சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘சீரகம்’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? 

சமைலயறையில் ‘சீரகம்’ என்ற மருத்துவ குணமுள்ள மூலிகைச் சரக்கினை பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு தமிழர்கள் உணவு முறையில் மட்டுமல்லாது, ஆசிய நாடு முழுவதும் அனைவரின் வீடுகளிலும், அனைத்து உணவகங்களிலும் அதிகம் பயன்படுத்தும் மூலிகைச் சரக்குகளில் முக்கிய பங்காற்றுவது இந்த ‘சீரகம்’. 

‘சீரகம்’ என்ற சொல்லுக்கு பெயர் விளக்கம் பலரும் அறிவர். சீர் +அகம்=சீரகம், உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் அனைத்தையும் போக்கும், அதாவது சீர் செய்யும் தன்மை உடையது என்பது தான். இது தவிர, ‘பித்த நாசினி’, ‘போசன குடாரி’ போன்ற பெயர்களும் உண்டு. அதிகரித்த பித்தத்தை குறைப்பதற்கு சீரக கஷாயம் குடிக்காத நபர்களே இல்லை எனலாம். அதனால் தான் ‘பித்த நாசினி’ என்ற பெயரும் வந்தது போல. 

உண்ணும் உணவை, போஜனத்தை விரைவில் செரிக்கும் தன்மை உடையதால் ‘போசன குடாரி’ என்ற பெயரும் உள்ளது. செரிமான வியாதிகளுக்கு பயன்படும் இந்த சீரகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எவ்வாறு உதவும்? என்பது பலருக்கும் புரியாத புதிராக தோன்றும்.

கொவிட் நோய்த்தொற்று தொடங்கிய காலம் முதலே ‘சித்த மருத்துவம் தான் துணை’ என்று பலரும் நிலவேம்பு குடிநீரும், கபசுர குடிநீரும் குடித்து சளைத்து போய் இருப்பார்கள். இவை இரண்டிலுமே சுக்கு, மிளகு போன்ற உஷ்ண வீரியமுள்ள மூலிகை சரக்குகள் சேர்வதால் பலருக்கும் கேஸ்டெரைடிஸ் போன்று மேல் வயிறு எரிச்சல், முக்கியமாக வயிற்றுப்புண் நோயாளிகளுக்கு ஏற்பட்டு இருக்கும். உடனே நாட்டு வைத்தியம் என்றாலே சூடு தான்-பா என்று உச்சு கொட்டும் பலரும் சித்த மருத்துவரின் ஆலோசனையை கேட்பதில்லை. 

தேகிகளுக்கு(உடலுக்கு) ஏற்ப மருந்துகளை மாற்றி பிரயோகிப்பது சித்த மருத்துவனின் தனிச்சிறப்பு. பித்த தேகிகளுக்கும், வயிறு புண் போன்ற நோய்களால் அவதியுறும் பலருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இன்னும் பல மருந்துகள் உள்ளன. உதாரணமாக ஆடாதோடை குடிநீர் எடுத்தல் அவர்களுக்கு பக்க விளைவுகள் இன்றி நன்மை தரும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிக எளிமையான, சித்த மருத்துவ மூலிகை ‘சீரகம்’ தான். 

எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சீரகம்

‘வாயுவோடு நாசி நோய் வன்பித்தம் சேராது , காயம் நெகிழாது கண் குளிரும்’ என்ற அகத்தியர் குணவாகடப் பாடல் வரிகளால் இதனை அறியலாம். பாடலில் ‘காயம் நெகிழாது’ என்று அகத்தியர் குறிப்பிட்டுள்ளது நோய் எதிர்ப்புசக்தியை தான். 

அதாவது சரீரத்திற்கு வன்மை (இம்முனிட்டி) தரும் என்ற பொருள். ‘வன்பித்தம் சேராது’ என்று குறிப்பிட்டமையால் இது கல்லீரலுக்கு நன்மை செய்யும் என்பது விளங்கும்.

