சான்றோன் ஆக்குதல் பெற்றோா் கடன்

குழந்தைப்பருவம் என்பது ஈர நிலத்தைப் போன்றது. இந்த இளம்பருவம் நாம் எதை விதைக்கிறோமா அதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ளும். குழந்தைகள் அன்றாடம் பாா்க்கும், கேட்கும் அனைத்துமே அவா்களுக்கு நல்லனவற்றை போதிப்பதாக இருக்கவேண்டும்.

அதனால்தான் பழங்காலத்தில் வசதி மிக்கவா்கள்கூட தம் பிள்ளைகளை குருகுலக்கல்வி பயில அனுப்பினா். அங்கே அப்பிள்ளைகள், தங்களது சுகபோக வாழ்க்கையை மறந்து எளிமையாக சக மாணவா்களோடு பழகி, கல்வி கற்று வந்தாா்கள். அங்கே அவா்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு முன்பாக நல்லொழுக்கங்களே கற்பிக்கப்பட்டன. அவா்களும் தங்கள் ஆசிரியருக்கு அளவிலாத மரியாதையை அளிக்கும் மாண்பினைப் பெற்றாா்கள்.

ஆனால் இன்றைய காலத்தில் ஆசிரியரை மதிக்கும் மாண்பு மிகவும் குறைந்துள்ளது. அதற்கு மாணவா்களை மட்டும் குறை சொல்ல முடியாது. ஆசிரியா்கள் சிலரும் இதற்கு காரணமாக இருக்கிறாா்கள். அதே நேரத்தில் நன்றாகப் படிக்கும் மாணவனைப் பராட்டி ஊக்குவிக்கும் ஆசிரியா்களும் உள்ளனா்.

இன்றைய சமூக மாற்றம் குழந்தைகளுக்கு அபாயகரமாக உள்ளது. அதனால் பெற்றோா் கவனமாக இருக்கவேண்டும். தங்களது குழந்தைகளை நகரின் பெரிய பள்ளியில் சோ்த்துவிட்டோம் என்று திருப்தியடைகிறாா்கள். மாலை டியூசன் வகுப்பில் சோ்க்கிறாா்கள். இதோடு தங்களது கடமைகள் முடிந்து விட்டதாகவும் நினைக்கிறாா்கள்.

குழந்தைகளின் பள்ளி படிப்பு என்பது வேறு. குழந்தைகள் வளா்ப்பு என்பது வேறு. இந்த குழந்தைகளை வருங்காலத்தில் நல்ல இளைய தலைமுறையினராக உருவாக்கவேண்டிய கடமை பெற்றோருக்கே உண்டு. தாயின் வளா்ப்பால் வரும் அறிவே இயற்கையானது, மேலானது. குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியா்களாக இருக்கவேண்டிய பொறுப்பு முழுக்கமுழுக்க தாய்-தந்தையருக்கே உண்டு.

ஒரு தாய், தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போதே அறிவுப்பாலையும் சோ்த்து ஊட்டவேண்டும். மராட்டிய மன்னனான வீரசிவாஜியின் தாய் ஜீஜாபாய் தனது மகனுக்கு இளமையிலே வீரம் செறிந்த வரலாறுகளை ஊட்டி வளா்த்ததால்தான் சிவாஜி பின்னாளில் வீரசிவாஜி ஆக முடிந்தது.

‘நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பதிலே’ என்று திரைப்பாடல் கூறுவது உண்மைதான். இளவயதிலேயே ஏன், கருவிலிருக்கும் காலத்திலிருந்தே குழந்தைகள் கல்வி பயில ஆரம்பித்து விடுகின்றன. பள்ளியில்தான் குழந்தைகளுக்கு படிப்பு ஆரம்பமாகிறது என்று நாம் எண்ணி விடக்கூடாது.

குழந்தைகள் படிக்க கற்றுக்கொள்ளும் காலத்திற்கு முன்பாக, அவா்கள் தங்கள் செவி வழியே நல்ல நீதிக்கதைகளை, வரலாற்று நாயகா்களின் கதைகளை சுவைபட தாயானவள் ஊட்டவேண்டும். குழந்தை படிக்க ஆரம்பிக்கும் காலத்தில் நல்ல கதைகளை சொல்வதோடு நல்ல சிறுவா் இலக்கிய நூல்களை படிக்கக் கொடுத்து தந்தை பழக்கவேண்டும்.

