செல்லக் குழந்தைகளே இனி நீங்கள் ஓடலாம், ஆடலாம் இஷ்டப்படி விளையாடலாம்!!

உலகமெங்கும் முன்பைவிட சிறுவர்கள் ஓடி விளையாடுவது குறைந்து கொண்டே போவதால் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதிலிருந்து தெளிவாக தெரிந்தது, விளையாடாததால் தான் பல பாதிப்புகள் உருவாகின்றன. குறிப்பாக, நாமே நம்மை ஊக்கப்படுத்திக் கொள்ளும் சுபாவம் இது என் கட்டுக்குள் இருக்கிறது’ என்பது தரும் தன்னம்பிக்கை, இரண்டுமே மங்கிப் போய்விடுகிறதாம். அந்தத் திறன்களுக்கு பதிலாக, சஞ்சலங்கள், குழப்பங்கள் அதிகரித்து, மன உளைச்சல் (Depression), பதற்ற நிலைகளின் தொந்தரவுகள் (Anxiety Disorder) போன்றவை ஆட்கொள்கின்றன.

இன்னொரு ஆராய்ச்சி சொல்வதும் மிக வருத்தமானதே. குழந்தைகள் விளையாடாததால் அவர்களின் உடல் வளர்ச்சி பள்ளிப் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு இல்லை. சிறு வயதிலேயே உடல் பருமன் (Obesity) ஆவதும் விளையாடாததால் வரும் ஒன்றே.

இதற்குக் காரணம் சிலர் விளையாட இடங்கள் குறைவானதால் என்றார்கள். சிலர், கணினி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு தான் பிரச்னை என்று விமரிசிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே அவர்களைத் திசை திருப்பிச் சாப்பிட வைப்பதற்கு, தங்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பதற்கு, குழந்தைகள் ஒரு இடத்தில் இருப்பதற்குக் கணினி, டிவி என்று பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.  

மொத்தத்தில் குழந்தைகள் விளையாடாததால் அடம் பிடிக்கும் சுபாவம், கோபம், அதிகரித்து, பகிர்ந்து கொள்வது குறைந்து கொண்டு இருக்கிறது. சில அண்டை நாடுகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதால் அவர்கள் ஆரம்பப் பள்ளிகளை பெரிய வெட்ட வெளி உள்ள இடத்தில் அமைப்பதுண்டு. விளையாடுவதைத் தடை படுத்தினால் தீமைகளை வளர விடுகிறோம்.

மற்றவர்களுடன் கூடி விளையாடுவதன் நன்மைகள், நாம் எல்லோரும் அறிந்ததே, விளையாட்டினால் திடமாகிறோம். நம்மைப் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) தன்மைகளை விளையாடுவதால் சுதாரித்துக் கொள்ளலாம். உடல்-மனம்-சமூக நலன், முழுமையான ஆரோக்கியம் நன்றாக வளரும்! எல்லாவற்றையும் அறிந்தும், அதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம். தேவையற்றது போல் ஒதுக்கி விடுகிறோம்.

விளையாட்டின் போக்கிலேயே, பல பிரச்னைகளுக்கு விடைகள் தேடத் தூண்டச் செய்கிறது. இதனால், சிலர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும் முடிகிறது. விளையாடும்போது அந்த இடத்தில் பலவிதமான முடிவுகள் எடுக்கப்படும். பிடித்ததை, பிடிக்காததை வெளிப்படுத்த வேண்டி வரும். இப்படிச் செய்யச் செய்ய, தன்னைச் சுதாரித்துக் கொள்ள முடிகிறது. ஒன்று கூடி விளையாடுவதால், அந்த மைதானத்தில் பல திறன்கள் பயிலுகிறோம். WHO (உலக சுகாதார நிறுவனம்) படிப்புடன் சேர்ந்து இந்த ‘Life Skills’ (வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள்) மிக முக்கியமானவை என்று கூறி இருக்கிறார்கள். இந்தத் திறன்கள் நன்றாக இருந்தால் படிப்பும் சரி, வாழும் விதமும் மிக அழகாக அமையும் என்று பல ஆராய்ச்சிகளும், இதைச் செயல்படுத்திய இடங்களிலும் உறுதி செய்கின்றன.

