'சிட்னி போராட்டம் மறந்துவிட்டதா?': இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விஹாரி நீக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹனுமா விஹாரிக்கு இடமில்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன. 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். விஹாரி, ஷர்துல் தாக்குருக்கு இந்திய அணியில் இடமில்லை. 

ரோஹித் சர்மாவும் முதல் டெஸ்டில் விராட் கோலியும் இல்லாத நிலையில் இந்திய அணியில் விஹாரி நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு காரணமும் இன்றி விஹாரி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பதிலாக, தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது. நவம்பர் 23-ல் தொடர் தொடங்குகிறது.

விஹாரி கடைசியாக விளையாடிய 2001 ஜனவரி சிட்னி டெஸ்டில் காலில் காயம் ஏற்பட்டபோதும் பவுன்சர் பந்துகளை உடம்பில் தாங்கிக்கொண்டு அஸ்வினுடன் இணைந்து கடுமையான போராடி டெஸ்டை டிரா செய்து கொடுத்தார். 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்தார். காயத்துடன் 40 ஓவர்கள் வரை விளையாடி அணியைக் காப்பாற்றினார். எனினும் அந்த டெஸ்டுக்குப் பிறகு விஹாரி வேறெந்த டெஸ்டுக்கும் தேர்வாகவில்லை. இப்போது கோலி, ரோஹித் அணியில் இல்லாதபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சிட்னி போராட்டத்தை இந்திய அணி நிர்வாகம் மறந்துவிட்டதா எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

28 வயது விஹாரி, இந்திய அணிக்காக 12 டெஸ்டுகளில் விளையாடி 1 சதம், 4 அரை சதத்துடன் 624 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி – 32.84

இந்திய டெஸ்ட் அணி

ரஹானே (முதல் டெஸ்டுக்கு கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா  (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி (2-வது டெஸ்டில் விளையாடி அணிக்குத் தலைமை தாங்குவார்). 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>