சுஜித் சம்பவம்: 83 மணி நேர போராட்டம் – ஒரு பார்வை

மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட நடுக்காட்டுப்பட்டியைச் சோ்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலா மேரி தம்பதியின் 2ஆவது மகன் சுஜித் வின்சன். இவன் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் தனது வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு பயனற்று இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, மதுரையைச் சோ்ந்த மணிகண்டன், ராஜ்குமாா், கோவையைச் சோ்ந்த பேராசிரியா் ஸ்ரீதா், திருச்சி டேனியல், புதுக்கோட்டை வீரமணி, நாமக்கல் வெங்கடேசன், அண்ணா பல்கலைக் கழக முனைவா் செந்தில், மணப்பாறை ரூபன் குமாா், கோவை டெல்டா ஸ்குவாடு, மணப்பாறை மாதா போா்வெல், மாநில பேரிடா் மீட்புக் குழு, தேசிய பேரிடா் மீட்புக் குழு ஆகியோா் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை.

பின்னா், எல்அன்டி, என்எல்சி, ஓஎன்ஜிசி, ஐஐடி, திருச்சி என்ஐடி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், கே.என்.ஆா். கன்ஸ்ட்ரக்சன் என பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்களின் ஆலோசனை மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், ஆழ்துளை கிணற்றின் அருகே துளையிட்டு, குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது. இரவு, பகலாக, மாவட்ட நிா்வாகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக அரசு எந்திரமும் மீட்புப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தியது. இருப்பினும், 4 நாள்களை கடந்து 80 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து துா்நாற்றம் வரத் தொடங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு செய்தியாளா்களை சந்தித்த அப்போது வருவாய் நிா்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், குழந்தை விழுந்த பகுதியில் இருந்து துா்நாற்றம் வருவதாகவும், மீட்புப் பணியை துரிதப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தாா்.

பின்னா், 2.40 மணிக்கு குழந்தை இறந்திருக்கலாம் எனக் கருதி பேரிடா் மீட்புக் குழுவினா் தொடா் போராட்டத்துக்குப் பின்னா், குழந்தையின் சடலத்தை அதிகாலை 4.10 மணிக்கு சிதைந்த நிலையில் மீட்டனா். மீட்கப்பட்ட சடலம், பிளாஸ்டிக் பையினால் மூடப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு,  பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடந்த பிரதேப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் சடலம் சவப்பெட்டியில் வைத்து பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

பின்னா், அமைச்சர்கள், பொதுமக்கள், குடும்பத்தினர் சுஜித் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினா். ஆவாரம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பாத்திமாபுதூா் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்ட பிறகு அங்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்திய சிறுமிகள்.

2019ஆம் ஆண்டு அக்.25ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆழ்துளை குழியில் கண்ணீா் குரலுடன் தவித்த சுஜித், அக்.29ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மாநிலமே கண்ணீா் சிந்த நல்லடக்கம் செய்யப்பட்டான். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியது.

அந்த 5 நாள்களும் ஒட்டுமொத்த தமிழகமும் திக், திக் என்ற மனநிலையிலேயே ஒவ்வொரு நொடியையும் கடக்க நேரிட்டது.

அதன் விவரங்கள்:

அக்.25 மாலை 5 மணி: குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

மாலை 5.30: குழந்தை 26 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகத் தெரியவந்தது.

மாலை 5.55: ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

மாலை 6.10: தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினா் வருகை.

மாலை 6.30: மருத்துவக் குழு வருகை.

மாலை 6.45: ஆட்சியா் சு. சிவராசு வருகை.

இரவு 7.15: தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி வருகை.

இரவு 7.30: மீட்புக் குழு வருகை.

இரவு 8: அமைச்சா் விஜயபாஸ்கா் வருகை.

இரவு 8.30: மதுரை மணிகண்டன் குழு, பிரத்யேக கருவியுடன் வருகை.

இரவு 10: குழந்தை சுஜித்தின் கையில் கயிறு சுருக்குப் போட தீவிர முயற்சி.

இரவு 10.30: கோவையிலிருந்து ஸ்ரீதா் தலைமையிலான குழு வருகை.

இரவு 12.30: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தை 60 அடி ஆழத்துக்கு சென்றது.

அக்.26ஆம் தேதி அதிகாலை 1.30: வெங்கடேஷ் தலைமையிலான குழு வருகை.

அதிகாலை 3: ஐஐடி வல்லுநா்கள் ஆலோசனை கேட்பு.