கூர்ந்த கண்காணிப்பில் மட்டும் விளையாடினால், இந்த அம்சங்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள முடியாது. மற்றவரின் நிழலிலேயே வளர்ந்து வருவதால், ஒன்றைத் தானாக செய்வதற்குத் தயங்குவார்கள். முடிவெடுப்பதில் தத்தளிப்பார்கள், தானாகச் செய்வது என்று இருந்தால், தைரியம் இருக்காது, மன உளைச்சல், பதற்றக் குழப்பம் தோன்றலாம். விளையாட்டிலும் சுதந்திரம் தேவை, அது தற்காப்பை வளர்க்க உதவுகிறது.

பெரியோர்களின் பாதுகாப்பின்மையும் (insecurity) ஒரு காரணம்

பெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் அச்சம், சந்தேகம், கவலை போன்ற பாதுகாப்பின்மையாலும் இப்படி ஆகலாம். உதாரணத்திற்கு: ‘விழுந்து விடுவார்களோ?’, ‘அடி பட்டுக் கொண்டு விட்டால்?’, ‘எப்படி அவர்களை தனியாக விடுவது?’, ‘யாராவது ஏதாவது செய்து விட்டால்?’, ‘குழந்தைகளால் தங்களை பார்த்துக் கொள்ள முடியுமா?’, ‘விளையாடும் இடம் பாதுகாப்பானதா?’, ‘முறையற்ற நடத்தைக் கொண்டவர்கள் யாரேனும் அங்கு வந்து விட்டால்?’ என்றெல்லாம். தங்களின் பாதுகாப்பின்மையை முறையாக அணுகுவதற்கு வழிகளைக் கண்டுபிடிக்காமல், அதற்குப் பதிலாக  விளையாடுவதைக் குறி வைத்து விடுவார்கள். தங்களின் கண்காணிப்பு இல்லாமல் விளையாடக் கூடாது என்பதே விடை என்று முடிவெடுத்து, அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள். விளையாட்டும் குறைந்து விடும், அதனால் வளர்ச்சி வாய்ப்புகளும் குறைந்து விடும்.

விளையாட்டின் ஆற்றல், வலிமை

விளையாடுவதைப் பார்ப்பது, எப்பொழுதுமே ஒரு சுகமான அனுபவம். அது நேர்முகமாகவோ, தொலைக்காட்சியிலோ இருக்கலாம். நம்மைக் கவர்வது அந்த விளையாட்டின் விதிகள், விளையாடும் விதம், விளையாடுபவரின் பங்களிப்பு, எந்த விதத்தில் வெற்றி, தோல்வியைக் கையாளுகின்றனர் என்று பலவற்றை ரசிப்போம்.

விளையாடுவதால் படிப்படியாக திறன்கள் வளர்வதின் வாய்ப்புகள் அதிகமாகும். மற்றவருடன் விளையாடும் போது அவர்களிடமிருந்து கற்போம். அவர்களும் நம் விளையாட்டு திறனை சுதாரித்துக் கொள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் அதே அளவிற்குப் புகழ்வதும் இருக்கும்.

மற்றவர்களுடன் கலந்து, ஒருவரை ஒருவர் மதிப்பதாலேயே, கூடி விளையாட முடிகிறது. இவ்வாறு உறவாடுவதால், சீர்திருத்த பட்ட வழிகளால் நம்முடைய மனோபாவம், கண்ணோட்டமும் மேம்படுத்தப் படுகிறது. விளையாடுவதால், பரந்த மனப்பான்மை வளர, மற்றவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள் வைக்க மாட்டோம். மற்றவரை மதிப்போமே தவிர, தாழ்ந்து பார்க்க மாட்டோம்.

விளையாடினால், பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் மேம்படும். விளையாட்டை மட்டும் கவனம் கொள்வதால், கூட விளையாடுவோரின் அந்தஸ்து, குலம், இனம், என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் இருக்காது. குறிப்பாக வளரும் குழந்தைகளில் இதை நன்றாகப் பார்க்கலாம்.