தொலைபேசி, அலைபேசி ஆன பின்பு பலரின் கண்களுக்கும் தொல்லையை தரும்படியாக வறண்ட கண்கள், கண்ணில் நீர் ஒழுகல் போன்ற உஷ்ணத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க தினமும் சீரகத்தை உணவில் சேர்த்து வந்தாலே போதும். கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

அகத்தை சீர் செய்யும் சீரகம் பெயருக்கு ஏற்றாற் போல், பல்வேறு மருத்துவ குணங்களையும் வாய்ந்தது. அதன் மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள சபோனின், டேனின், பிளவனாய்டுகள், அல்கலாய்டுகள், கோமாரின், ஆந்த்ரோகுயினோன் ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன. 

முக்கியமாக அதில் உள்ள ‘குமினால்டிஹைட்’ எனும் வேதிப்பொருள் மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றது. இது ரத்த அழுத்தத்தை குறைப்பதாக, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாக, வலி நிவாரணியாக, உடலில் உள்ள வீக்கங்களை குறைப்பதாகவும் உள்ளது. 

சீரகத்தை வறுக்கும் போதும், நீரில் காய்ச்சும் போதும் உருவாகும் தனித்துவமிக்க மணத்திற்கு அதில் உள்ள நறுமண எண்ணெய்களே காரணம். கிட்டத்தட்ட 49 வகையான நறுமண எண்ணெய் வேதிப்பொருள்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. இவை நறுமணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவ குணத்திற்கும் தான் என்பதும் தெரிகிறது. இதனை பொன்னிறமாக வறுத்து நீரில் போட்டு காய்ச்சும் போது நீரும் பொன்னிறமாகும். அதற்க்கு காரணமான இயற்கை நிறமிப்பொருள் புற்றுநோயையும் தடுக்கும் வல்லமை உடையது.

சீரகத்தில் இயற்கையாகவே உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். அத்துடன் வைட்டமின் பி1- என்ற தையமின், நியாசின், வைட்டமின்-கே, வைட்டமின்-ஈ, போலிக் ஆசிட் போன்ற முக்கிய வைட்டமின் சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், செம்பு சத்து, செலினியம் , பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் இதில் உள்ளதால் உடலில் உள்ள செல்களுக்கு பலமும், போஷாக்கும் கிடைக்கிறது. 

சீரகத்துடன் லவங்கப்பட்டை, மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாக்கி குடிக்க ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். மேலும் இதனால் ரத்தத்தில் கொலஸ்டீரால் அளவும் குறைவதுடன் இருதய ரத்த குழாய்களில் ‘த்ரோம்போசிஸ்’ எனும் அடைப்பு உருவாவதை தடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்க சீரகத்தை எலுமிச்சை பழ சாற்றில் ஊற வைத்து மருந்தாக்கி பயன்படுத்த நன்மை தரும். நாட்பட்ட கல்லீரல் நோய்களில் அவதிப்படுவோர் சீரகத்தை கரிசாலை சாற்றில் ஊற வைத்து மருந்தாக்கி பயன்படுத்தலாம். 

அடிக்கடி வயிற்றுபுண்ணால் அவதிப்படும் பலரும், சீரகத்துடன், ஏலக்காய் சேர்த்து பாலில் காய்ச்சி குடித்து வர புண் ஆறும். சிறுநீர் எரிச்சலுக்கும் இது நல்ல பலன் தரும். செரிமானத் தொல்லை நீங்கும். 

சீரகத்தில் ‘பைட்டோஈஸ்ட்ரோஜன்’ என்ற வேதிப்பொருள் உள்ளதால் பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய்க்கு பின் ஏற்படும் ஆஸ்டீயோபோரோசிஸ் எனும் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும். உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் க்ரீன் டீ-க்கு மாற்றாக சீரக கஷாயத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டாலும் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். வயிற்று வலி, வயிற்று பொருமல், மாதவிடாய் வலி இவற்றிற்கு சீரகத்துடன் ஒமம்  சேர்த்து வறுத்து கஷாயமிட்டு குடிக்க நல்ல பலன் தரும்.

இத்தனை மருத்துவ மகத்துவம் வாய்ந்த சீரகத்தை மேற்குறிப்பிட்ட எந்த முறையிலேனும் பயன்படுத்த தொடங்கினால், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை நம் உடலை நாட விடாமல் தடுத்து, ஆயுள்காலத்தை நீட்டும். இது வீட்டு வைத்தியம் மட்டுமல்ல, நம் நாட்டு வைத்தியம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி – drthillai.mdsiddha@gmail.com

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>