சிலம்பம், யோகா, தமிழ் நூல்கள் என பன்முகத்திறன் கொண்ட சாதனை சிறுவன்!

பெரம்பலூர்: தேசத் தலைவர்கள், வரலாறு, 100 சங்கத் தமிழ் நூல்கள் மற்றும் சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும் பாடாலூரைச் சேர்ந்த சிறுவன் ந. தவசுதன் உலக சாதனை படைத்துள்ளார்.  

பட்டப்படிப்பு படித்தவர்களும், ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தவர்கள் மட்டும்தான் சாதிக்க முடியும் என்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த அறிவுத்தளத்தை விரிவுபடுத்தும் அனைவரும் சாதனையாளர்களாக உருவாகி சரித்திரம் படைக்க முடியும் என்பதை பல இளைஞர்கள் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்-பிரியா தம்பதியினரின் மகன் தவசுதன் (7). அங்குள்ள அம்பாள் மெட்ரிக் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், 100 சங்கத் தமிழ் இலக்கியத்தின் நூல் ஆசிரியர், சாலை இளந்திரையனின் நிற்க நேரமில்லை, மருதகாசியின் ஏர்முனைக்கு நேர், கலைஞர் கருணாநிதியின் புறநானூற்று தாய், முடியரசனின் யார் கவிஞர், வாணிதாசனின் யார் கவிஞர், வைரமுத்துவின் அறிவில் ஐந்து பெரியதா- ஆறு பெரியதா, பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும், அறிஞர் அண்ணாவின் மனிதன், தாராபாரதியின் திண்ணையை இடித்து தெருவாக்கு, கவிச்சுடர் கவிதைப் பித்தனின் தளபதி ஆனது எப்படி, பாரதிதாசனின் சாய்ந்த தராசு, ஔவையாரின் ஆத்திச்சூடி, திருமூலரின் திருமந்திரம், கீதாச்சாரம், 50 தேசத் தலைவர்களின் பெயர், வரலாறு, தமிழக அமைச்சர்களின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் கூறுகிறார்.

மேலும், தண்ணீரில் மிதக்கும் ஜலசாசனம், குமுகாசனம், சட்டுராங்காசனம், நாவ்காசனா, தனுராசனா, பத்மாசனம், விரிஷாசனா உள்பட 26 வகையான யோகாசனம் ஆகியவை 3 நிமிடத்தில் செய்வது மாணவனின் தனிச் சிறப்பாகும்.

இதேபோல, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இரட்டை சிலம்பாட்டம், இரட்டைச் சுருள் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவன் தவசுதன் தனித்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதையறிந்த பள்ளி நிர்வாகம், குழந்தைகள், சிறுவர்களுக்கு அபார ஞாபகம் மற்றும் மனப்பாட திறனுக்காக விருது வழங்கும் சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினருக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் பள்ளியில் அந்த நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் தலைமையில், சிறுவனின் நினைவாற்றல் மற்றும் சிலம்பம், சுருள்வாள் உள்ளிட்ட விளையாட்டுகளை உறுதிப்படுத்தி சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்கினர்.

இச்சிறுவனின் திறமையைப் பாராட்டி, விரிக்க்ஷா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர் பாராட்டுச் சான்றிதளும், பக்கங்களும் வழங்கியுள்ளனர். மாணவன் தவசுதனின் திறமையைப் பாராட்டி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ம. பிரபாகரன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர்.

இதேபோல, தவசுதனின் 3 வயதாகும் சகோதரன் மகிழன் பள்ளிப் படிப்பை தொடங்காத நிலையில் புறநானூறு, திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் கவிதைகள், தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றை மனப்பாடமாக கூறி வருவதோடு, சிலம்பம் சுற்றுவது, நீச்சல் அடிப்பது என பல்வேறு திமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இச்சிறுவனை பாராட்டிய விரிக்க்ஷா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கும் திறனும், விடா முயற்சியும் இருந்தால், வெற்றி எட்டும் உயரத்தில்தான் என்பதை உலகுக்கு உணர்த்தும் இச்சிறுவர்களின் சாதனைகள், இதர மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>