சிஎஸ்கேவுக்கு சஞ்சு சாம்சன் இல்லை: கேப்டனாக மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் ராஜஸ்தான்!

 

சிஎஸ்கே அணிக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன. 

27 வயது சஞ்சு சாம்சன், 2021 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகப் பணியாற்றினார். 2018-ல் ரூ. 8 கோடிக்கு சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. இந்த வருடப் போட்டியில் ராஜஸ்தானால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாமல் போனாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 484 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை விடுவதாக இல்லை. அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கும் சஞ்சு சாம்சனை கேப்டனாகத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. ரூ. 14 கோடிக்கு சஞ்சு சாம்சனும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் இந்த வாரம் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. பட்லர், ஆர்ச்சர், லிவிங்ஸ்டன், ஜெயிஸ்வால் ஆகிய வீரர்களில் இருந்து மூவரை ராஜஸ்தான் அணி தேர்வு செய்யவுள்ளது. 

2022 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ராஜஸ்தான் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>