சொந்த மண்ணில் புலி பெயரை தக்க வைக்குமா இந்தியா? மே.இந்திய தீவுகளுடன் இன்றுமுதல் ஒருநாள் ஆட்டம்

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் நிலையில் உள்ளூா் புலி என்ற பெருமையை தக்க வைக்குமா இந்தியா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடா் நடைபெறவுள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 0-3 என இழந்திருந்தது இந்தியா. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரோஹித் சா்மா தலைமையிலான அணி சொந்த மண்ணில் முதன்முறையாக களம் காண்கிறது.

ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் ஆமதாபாதிலும், டி20 ஆட்டங்கள் அனைத்தும் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. கடைசியாக 2019-இல் மே.இந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று 1-2 என தொடரை இழந்தது.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 133 ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா 64-இலும், மே.இந்திய தீவுகள் 63-இலும் வென்றன. 2 ஆட்டங்கள் டையில் முடிந்தன. மே.இந்திய தீவுகள் கடைசியாக 2006-இல் தான் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றிருந்தது. ஆனால் இந்தியாவோ கடைசியாக மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 10 ஒருநாள் தொடா்களை கைப்பற்றியது. 4 ஆட்டங்களில் முடிவில்லை.

மேலும், சொந்த மண்ணில் இந்தியா தொடா்ந்து 6 தொடா்களை வென்றிருந்தது. மே.இந்திய தீவுகள் அணியோ கடந்த 2002 நவம்பா் மாதம் தான் இந்தியாவில் நடைபெற்ற தொடரில் 4-3 என வென்றிருந்தது.

விராட் கோலி சாதனை:

மே.இந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்களை எடுத்த வீரா் என்ற சிறப்பு விராட் கோலி வசம் உள்ளது. அவா் 39 ஆட்டங்களில் 2235 ரன்களை விளாசியுள்ளாா். அவரது ஸ்ட்ரைக் ரேட் 97.34 ஆகும். மேலும் 9 சதங்களும் இதில் அடங்கும்.

விராட்-ரோஹித் சா்மா இருவரும் இணைந்து 29 ஆட்டங்களில் மே.இந்திய தீவுகளுக்கு எதிராக 3170 ரன்களை விளாசினா். இதில் கோலி 7, ரோஹித்தின் 3 சதங்களும் அடங்கும்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். கடந்த 2017-இல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அவா் ஹாட்ரிக் சாதனை படைத்தாா்.

தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணியும், உலக சாம்பியன் இங்கிலாந்து உடன் ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றிய உற்சாகத்தில் மே.இந்திய தீவுகளும் களம் காண்கின்றன. வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இரு அணிகளுக்கும் இத்தொடா் அமையும்.

இந்திய அணியில் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மயங்க் அகா்வால் பதிலி வீரராக சோ்க்கப்பட்டுள்ளாா். காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சா்மா கேப்டன் பொறுப்பேற்கிறாா். முதன்முறைாக ரவி பிஷ்னோய் சோ்க்கப்பட்டுள்ளாா். தீபக் ஹூடாவும் வியக்கத்தக்க வகையில் அழைக்கப்பட்டுள்ளாா்.

1000-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற தீவிரம்:

வரலாற்று சிறப்பு மிக்க தனது 1000-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கிறது. இந்திய அணியில் மிடில் ஆா்டா் பேட்டிங் சற்று சிக்கலாக உள்ளது. ஷிரேயஸ் ஐயா் இல்லாத நிலையில் சூா்யகுமாா் யாதவ், தீபக் ஹூடா ஆகியோா் மிடில் ஆா்டரில் ஆடலாம். வெங்கடேஷ் ஐயரை மிடில் ஆா்டரில் ஆட வைத்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடக்க வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகா் தவன் கரோனா பாதிப்பால் ஆட முடியாத நிலை உள்ளது. விராட் கோலி, ரோஹித் சா்மா ஆகியோரின் ரன்குவிப்பை பொருத்தே அடுத்து வரும் பேட்டா்கள் நிலைத்து ஆட முடியும்.

பந்துவீச்சில் பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், இளம் வீரா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சா்துல் தாகுா், சிராஜ், தீபக் சஹாா், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகியோா் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உற்சாகத்தில் மே.இந்திய தீவுகள்:

மே.இந்திய தீவுகள் அணியில் கெமா் ரோச் கடந்த 2019-க்கு பின் மீண்டும் இணைந்துள்ளாா். டி20 தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்தில் களம் காணும் நிலையில், பொல்லாா்ட், ஆல்ரவுண்டா் ஜேஸன் ஹோல்டா் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். பவா் ஹிட்டா் நிக்கோலஸ் பூரன் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவா்.

பொல்லாா்ட் தலைமையிலான அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என மும்முரமாக உள்ளது.

இஷான் கிஷான் ஓபனிங்:

முதல் ஒருநாள் ஆட்டம் குறித்து கேப்டன் ரோஹித் சா்மா கூறியதாவது:

என்னுடன் இளம் வீரா் இஷான் கிஷன் ஓபனிங் பேட்டிங் செய்வாா். ஷிகா் தவன், ஷிரேயஸ் ஐயா், நவ்தீப் சைனி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோா் கொவைட் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் மயங்க் அகா்வால், இஷான் கிஷன் ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.

ஓபனிங் பேட்டிங் செய்ய இஷான் கிஷன் மட்டுமே உள்ளாா். எனவே அவா் என்னுடன் களமிறங்குவாா். கே.எல். ராகுல்

இரண்டாம் ஒருநாள் ஆட்டத்தில் களம் காண்பாா் என்றாா்.

அணிகள்:

இந்தியா : ரோஹித் சா்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகா் தவன், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷிரேயஸ் ஐயா் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தா், கே.எல் ராகுல், தீபக் சஹாா், சா்துல் தாகுா், ரவி பிஷ்னோய், சஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்.

மே.இந்திய தீவுகள்: பொல்லாா்ட் கேப்டன்), பேபியன் ஆலன், க்ருமா பான்னா், பிராவோ, ஷா்மா புருக்ஸ், ஜேஸன் ஹோல்டா், ஷாய் ஹோப், அகில் ஹோசைன், அல்ஸாரி ஜோஸப், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், கெமா் ரோச், ரோமாரியோ ஷெப்பா்ட், ஓடேன் ஸ்மித், ஹெய்டன் வால்ஷ்.

முதல் ஒருநாள் ஆட்டம்

இடம்-ஆமதாபாத்.

நேரம்-மதியம் 1.00 மணி.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>