சையத் முஷ்டாக் அலி கோப்பையை அதிகமுறை வென்று தமிழக அணி சாதனை

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை 3-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது தமிழக அணி.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஷாருக் கான்.

தொடர்ந்து 3-வது வருடமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இந்தியாவின் சிறந்த டி20 அணியாக உள்ளது தமிழக அணி. காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தியது.

2019-ல் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிச்சுற்றில் கர்நாடகத்திடம் தமிழக அணி தோற்றது. அந்தக் காயத்தைப் போக்கும் விதமாக இன்று சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

தில்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய பந்துகளில் கர்நாடக பேட்டர்களால் ஒரு பவுண்டரியோ சிக்ஸரோ அடிக்க முடியவில்லை. தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை தமிழக அணி 3-வது முறையாக வென்றதன் மூலம் இக்கோப்பையை அதிகமுறை வென்ற அணி என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் தொடக்க வருடத்தில் சாம்பியன் ஆனது தமிழக அணி. கடந்த வருடம் தினேஷ் கார்த்திக் தலைமையில் கோப்பையை வென்ற தமிழகம், மீண்டுமொருமுறை சாம்பியன் ஆகியுள்ளது. கர்நாடகம், பரோடா, குஜராத் அணிகள் இருமுறை கோப்பையை வென்றுள்ளன. 

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற அணிகள் 

2006-07: தமிழ்நாடு 
2009-10: மஹாராஷ்டிரா 
2010-11: பெங்கால் 
2011-12: பரோடா 
2012-13: குஜராத் 
2013-14: பரோடா 
2014-15: குஜராத் 
2015-16: உத்தரப் பிரதேசம் 
2016-17: கிழக்கு மண்டலம் 
2017-18: தில்லி 
2018-19: கர்நாடகம் 
2019-20: கர்நாடகம் 
2020-21: தமிழ்நாடு 
2021-22: தமிழ்நாடு 

மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இருந்த கர்நாடகத்துடன் தமிழக அணி இணைந்துள்ளது. கர்நாடக அணி 99 ஆட்டங்களில் 70 வெற்றிகளையும் தமிழக அணி 96 ஆட்டங்களில் 70 வெற்றிகளையும் பெற்று சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளாக உள்ளன. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>