சூழலியல் பேசும் பூமிகா: திரை விமரிசனம்

ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான நவரசாவின் இன்மையை இயக்கித்  தனிக்கவனம் பெற்ற இயக்குநர் ரத்தீந்திரன் பிரசாத் இயக்கத்தில் விஜய் டிவியில் வெளியாகி இருக்கிறது பூமிகா. 

பேய் படங்கள் என்றாலே நம் மூளைக்குப் பழக்கப்பட்ட பல காட்சிகளுக்கு மத்தியில், தான் சொல்ல விரும்பிய செய்தியைக் கச்சிதமாகக் கடத்தியுள்ளார் இயக்குநர்.

கட்டுமானப் பணிகளுக்காக வனத்திற்குள் வரும் நாயகன் கவுதமன் மற்றும் அவரது குழுவினர் பேய் இருப்பது தெரியாமல் பழைய கட்டடத்தில் இரவைக் கழிக்கின்றனர். அப்போது இறந்துபோன நண்பனின் அலைபேசியில் இருந்து வரும் குறுஞ்செய்தி மூலம் பேய் இருப்பதை அறியும் அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா, இல்லையா என்ற அதே பழைய கதைதான் ’பூமிகா’.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, பாவல் நவகீதன், நக்கலைட்ஸ் பிரசன்னா, அவந்திகா என அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

உளவியல் நிபுணராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். கவுதமாக வரும் விது, அவரின் தோழியாக சூர்யா கணபதியைப் பாராட்டலாம். குறிப்பாக உள்ளூர் வேலையாளாக நடித்திருக்கும் பாவல் நவகீதன் அற்புதப்படுத்தியிருக்கிறார்.

முதல்பாதி யூகிக்க முடிந்த பல காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் இரண்டாம் பாதியில் அவற்றைச் சரி செய்திருக்கிறது படக்குழு. நக்கலைட்ஸ் பிரசன்னாவும், பூமிகாவாக நடித்திருக்கும் அவந்திகாவும் இரண்டாம் பாதியைத் தாங்கியிருக்கின்றனர். பிருத்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

 

பேய்க் கதைகளுக்குள் வரும் பழிவாங்கல் தியரியில் புவிவெப்ப உயர்வு, காலநிலை மாற்றம், சூழலியல் முக்கியத்துவம், ஆட்டிசம் குறித்த பார்வை என தான் நினைத்ததை எந்தச் சறுக்கலும் இல்லாமல் இயக்குநரால் கையாள முடிந்தது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

“என்ன எனக்கு காப்பாத்திக்கத் தெரியும், முடிஞ்சா என்கிட்ட இருந்து உங்களை நீங்க காப்பாத்திக்கங்கனு பூமி நம்மகிட்ட சொல்லுதுங்க” என்று பாவல் நவகீதன் பேசும் வசனம் கனமானது.  

கிராபிக்ஸ் காட்சிகள் சில இடங்களில் கைகொடுக்கத் தவறினாலும் இறுதிக் காட்சிகளில் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. பேய் இருப்பது தெரிந்தும் தனியாக சுற்றுவது, தேவையற்ற காட்சி நீளங்கள் எனத் தவிர்த்திருக்க வேண்டியவை ஒருவித அயர்ச்சியைக் கொடுக்கின்றன. ஒரு இடத்தில் பேய்க்கு பயந்து ஓடிஒளிய முற்படுவதும் மற்றொருபுறம் தனியாக வெளியில் சுற்றுவதும் என தவறவிட்ட இடங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. 

பேய்ப் படங்களில் நாம் மறக்க வேண்டிய லாஜிக்குகள் எனும் பக்கத்தைக் கவனத்தில் கொண்டால் படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>