சூரரைப் போற்றலாம், சூர்யாவையும்

பெருநிறுவனங்கள் கோலோச்சி வரும் விமான சேவையை எளிய கட்டணத்தில் அனைவருக்குமானதாக மாற்ற தனிமனிதன் ஒருவன் முயலும்போது ஏற்படுத்தப்படும் தடைகளும் அந்தத் தடைகளில் இருந்து மீண்டு வருவதும்தான் சூரரைப் போற்று படத்தின் ஒன்லைன்.

முதல் முயற்சி

கடல், ரயில் போன்றவற்றை முதன்முதலாகப் பார்க்கும்போது ஏற்படும் பரவசத்தைவிட பல மடங்கு மகிழ்ச்சியை அளிப்பது வானில் பறக்கும் விமானங்கள். நமக்குத் தெரிந்த பலரது, ஒருமுறையாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பப் பட்டியலில் விமானத்தில் பறப்பது நிச்சயம் இடம் பெற்றிருக்கும். வரலாறு, காதல், ஜாதி, அறிவியல் என எத்தனையோ கதைக்களத்தில் திரைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும் விமானம் தொடர்பாக வெளியான முதல் தமிழ் சினிமா இது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இறுதிச்சுற்றுப் படத்தை தந்த இயக்குநர் சுதா கொங்கரா, இந்த முறை ஏர் டெக்கான் விமான நிறுவன உரிமையாளர் ஜி.ஆர். கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளை எனும் நூலைத் தழுவி சூரரைப் போற்று மூலம் வானம் தொட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே.. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!

மாறன் – பொம்மி

நெடுமாறன் ராஜாங்கமாக வரும் சூர்யாவும் பொம்மியாக வரும் அபர்ணா பாலமுரளியும் படம் முழுக்க நம்மைக் கவனிக்க வைக்கின்றனர். தந்தையுடன் சண்டை போடும் காட்சியிலும், தந்தை இறந்த செய்தி கிடைத்து ஊருக்குச் செல்ல முயலும்போது காசில்லாமல் விமான நிலையத்தில் உதவி கேட்கும் காட்சியிலும் தந்தைக்குக் கொள்ளி போட முடியாமல் அம்மாவான ஊர்வசியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியிலும் அசத்தலாக நடித்திருக்கிறார் சூர்யா. அபர்ணா பாலமுரளி, அழகு கர்வம் கொண்ட நாயகியாக மின்னுகிறார். மாப்பிள்ளை பார்க்கச் செல்லும் காட்சி, ரயில் பயணக் காட்சி, திருமணத்துக்கு கண்டிஷன் போடும் காட்சி, சூர்யாவுக்குக் கடன் கொடுக்கும் காட்சி, கணவனைக் குறைகூறும் அம்மாவின் வாயடைக்கும் காட்சிகளில் ஜொலிக்கிறார். தனது சொந்த உழைப்பில் வாழும் தன்னம்பிக்கை கொண்ட பாத்திரமாக அபர்ணா பாலமுரளி கதாபாத்திரம் அமைத்துள்ளது சிறப்பு.

கதாபாத்திரங்கள் தேர்வு

இந்தத் திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக வரும் பரேஸ் ராவல் தனது உடல்மொழியால் தனது கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். விமானப் படை கமாண்டோவாக வரும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் தனது கதாபாத்திரத்தைத் திறம்பட செய்துள்ளார். இவர்களைத் தவிர நடிகை ஊர்வசி, கருணாஸ், சூர்யாவின் நண்பர்களாக வருபவர்கள் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று: படம் எப்படி இருக்கு?

தொழில்நுட்ப சிறப்புகள்

இந்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசை கூடுதல் பலம். காட்டுப்பயலே, வெய்யோன் சில்லி, மண்ணுருண்ட மேல பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன.

இறுதிச்சுற்று திரைப்படத்தில் படம் முழுக்க கிரே கலர் டோன் நம்மை ரசிக்க வைத்தது. இந்தத் திரைப்படத்தில் ஒரு மஞ்சள் நிற டோன் படம் முழுக்க ஒளிப்பதிவில் தெறிக்க விடுகிறார் ஒளிப்பதிவாளர் நிகித் பொம்மி ரெட்டி. வெய்யோன் சில்லி பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அருமை.

அதே போல் விமானம் பற்றிய திரைப்படம் என்பதால், விமான நிலையத்தின்  பின்னணி தோன்றிக் கொண்டிருக்கும் வகையில் அருகிலேயே குடியிருப்பதாக சூர்யாவின் வீடு அமைக்கப்பட்டிருப்பது நுட்பம். உறியடி இயக்குநர் விஜயகுமாரின் வசனங்கள் தெறி.

மொத்தத்தில் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தமிழ் சினிமாவில் விமானம் குறித்த முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா, நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கணும், ஓட வேண்டிய நேரத்தில் ஓடணும், பறக்க வேண்டிய நேரத்தில் பறக்கணும் என்ற விவேகத்துடன், கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் வானத்தை வசமாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்துள்ளார்.

திரைப்படம் வெளிவந்த சில நிமிஷங்களிலேயே வீட்டிலிருந்தவாறே எந்தத் திரைப்படத்தையும் எளிதில் பார்த்துவிட முடியும் என்பது ஓ.டி.டி. தளங்களால் ரசிகனுக்கு வழங்கப்பட்ட கொடுப்பினை. சூர்யாவின் துணிவு பாராட்டுக்குரியது. இனி வருங்காலம் இவ்வாறே ஆகிடுமோ?

<!–

–>