சாலையில் பயமின்றி வாகனம் ஓட்டிச் செல்ல முடிகிறதா? இந்த ரூல் பிரேக்கர்களை என்ன செய்வது? 

என்னிடம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. நான் வெகு சுமாரான வாகன ஓட்டி. சுமார் என்றால் ரூல்ஸ்படி வாகனம் ஓட்டத் தெரியாதவன் என்று நினைத்து விடாதீர்கள். அழகாக எட்டுப் போட்டுக் காட்டி, பரீட்சை எல்லாம் எழுதி பாஸ் ஆகி லைசன்ஸ் வாங்கி இருக்கிறேனாக்கும். எனக்கு நமது தமிழ்நாட்டுச் சாலைகளில் என்னுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல நன்றாகவே தெரியும். மிதமான வேகத்தில் எங்கெங்கே இண்டிகேட்டர் பயன்படுத்த வேண்டும், வாகன விளக்குகளை எங்கே, எப்போது ஆன்/ஆஃப் செய்ய வேண்டும்? எங்கே பிரேக் அழுத்த வேண்டும்? ஸ்பீட் பிரேக்கர் வந்தால் வாகனத்தை எப்படிக் கையாள வேண்டும். எல்லாமே எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நம்மூரில் சாலைகள்… ஈ, காக்கை இன்றி வெறிச்சோடிப் போயிருந்தாலும் கூட நான் 40 க்கு மேல் செல்வதில்லை என எனக்கு நானே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம் இந்த ரூல் பிரேக்கர்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஆளரவமற்ற சாலைகளில், தெருமுக்குகளில் இருந்தெல்லாம் திடீரென எப்படி ஓசையின்றி முளைத்து வந்து வண்டியை இடித்துத் தள்ளி விட்டுப் பறக்கிறார்கள்? அவர்கள் ஏன் சாலை விதிகளை மதிப்பதில்லை என்றெல்லாம் ஒரு சீக்ரெட் மிஷன் வைத்துக் கண்டுபிடித்து தொலைக்க வேண்டும். அவர்களால் தான் ஒழுங்காக லைசன்ஸ் வாங்கி வண்டி, வாகனங்களை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட பீதியடைந்து பயந்து பயந்து வண்டியோட்ட வேண்டியதாயிருக்கிறது.

நேற்றைக்குப் பாருங்கள். சிக்னல் விழுவதற்காக காத்துக் கொண்டிருந்தோம். இருந்தோம் என்றால் என்னைப் போல முறையாக சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று திட சங்கல்பம் செய்து கொண்ட பலர் தேமேவென பச்சை விளக்குக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதெல்லாம் அம்மஞ்சல்லிக்குத் தேறாது, சாலைவிதிகளாவது, சல்லாத்துணியாவது? என்று யோசித்த சில பரப்பிரும்மங்கள் ஆக்ஸிலேட்டரை முறுக்கோ முறுக்கென்று முறுக்கிச் சிட்டுக்குருவி போல விருட்டெனப் பறந்து விட்டார்கள். பார்த்துக் கொண்டிருந்த டிராபிக் போலீஸ்கார்  ‘இதுவும் கடந்து போகும்’ என்று எதுவுமே நடக்காதது போல, தான் எதையுமே கவனிக்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டார். இப்போது எங்களைப் போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும்? 

ஒன்வேயில் எதிர்ப்பக்கமாக வண்டியோட்டிக் கொண்டு வருபவர்களைப் பார்க்கும் போது, எல் கே ஜி பிள்ளைகளைப் போல ‘ரூல் பிரேக்கர், டவுன், டவுன்’ என்று கத்த வேண்டும் போலிருக்கிறது. அப்படி வரக்கூடாது என்று தெரிந்தும் செளகர்யத்துக்காக அப்படிச் செய்பவர்கள் மீது கோபம் தலைக்கேறுகிறது. இவர்கள் பாட்டுக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வண்டியோட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள். இவர்களிடம் மிரண்டு இடிபட்டுச் சாய்பவர்களுக்குத் தான் எல்லாச் சேதங்களும்.

நடைபாதைகள் பாதசாரிகள் பயமின்றி நடப்பதற்குத் தான். ஆனால், இந்த ரூல் பிரேக்கர்களின் முதல் வேலையே… சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக நடைபாதையில் வண்டியை விட்டு விரட்டிச் சென்று சகலரையும் அரள வைப்பதும் இடைஞ்சல் செய்வதுமே!

இவர்களெல்லாம் சொல்லித் திருந்தக் கூடியவர்கள் அல்ல. ஃபைன் விதிக்கப்பட்டாலும் மீண்டும் அதே தவறைச் செய்து விட்டு ஃபைன் கட்டத் தயங்காதவர்கள். இவர்களை என்ன தான் செய்வது?

