போது, ஆழ்வார்குறிச்சியில் எங்கள் தாத்தாவிற்குத் தாத்தா காலம் முதலே நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். நாடோடி சமூகமாக வாழ்ந்த எங்கள் முன்னோர்கள் ஆழ்வார்குறிச்சியில் ஓரிடத்தில் தங்கி வசிக்கத் தொடங்கினர். இங்கு யாசகம் செய்தும், பன்றிகள் வளர்த்தும் வாழ்க்கையை நடத்திய நிலையில், எங்கள் தலைமுறையில் பழைய இரும்பு உள்ளிட்டவற்றைச் சேகரித்து அதில் வரும் வருமனத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனது மகள் விஜயலட்சுமி 12 ஆம் வகுப்பு முடித்து சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. 

முன்னோர்கள் படிப்பறிவில்லாத நிலையில் சாதிச் சான்றிதழ் குறித்து முன்னெடுக்கவில்லை. இதனால் இன்றைய தலைமுறையினரினரின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. இன்றைய தலைமுறையினர் பலர் நன்கு படித்து வரும் நிலையில் எங்கள் சமூகத்தினருக்கு காட்டு நாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பேட்டை, முக்கூடல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களிலும் எங்கள் உறவினர்களுக்கு காட்டு நாயக்கர் என சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வசித்து வருகிறோம். எனவே தென்காசி மாவட்டத்திலும் எங்கள் சமூகத்தினருக்கு காட்டுநாயக்கர் என சாதிச் சான்றிதழ் வழங்கி எங்கள் வாரிசுகளின் வாழ்வாதாரம் உயர அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

பொன்னுச்சாமி

இந்தச் சமூகத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் பொன்னுச்சாமி கூறும்போது, எனது தாத்தா காலத்தில் இருந்து இங்கு வசித்து வருகிறோம். நான் 9 ஆம் வகுப்பு முடித்துள்ளேன். ஆனால் சாதிச் சான்றிதழ் இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் எங்கள் சமூகத்தில் படிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததால் சாதிச் சான்றிதழ் குறித்து யாரும் முயற்சிக்கவில்லை. இன்று இளைய தலைமுறையினர் பலரும் படித்து வரும் நிலையில் சாதிச் சான்று இல்லாமல் தொடர்ந்து உயர்படிப்பிற்குச் செல்ல வழியில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. அரசு இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக காட்டு நாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும் என்றார்.

மேலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசு ஒதுக்கீட்டில் சேர முடியாமல் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சுயநிதிப் பிரிவிலும் சிலர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் அரசுக் கட்டணத்தில் படிப்பதோடு அரசு உதவித் தொகையும் கிடைத்திருக்கும். 

இது குறித்து தென்காசி வட்டாட்சியர் சுப்பையனிடம் கேட்ட போது பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்குவது வருவாய்க் கோட்டாட்சியர் தான். மேலும் இது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வந்துள்ளது. அவர் உரிய வகையில் விசாரணை செய்து சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுப்பார் என்றார். 

மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் உள்ளது அவரிடம் கேளுங்கள் என்றார்.

தொடர்ந்து தென்காசி வருவாய்க் கோட்டாட்சியர் ராமச்சந்திரனைத் தொடர்புகொண்ட போது அவர், ஆழ்வார்குறிச்சிப் பகுதியில் வசிப்பவர்களிடம் அவர்கள் காட்டு நாயக்கர் என்பதற்கான சான்று இல்லை. உரிய சான்று இல்லாமல் சாதிச் சான்று வழங்கக் கூடாது என்று உத்தரவு உள்ளது. மேலும் அவர்களது பூர்வீகம் குறித்தும் தெரியவில்லை. பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் சான்றிதழ் கோருபவர்களின் மூதாதையர் எங்கு வாழ்ந்தார்கள், அவர்களது சமூகப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை குறித்த தெளிவான தகவல்கள் தேவை. ஆழ்வார்குறிச்சியில் வசிப்பவர்களுக்கு அவர்களது மூதாதையர் குறித்த சரியான தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் தாய்வழி உறவினர்களின் சான்றிதழை ஆதாரமாகக் கொண்டும் சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது. எனவே அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க இயலாது என்றார்.

நாடோடிகளாக வாழ்ந்த நிலையில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்தும் உள்ள நிலையில் சாதிச் சான்றிதழ் இல்லாததால் இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி என்பவது கனவாகவே உள்ளது. 

அவர்களது கனவை நனவாக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>