எந்தச் சாக்குப் போக்கிற்கும் இடம் இல்லாமல் வைத்தால், விளையாடுவதால் படிப்பைக் குறைப்பது என்று இருக்காது. சிறு வயதிலிருந்தே விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கி வைத்திருந்தால் இரண்டையும் பொறுப்பாகச் செய்வார்கள். விளையாடுவதை ஒரு சாக்காக வைக்க மாட்டார்கள். சொல்லப் போனால், நேரம் காப்பதை சரியாகச் செய்வார்கள்.

மக்களுக்கும், இடத்திற்கும், முக்கியத்துவம் தரும் நல்ல குணம் சீராக விளையாடுவதால் வளரும். மற்றவரைத் துன்புறுத்துவது, பொருட்களை உடைப்பது என்பதெல்லாம் இருக்காது. இப்படிச் செய்தால் அது பழிவாங்கும் சுபாவத்தைக் காட்டுகிறது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருபவர்களிடம் மரியாதை தெரியும். பல முறை சாலையில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் நாம் அந்த வழியாகத் கடந்து செல்ல வேண்டும் என்றால், நாம் கடந்து செல்லும் வரையில் காத்திருந்து, கடந்து சென்ற பின் விளையாடுவார்கள். இதிலிருந்து, பொறுப்பாக உள்ள, பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக வளருவார்கள்.

பாவனை விளையாட்டு / கபட விளையாட்டு (Pretend Play)

குழந்தை பருவத்தில், குழந்தைகள் தங்களை தங்கள் அம்மா, அப்பா, வீரன், டீச்சர், கடவுள் என்ற பல வேடங்களில் அவர்கள் செய்வது போலவே பாவனை செய்து பார்ப்பார்கள். வளர வளர அதே போல் வேறு பாவனைகளை செய்து பார்ப்பது உண்டு: கிரிக்கெட் பிரியர்கள் சச்சின் டெண்டுல்கர் போலவே செய்ய பார்ப்பார்கள், நடிப்பில் நாட்டம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் போல் செய்து பார்ப்பார்கள். இதிலெல்லாம் நாம் இன்னொருவரை போல் செய்து நம் திறமையை மெருகூட்டச் செய்யப் பயிலுவோம்.

ஆரம்பக் காலத்தில் பாசாங்கு விளையாட்டு ஆடியதால் அதையே பிற்காலத்தில், பயிற்சி செய்ய உதவுகிறது. நாம் மேடை ஏறிப் பேச வேண்டும் என்று இருந்தாலோ, பயிலரங்கத்தில் பேசுவதாக இருந்தாலோ, முன்னே நாம் செய்யப் போவதை தனியாக ஒத்திகை பார்த்துக் கொள்வோம். இதையே வேறு வழிகளிலும் நாம் செய்வதுண்டு. அதாவது, சமையல் கலை கற்கிறோம் என்றால் அவற்றை பற்றி படித்தோ, பார்த்தோ, கேட்டோ செய்வோம்.

இவ்வாறு நம் வாழ்வில் பாசாங்கு, பாவனை விளையாட்டு முக்கியத்துவம் அடைகிறது. இதிலிருந்து ஒரு ஆர்வம், தூண்டுதல் தோன்றுகிறது. வெளி உலகத்தின் பலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாகக் குழந்தைகள் இருப்பார்கள். அதை முடக்கி, ஆராய்தல் செய்வதை நிறுத்தினால் வளரும் குழந்தைகளின் கற்பனை வளர்ச்சியை முடக்கும். உடல் வளர்ச்சி குன்றி, மனபலம் குறைவாக இருந்துவிடும்.

கூட்டு விளையாட்டு (Cooperative Play)

மற்றவர்களுடன் கூடி விளையாடுவது முக்கியமாகப் பாதுகாப்புத்தன்மை தரும். இதில், விளையாட்டின் விதிகளைப் பின் பற்றுவது, எப்படி விளையாடுவது என்று கற்றுக் கொள்வது முக்கியமாகும். விளையாட்டின் பல வண்ணம் தோன்றுவதால் ‘சரி’, ‘வேண்டாம்’ எப்பொழுது, எப்படிச் சொல்வது என்பதைக் கற்றல் ஆரம்பமாகிறது. சில சமயங்களில் அதே வயதினருடனும், சில நேரங்களில் பல வயதினருடன் சேர்ந்து விளையாட நேரும். இந்தச் சூழலில் மற்றவர்களுடன் கலந்து விளையாடுவது, மற்றவர்களை மதிப்பது, மதிப்பைக் காட்டுவது என்ற பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பமாகிறது. இந்த கற்றலினால், சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது என்ற பழக்கம் வளரும், ப்ராஜெக்ட் செய்வதிலும் உபயோகமாகும். இது வாழ்க்கைக்காகக் கற்றல் என்று சொல்வது மிகையாகாது.