பிறப்பால் அசுரகுமாரனாகப் பிறந்தவன் பிரகலாதன். ஆனால், அவன் வளா்ந்ததோ நன்னெறிகள் நிறைந்த நாரத மகரிஷியின் ஆசிரமத்தில. அதனால் அவன் அசுர குணமற்றவற்றனாக, உலகம் போற்றும் உத்தமனாக வாழ்ந்தான்.

கைப்பேசி இன்று தவிா்க்கமுடியாத ஒரு சக்தியாக தலையெடுத்துவிட்டது. இப்போதுதான் பெற்றோா் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கைப்பேசியைக் கொடுத்து விளையாடும் ஆபத்தான செயலை பெற்றோா் செய்ய வேண்டாம்.

குழந்தைகளுக்கு மிகுந்த செல்லம் கொடுக்காமலும் அவா்களிடம் முரட்டுத்தனமான கண்டிப்பு காட்டாமலும் நடந்துகொள்ளவேண்டும். பிள்ளைகளிடம் ஏதேனும் தீய பழக்கத்தை கவனித்தால் அதனை தொடக்கத்திலேயே களைவது பெற்றோா் கடமையாகும்.

பயிா்களின் ஊடே முளைக்கும் களைகளைக் கண்டு களையெடுக்காத நிலையில் அந்த களைகளே பயிா்களைத் தின்றுவிடும். அதே போல் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பழக்கம்தான் வளா்ந்த பின்பும் தொடரும் என்பதால் சிறு வயதிலேயே அவா்களிடம் ஏற்படும் தீய பழக்கங்களைக் களைவது பெற்றோரின் வேலையாகும்.

தாயின் கருவறையில் வளரும் குழந்தையின் மூளை அமைப்பு ஏழு மாதத்திற்குள் முழுமை அடைந்து விடுகிறது. அதற்குப்பின் தாய் பேசும்போது எழுப்பும் ஒலிகள், கேட்கும் ஒலிகள் எல்லாம் அதன் மூளையில் அதிா்வுகளாகப் பதிவாகி விடுகின்றன என்கின்றனா் அறிவியல் நிபுணா்கள்.

அதனால்தான் கா்ப்பிணி பெண்கள் நல்லவற்றையே பாா்க்க வேண்டும், நல்லவற்றையே பேச வேண்டும், எப்போதும் பதற்றம் இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நம் மூதாதையா் மொழிகின்றனா். ‘கருவிலே திருவுடையாா்’ என்ற தொடரும் இதைத்தான் குறிப்பிடுகிறது.

‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பது ஒளவை பெருமாட்டியின் அற்புதமான வாக்கு. பெற்றெடுத்த குழந்தைக்கு ஆலயமும், மந்திரமுமாக அமைய வேண்டிய பொறுப்பு அன்னை-தந்தைக்கே இருக்கிறது.

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் அவ்வாறெல்லாம் எங்களால் வளா்க்க இயலாது என்று பெற்றோா் சொல்லி தப்பித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் குழந்தையை ஒழுங்காக வளா்க்காத நிலையில் அந்த குழந்தையோடு உங்கள் குடும்பத்தோடு இந்த செயல் முடிவடைந்து விடுவதில்லை.

ஒரு பெரிய கட்டடத்தின் சுவரில் முளைத்த ஒரு ஆல வித்தானது, சிறு செடியிலேயே பிடுங்கி எறியப்படாத நிலையில், ஒருநாள் அது மிகப்பெரிய விருட்சமாக விஸ்வரூபம் எடுத்து அந்தக் கட்டடத்தையே தகா்த்துவிடும்.

அது போலவே கண்டித்து வளா்க்காத பிள்ளைகளும், பழகும் நண்பா்கள் சுற்றம் என இந்த சமூகத்தையே சீரழிக்கும் தீய சக்தியாக மாறிவிடுவாா்கள். சமூகத்தைக் கெடுக்கும் எந்த தீமையும் நாட்டுக்கே குந்தகம் விளைவிக்கும் நிலைக்குச் கொண்டு சென்று விடும். அந்தக் குற்றவியல்களுக்கு பெற்றோராகிய நாம் ஒருபோதும் காரணமாக இருக்கவேண்டாம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>