சுஜித் பிறக்கும் முன்பே சவக்குழி தோண்டியது யாரோ?

தமிழக மக்கள் அனைவரின் மனங்களும் கடந்த 2019ஆம் ஆண்டு இதே அக்டோபர் 25ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் தான் துடித்துக் கொண்டிருந்தது.

‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்கப்பட்டுவிட்டான்’ என்ற செய்தியைக் கேட்டு விட மாட்டோமா என்றே அனைவரின் நல்லுள்ளங்களும் துடித்தன. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சுஜித் உயிரிழந்தான். அதே மண்ணில் மீண்டும் துயில்கொண்டான்.

மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 

இதுதான் ஆரம்பப் புள்ளி.. அதன்பிறகு நடந்த எதையும் தமிழக மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டியதில்லை.

மணப்பாறை தீயணைப்புப் படை முதல், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வரை பல துறையைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

ஒவ்வொரு முயற்சியும், ஆரம்பத்தில் 27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை மேலும் மேலும் கீழ் நோக்கியே செல்லவைத்தது. இறுதியாகக் குழந்தை 70 அடி ஆழத்துக்கும் கீழே சென்றுவிட்டான். இறுதியாக அக்டோபர் 29ஆம் தேதி எல்லோரையும் விட்டுவிட்டு சென்றுவிட்டான்.

ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாத நிலையில் பெற்றோர் கதறி துடித்தார்கள். தமிழகமே அவனுக்காக மனதுக்குள் விம்மி நின்றது.

ஆனால்.. மனதின் ஒரு ஓரத்தில் எத்தனைதான் ஆறுதல் சொன்னாலும் குழந்தை சுஜித்தின் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது. விளை நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டி, அதனை வெறும் தாற்காலிக அமைப்பை ஏற்படுத்தி மூடிவிட்டதை எப்படி சாதாரணமாக கவனக்குறைவு என்று சொல்லிவிட முடியும்.

வீட்டில் ஓடித் திரியும் குழந்தைகள் இருக்கும் போது, வீட்டுக்கு அருகே இப்படி ஒரு குழி இருப்பதை பெற்றோரும், உறவினர்களும் எப்படி மறப்பார்கள்.

பிற மனிதர்களால், விபத்தால், இயற்கையால், விலங்கால் உயிரிழப்பு நேரிட்டால் அதனை விதி என்று சொல்லிவிட்டுக் கடந்து சென்று விடலாம். ஆனால் இதனை எப்படி அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியும்? நிச்சயம் இதனை விதி என்று விட்டுவிட முடியாது. 

ஒன்றல்ல.. இரண்டல்ல.. இதுபோன்ற எத்தனையோ நிகழ்வுகள் நடக்கும் போது கூட, அடடா நம் நிலத்திலும் இப்படி ஒரு ஆழ்துளைக் கிணறு இருக்கிறதே, நம் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்களே? ஆழ்துளைக் கிணறு சரியாக மூடப்பட்டுள்ளதா என்ற எண்ணம் இவர்களுக்கு எழாதது சகித்துக் கொள்ள முடியாத கவனக்குறைவாகவே தோன்றியது.

சுஜித் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டிருக்கிறார்கள். 

கைப்பொருள் ஒன்றை தொலைத்துவிட்டாலே நெஞ்சம் பதறும். கவனக் குறைவாக இருந்ததற்காக நம்மையே நாம் கடிந்து கொள்வோம். கைக்குழந்தையை இழந்துவிட்டு பெற்றோர் கதறுவதைப் பார்க்கும் ஒவ்வொருவரும், அந்த பெற்றோரின் இடத்தில் நின்று கலங்குகிறார்கள். அதனால்தான் ஒட்டுமொத்த தமிழகமும் சுஜித்துக்காக ஏங்கியது. பிரார்த்தித்தது. கலங்கி நின்றது.

ஒவ்வொரு ஆழ்துளைக் கிணறு சம்பவமும் பாடம் கற்றுக் கொடுக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு சம்பவத்திலும் சரியாக பாடத்தைக் கற்காமல் நாம் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் அதே வகுப்பில் அமர்ந்துதான் மீண்டும் அடுத்தப் பாடத்துக்காக காத்திருக்கிறோம். என்ன நம் முயற்சிக்கு விலையாக குழந்தைகளின் உயிரை அல்லவா பலி கொடுக்கிறோம்.

இனியும் ஒரு சுஜித் உருவாகக் கூடாது என்பதை இந்த நினைவுநாளில் உறுதி ஏற்க வேண்டும். ஒரு கை ஓசை வராது.. மக்களே விழித்துக் கொள்ளுங்கள். 

சுஜித் விஷயத்தில்.. குழந்தை பிறக்கும் முன்பே, அதற்கு சவக்குழி தோண்டியவர்களே குற்றவாளியாக இருக்க வாய்ப்பு.. இதுதான் மக்களின் தீர்ப்பு.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>