கன்னடத்தில் ‘யூ டர்ன்’ என்றொரு திரில்லர் படம் வந்தது. தமிழிலும் சமந்தா நடிப்பில் ரீமேக் செய்தார்கள். அந்தப் படத்தில் வருவதைப் போல சாலை விதிகளைப் பின்பற்றத் தவறியதால் நேர்ந்த விபத்துகளில் மரணித்தவர்கள் எல்லோரும் பேய்களாகி வந்து பாடம் கற்றுக் கொடுத்தால் தான் இவர்களைப் போன்றவர்கள் திருந்துவார்களோ என்னவோ?!

மித வேகம் நன்று என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும்… ஆனால் இந்த ரூல் பிரேக்கர்களுக்கு எப்போதும் தெரிவதில்லை.

இந்தியச் சாலைகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், நம்மூரில் பள்ளிச் சீருடையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் கண்ணில் படத்தான் செய்கிறார்கள்… (மேல்நிலைப்பள்ளி என்றே வைத்துக் கொண்டாலும் அவர்கள் 18 தாண்டியிருப்பார்களா என்பது அரிது தானே) அரும்பு மீசை கூட முளைக்காத சிறுவர்கள் எல்லாம் கூட விடுமுறை நாட்களில் அதிவேகமாக ட்ரிபிள்ஸ் போவதை முகப்பேர், நொளம்பூர் வளாகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களுக்கு புத்திமதி சொன்னால் நம்மை வேற்றுக்கிரக ஜந்துக்களைப் போலப் பார்த்து… ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீங்க ஷட் அப் பண்ணுங்க’ எனும் ரீதியில் கடக்கிறார்கள்.

இவர்கள் இப்படி என்றால் இந்த குட்டி யானை லாரிக்காரர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என்பதால் நொளம்பூர் மாந்தோப்பு சாலைப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதற்கென்று அவர்கள் ஒரு தடுப்பு செக்போஸ்ட் வைத்திருக்கிறார்கள். அந்த மட்டத்தை விட உயரமான வாகனங்கள் அங்கே கடந்து செல்ல முடியாது. இது தெரிந்திருந்தும் பல பெரிய லாரிகள் மற்றும் குட்டியானைக்காரர்கள் அந்த வழியாக வந்து மேலே செல்ல முடியாது தடுத்து நிறுத்தப்பட்டு அடிக்கடி அங்கே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அந்தப் பக்கமாகச் செல்பவர்களின் பிராணனை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிரதான சாலைகளில் இருந்து பிரிந்து செல்லும் சாலைகளில் இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு வலது, இடது பக்கம் திரும்ப முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சில நேரங்களில் சாலையில் சடுகுடு ஆட வேண்டியதாகி விடுகிறது. ஏனெனில் பிரதான சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் இண்டிகேட்டரை எல்லாம் மதிப்பதே இல்லை. நான் முதலில் போய் விடுகிறேன், அப்புறம் நீ இடமோ, வலமோ போய்த்தொலை என்பதாகத்தான் இருக்கிறது அவர்களது மனநிலை.

சில நாட்களுக்கு முன்பு வாவின் சிக்னலில் காத்திருக்கும் போது. ஒரு கல்லூரிப் பெண் தன், தந்தையிடம், அப்பா நான் இனிமே காலேஜுக்கு டூவிலர்லயே போய்க்கிறேனே? என்று கேட்டுக் கொண்டிருந்த போது அவளது அப்பாவாகப் பட்டவர் சொன்ன பதில்;

‘சென்னையில ரோட் சென்ஸ் இல்லாம வண்டி எடுத்துட்டு ரோட்ல இறங்கறது தற்கொலைக்குச் சமம்’ நீ இன்னும் நல்லா ட்ரைவ் பண்ணக் கத்துக்கனும். எப்போ பயமில்லாம வண்டி ஓட்டறயோ அன்னைக்குப் பார்க்கலாம். என்றார்.

‘அலை எப்ப ஓயும் கடல்ல எப்ப குளிக்கலாம்’ கதை தான். நம்மூர் சாலையில் பயமில்லாமல் வண்டி ஓட்டுவதெல்லாம் நடக்கிற காரியமா?

முதலில் இந்த ரூல் பிரேக்கர்கள் திருந்தினால் அல்லவா அதைப்பற்றியெல்லாம் நாம் யோசிக்க முடியும்.

நாம் முறையாகத்தான் வாகனங்களைக் கையாள்கிறோம், பயன்படுத்துகிறோம். நம் எதிரில், வலப்புறத்தில், இடப்புறத்தில், பின்னால் வாகனங்களில் விரைபவர்களும் கூட அப்படியே இருக்க வேண்டுமே!

அவர்களுக்கு அவர்களது உயிர் வெல்லக்கட்டி இல்லையோ என்னவோ?!

அதனால் தான் அப்படிப் பட்டவர்களைக் காணும் போது சித்திர குப்தனின் எண்ணெய்ச்சட்டி நினைவுக்கு வருகிறது. 

எண்ணெய்ச்சட்டியில் தள்ளி வறுத்தால் தான் இவர்கள் திருந்துவார்களோ?!

<!–

–>