சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் சாய் கிஷோர் அபார பந்துவீச்சு: தமிழக அணிக்கு 152 ரன்கள் இலக்கு

 

தமிழகத்துக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி இறுதிச்சுற்றில் கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தியது.

2019-ல் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் கர்நாடகத்திடம் தமிழக அணி தோற்றது. அந்தக் காயத்தைப் போக்கும் விதமாக இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆரம்பம் முதல் தமிழகச் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதன்மூலம் கர்நாடக அணியின் ஸ்கோரை நன்குக் கட்டுப்படுத்தினார்கள். 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் மட்டும் எடுத்தது கர்நாடகம். சாய் கிஷோர் பவர்பிளே பகுதியில் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. 

கடைசி 3 ஓவர்களில் கர்நாடக அணி 42 ரன்கள் குவித்ததால் கடைசியில் கெளரவமான ஸ்கோர் கிடைத்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>