சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க அம்மாவின் கைமணத்தில் டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி!

இன்று அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் விதம் விதமாக ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் பலவகையான சத்துமாவு பாக்கெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்களும், நானும் கூட வாங்கிப் பயன்படுத்தி இருப்போம். யோசித்துப் பாருங்கள் அவை எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருந்தன என்று? கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டிலேயே இத்தனை பலன்கள் இருக்கையில் அதை நாமே நம் கைகளால் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிந்தால் அதில் எத்தனை லாபமிருக்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். கடைகளில் 1கிலோ சத்து மாவு 350 ரூபாய்க்கும் மேல் விலை. அதையே வீட்டில் தயாரித்தால் செலவு பாதிக்குப் பாதி மிச்சமாகும். பொருட்களையும் தரமானவையாக தேர்ந்தெடுத்து வாங்கிக் கழிவு நீக்கிச் சுத்தமாக்கி சேர்த்து அரைத்த திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

 1. கம்பு : 1 கிலோ
 2. சோளம்: 1 கிலோ
 3. கேழ்வரகு: 1 கிலோ
 4. திணை அரிசி: 1/2 கிலோ
 5. கருப்பு உளுந்து : 1/2 கிலோ
 6. பச்சைப் பயறு: 1/2 கிலோ
 7. சம்பா கோதுமை: 1/2 கிலோ
 8. பொட்டுக்கடலை: 1/2 கிலோ
 9. அவல்: 1/2 கிலோ
 10. நிலக்கடலை: 1/4 கிலோ
 11. ஜவ்வரசி: 1/4 கிலோ
 12. பார்லி: 1/4 கிலோ
 13. மக்காச்சோளம்: 1/4 கிலோ
 14. ஆளி விதை: 1/4 கிலோ
 15. கொள்ளு: 50 கிராம்
 16. பாதாம்: 50 கிராம்
 17. முந்திரி: 50 கிராம்
 18. பிஸ்தா: 50 கிராம்
 19. சாரப்பருப்பு: 50 கிராம்
 20. வெள்ளை எள்: 25 கிராம்
 21. ஓமம்: 25 கிராம்
 22. சுக்கு: 25 கிராம்
 23. கச கசா: 25 கிராம்
 24. ஜாதிக்காய்: 1
 25. குங்குமப்பூ: 8 முதல் 10 இழைகள்

செய்முறை:

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் தரமாக எங்கு கிடைக்கும் என்று தேடி வாங்கி வைத்துக் கொண்டு நல்ல வெயில் நேரமாகப் பார்த்து சற்று நேரம் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஈரப்பதம் இன்றி பொருட்கள் வறுப்பதற்குத் தோதாக அமையும். அடுப்பில் வாணலியை ஏற்றி மிதமான தீயில் முதலில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை வறுக்க வேண்டும். இறக்குவதற்கான அறிகுறி இடு பொருட்கள் பட படவென வெடிக்கும் பக்குவத்தில் இருந்தால் போதும். நிலக்கடலை, பொட்டுக்கடலை, அவல் எல்லாம் வெடிக்காது அவை நிறம் மாறினாலே போதும் இறக்கி விடலாம். பார்லியும், ஜவ்வரசியும் கூட இப்படித்தான். ஆளி விதை, வெள்ளை எள், கச கசா மூன்றையும் வறுக்கும் போது கவனம் தேவை கருக விடாமல் மெல்லிய தீயில் வறுக்க வேண்டும். பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கும் அதே தான். கருக விடாமல் வறுத்து எடுக்கவேண்டும். சுக்கை வறுத்த பின் மருந்தரைக்கும் கல் அல்லது பூரிக்கட்டையால் இடித்து நசுக்கி வைத்துக் கொள்வது நல்லது. ஜாதிக்காயை உடைத்து ஓடு நீக்கி உள்ளிருக்கும் சக்கையை நசுக்கிய பின் வறுக்க வேண்டும். கடைசியாக குங்குமப்பூவை வறுக்கத் தேவை இல்லை அப்படியே சேர்க்கலாம். 

மேற்கண்ட பொருட்களில் கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்பு உளுந்து, பச்சைப்பயறை நன்றாக அலசி வடிகட்டி ஈரத்துணியில் முளைகட்டி மறுநாள் உலர வைத்து சத்துமாவு அரைப்பது ஒரு வகை. அது மிகவும் சத்து நிறைந்தது. ஆயினும் முளை கட்ட நேரமில்லாதவர்கள் அப்படியே வறுத்தும் அரைக்கலாம். எப்படியானாலும் சத்துமாவின் சத்துக்கள் முழுமையாகவே கிடைக்கும்.

இடுபொருட்களின் அளவு 1 அல்லது 2 கிலோக்களுக்கு உட்பட்டிருந்தால் வீட்டு மிக்ஸியிலேயே அரைத்துக் கொள்ளலாம். 2 கிலோக்களுக்கு மேல் ஆகும் போது மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்வது நல்லது. சத்து மாவு அரைத்து வந்ததும் சூட்டோடு சூடாக அதை ஆற வைத்து சலித்து காற்றுப்புகாத பிளாஸ்டிக் வாளிகளிலோ அல்லது பிளாஸ்டிக் ஜார்களிலோ எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஈரக்காற்று பட்டால் மாவில் பூஞ்சை பாதிப்பு வந்தாலும் வரும். எனவே பத்திரமாக எடுத்து வைத்துப் பயன்படுத்துவது முக்கியம்.

ஒருமுறைக்கு 5 கிலோ அளவுக்கு அரைத்து வைத்துக் கொண்டோமென்றால் தினசரி பயன்படுத்தினாலும் கூட குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு மேல் வரும்.

சத்து மாவுக்கஞ்சி தயாரிக்க…

மூன்று அல்லது நான்கு பேருக்கு எனில் அரைத்து வைத்துள்ள சத்துமாவில் 4 டீஸ்பூன் எடுத்து கால் அல்லது அரை டம்ளர் தண்ணீர் கலந்து கட்டி தட்டாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் அல்லது பாலுடன் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரை கலந்து காய்ச்ச வேண்டும். மாவு நன்கு கொதித்து வரும் போது இறக்கி ஆறவைத்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்கு சாப்பிடத் தரலாம். பெரியவர்களும் சாப்பிடலாம். சத்துமாவைக் கஞ்சியாகச் சாப்பிடுவதா அல்லது நீர்க்கக் கரைத்து குடிப்பதா என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. 

சத்துமாவின் ஆரோக்ய பலன்கள்:

 • காலை நேரத்தில் காபி, டீ அருந்துவதைத் தவிர்த்து சத்துமாவு அருந்தினால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். சோர்வைத் தவிர்க்கலாம்.
 • அனைத்து விதமான சத்து நிறைந்த பொருட்களும் சேர்க்கப்பட்டிருப்பதால் ஸ்டாமினா அதிகரிக்கும், உற்சாகம் குறையாமல் வேலைகளைத் தொடரலாம்.
 • ரத்த ஓட்டம் சீராக இருக்கும். 
 • இடுபொருட்கள்  ஆர்கானிக் பொருட்களாக தேர்ந்தெடுத்துச் சேர்த்தோமென்றால் அனாவசியமான பக்கவிளைவுகள் இருக்காது.

<!–

–>