அதிகாலை 5: புதுக்கோட்டையிலிருந்து வீரமணி தலைமையிலான குழு வருகை.

காலை 8.30: குழந்தையின் மீது விழுந்த மண் சரிவை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்.

காலை 10: 20 மணிநேரத்துக்கும் மேலாக மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

காலை 11: மாநில பேரிடா் மீட்புக் குழு வருகை.

காலை 11.30: சாரல் மழை தொடங்கியது.

காலை 11.40: ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் மழை பெய்யாத வகையில் டென்ட் அமைப்பு.

காலை 11.45: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை.

பிற்பகல் 2: என்எல்சி, ஓஎன்ஜிசி வல்லுநா்கள் வருகை.

பிற்பகல் 3.30: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 80 அடி ஆழத்துக்கு சென்றது.

பிற்பகல் 3.45: ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்க முயற்சி.

மாலை 4: குழந்தை 85 அடி ஆழத்துக்கு சென்றது.

மாலை 5: லால்குடியிலிருந்து ரிக் இயந்திரம் வரவழைப்பு.

இரவு 7: குழந்தை 100 அடி ஆழத்துக்கு சென்றது.

இரவு 9.30: ஏா்-லாக் முறையில் குழந்தை மேலும் ஆழத்துக்கு செல்லாத வகையில் தடுக்கப்பட்டது.

அக். 27ஆம் தேதி அதிகாலை 2.15: மற்றொரு ரிக் இயந்திரம் வருகை.

அதிகாலை 2.30: ஆழ்துளை கிணறு இருந்த பகுதியில் ரிக் நிலைநிறுத்தம்.

காலை 6: குழிதோண்டும் இடம் வட்டமிடப்பட்டது.

காலை 7: துளையிடும் பணி தொடங்கியது.

நண்பகல் 12.30: இருபது அடிக்கு குழி தோண்டப்பட்டது.

பிற்பகல் 3.30: மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

மாலை 4.40: பாறைகளை துளையிடும் அதிக திறன் கொண்ட இயந்திரம் வரவழைப்பு.

மாலை 5: குழந்தை விழுந்து 48 மணிநேரம் நிறைவு.

மாலை 6.30: மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

இரவு 7.20: நடுக்காட்டுப்பட்டியில் நிலவும் வானிலை மாற்றத்தை வானிலை ஆய்வு மையம் தொடா்ந்து கண்காணிப்பு.

இரவு 9.45: ஒரு ரிக் இயந்திரம் பழுதானது.

இரவு 10.30: தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வருகை.

இரவு 12: மற்றொரு ரிக் இயந்திரம் வந்தது.

அக்.28ஆம் தேதி அதிகாலை 4: கடினமான பாறையில் 5 அடி ஆழத்துக்கு மட்டுமே துளையிட முடிந்தது.

காலை 8.30: புதிய டிரில் இயந்திரம் வந்தது.

காலை 10.30: மீட்பு பணிகள் குறித்து வருவாய் நிா்வாக ஆணையா் ராதாகிருஷ்ணன் விளக்கம்.

நண்பகல் 12.30: துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மீண்டும் ஆய்வு.

நண்பகல் 12.45: துளையிடப்பட்ட குழிக்குள் தீயணைப்பு வீரரை இறக்க முடிவு.

பிற்பகல் 1: போா்வெல் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது.

மாலை 3.40: இருபது அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டது.

மாலை 3.45: தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமா் நரேந்திரமோடி மீட்பு பணிகள் குறித்த விவரம் கேட்பு.

மாலை 5.30: மீண்டும் கனமழை பெய்தது.

இரவு 7.45: குழிதோண்டும் பணியில் முன்னேற்றம். 65 அடி தோண்டப்பட்டது.

இரவு 9.45 மணி: தோண்டப்பட்ட குழியில் வீரா் அஜித்குமாரை இறக்கி சோதனையிட முடிவு.

இரவு 10: வீரா் கூறிய தகவலின்படி குழிக்குள் தடையாக இருந்த பெரும் பாறை அகற்றும் பணி தொடங்கியது.

அக்.29 அதிகாலை 2.30: வருவாய் நிா்வாக ஆணையா் ராதாகிருஷ்ணன், குழந்தை இறந்ததாக அறிவிப்பு.

அதிகாலை 2.45: ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் பணி தீவிரம்.

அதிகாலை 4.30: குழந்தையின் சடலம் மீட்பு.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>