முக்கியமாக, விளையாட்டில் ஒருவருக்கு ஒருவருள் எழும் வாக்குவாதங்களையும் அவர்களே சரி செய்ய விட வேண்டும். அப்பொழுது தான் பேசி, சரி செய்யும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். பெரியவர்கள் நிவர்த்தி செய்தால், பிரச்னை என்றால் எப்பொழுதும் ‘என்னால் சரி செய்ய முடியாது’ என்று மற்றவருக்காகக் காத்திருப்பார்கள்.

சுதந்திர விளையாட்டு என்பது, குழந்தைகளை எந்த கண்காணிப்பு இல்லாமல் விளையாட விடுவது. பல முறை பெரியவர்கள் குழந்தைகளை ‘இதை, இப்படி விளையாடணும்’,’ஓடாதே, விழுந்து, அடிபடும்’, ‘நான் இல்லாமல் எங்கேயும் போய் விளையாடக் கூடாது’ என்று பல சட்ட திட்டங்கள் விடுவோம். ஒரு சில நேரங்களில், குழந்தைகளைச் சுதந்திரமாக விடுவதில் அவர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பை அளிக்கிறோம். அதே நேரத்தில் அவர்களை நம்புகிறோம் என்பதையும், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை காட்ட, அவர்களின் தன்னம்பிக்கை வளரும்.

விளையாட்டைத் துச்சமாக பார்ப்பது

விளையாடுவதை என்றுமே படிப்பதுடன் ஒப்பிட்டு, விளையாடுவதை நிராகரித்துப் படிப்புக்கு நேரம் செலுத்துவது பொதுவான வழக்கம் என்றே சொல்லலாம். படித்தால் பட்டம் பெற்று, வேலை கிடைக்கும், வாழ்க்கை நன்றாக அமையும். விளையாடுவதால் வாழ்க்கை அமையாது என்ற கருத்து நிலவுவதால் என்றும் விளையாடுவதை ஊக்கப்படுத்துவதில்லை.

விளையாடுவோரைப் படிப்பு வராதவர்களாகக் கருதுவதனாலும் விளையாடுவதின் அருமையைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அதற்கு நேர்மாறாக, விளையாட்டு வீரர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் விளையாட்டு களத்தில் எந்த அளவிற்கு ஆர்வம், கவனம் காட்டுகிறார்களோ அதே போல் பாடங்களை எழுதி, படித்து, பரீட்சை எழுதி அடுத்த கட்டத்திற்கு நேர் வழியில் போகிறார்கள்.

தினம் ஒரு மணி நேரம் விளையாடினால் நம் உடல்+மன+சமூக நலன் மேம்படும். இந்தக் கோடை விடுமுறையில் இதைத் தாராளமாக பயிலச் செய்யலாம். இலவசமாக முழு நலனைத் தரும் ஒன்றை எல்லோரும் தாராளமாக செயல் படுத்த வழிகளைக் கண்டறிய வேண்டும்.

விளையாடுவது, அதன் நலன்கள், சிறுவர்களுக்கு, வளரும் பருவத்திலும், இளைஞர்கள் உதவுவது மற்றும் அல்லாமல் மற்ற வயதினருக்கும் பயன்படும்.  உதாரணத்திற்கு, 40-50 வயதைத் தாண்டியவர்கள் கூட அவர்களின் குடும்ப மருத்துவரிடம் பேசி, ஆரோக்கியமாக இருக்க, எந்த அளவிற்கு எதை விளையாடலாம் என்ற பரிந்துரை கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கலாம்.

– மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்,
malathiswami@gmail.com

<!–

–>