ஜம்மு – காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?

யூனியன் பிரதேசமான ஜம்மு- காஷ்மீரில் நடந்து முடிந்துள்ள மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மாநிலக் கட்சிகள் அமைத்த குப்கர் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், மத்திய ஆளும் கட்சியான பாஜக அங்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு 2019 ஆக. 5-இல் நீக்கப்பட்டு, ஜம்மு -காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, இப்பகுதி மக்களின் எண்ணத்தை அறிவதற்கான வாய்ப்பாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் கருதப்பட்டது.

இந்தத் தேர்தல், கடந்த நவ. 28 முதல் டிச.19 வரை எட்டு கட்டங்களாக நடைபெற்றது. தலா 14 வார்டுகள் கொண்ட 20 மாவட்ட கவுன்சில்களுக்கான 280 கவுன்சில் உறுப்பினர் பதவிகளுக்கு,  2,178 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்; இவர்களில் 450-க்கு மேற்பட்டோர் பெண்கள். தேர்தல் முடிவுகள் டிச. 22-இல் வெளியாகின.

பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் அதீதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்,  மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், எந்த இடத்திலும் தேர்தல் வன்முறை நிகழ்வுகள் பதிவாகவில்லை. 

யூனியன் பிரதேசம் முழுவதுமாக, 57.76 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக, ஜம்மு பிராந்தியத்தில் 68 சதவீதமும், காஷ்மீர் பிராந்தியத்தில் 34 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.  

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசம் ஆக்கியதையும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையும் எதிர்த்து உருவானதுதான் குப்கர் கூட்டணி. இதுவரை எதிரும் புதிருமாக இருந்த மாநிலக் கட்சிகள் பலவும், பாஜகவை வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கூட்டணியாக இணைந்தன. 
 
ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி, சஜத் லோனேயின் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம், பீம் சிங்கின் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய 7 கட்சிகள் குப்கர் சாலையில் உள்ள ஃபரூக் அப்துல்லா வீட்டில் கடந்த ஆக. 22-இல் கூடி, கூட்டணியாகச் செயல்படுவதாக பிரகடனம் செய்தன. அதனால் இக்கூட்டணி குப்கர் கூட்டணி என்று பெயர் பெற்றது. 

எனினும், இக்கூட்டணியில் இருந்த சிலரது பாகிஸ்தான் ஆதரவுப் பேச்சுகளால் தர்ம சங்கடத்துக்குள்ளான காங்கிரஸ் கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது.  

தற்போது 278 இடங்களுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், குப்கர் கூட்டணி 112 இடங்களில் வென்றது.  பாஜக தனிப்பெரும் கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 26 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும்  வென்றுள்ளன. 

தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல பகுதிகளில் சுயேச்சைகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. இவர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். காஷ்மீர் பிராந்தியத்தில் பல வார்டுகளில் போட்டியிட முடியாத நிலையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு தெரிவித்திருந்தது. அவர்களில் 40 பேர் வென்றுள்ளனர்.

மாவட்ட நிலவரம்: காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களில், குப்வாரா, பட்காம், புல்வாமா, அனந்தநாக், குல்காம், கண்டர்பால் ஆகிய 6 மாவட்டங்களில் குப்கர் கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பாராமுல்லா, சோபியான், பந்திபோரா ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களை வென்றுள்ள குப்கர் கூட்டணி, சுயேச்சைகளின் உதவியுடன் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது. 

ஸ்ரீநகரில் சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றிருப்பதாலும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னி கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாலும் இழுபறி காணப்படுகிறது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களில், கதுவா, சம்பா, ஜம்மு, உதம்பூர், தோடா ஆகிய 5 மாவட்டங்களில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ரியாசி மாவட்டத்தில் அதிக இடங்களை வென்ற பாஜக சுயேச்சைகளின் உதவியுடன் பெரும்பான்மை பெற உள்ளது. 

பூஞ்ச் மாவட்டத்தில் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சைகள் அதிக அளவில் வென்றுள்ளனர். ராம்பன், கிஷ்த்வார், ரஜெளரி ஆகிய 3 எல்லைப்புற மாவட்டங்களில் குப்கர் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் இந்த மாவட்ட கவுன்சில்களில் குப்கர் கூட்டணி தலைமை ஏற்கும் வாய்ப்பு காணப்படுகிறது.

மொத்தமாகப் பார்த்தால், குப்கர் கூட்டணி 12 மாவட்ட கவுன்சில்களையும், பாஜக அணி 7 மாவட்ட கவுன்சில்களையும் கைப்பற்ற உள்ளன. சுயேச்சைகள் வசம் ஸ்ரீநகர் மாவட்ட கவுன்சில் செல்லக்கூடும். கட்சிவாரியாகக் கணக்கிட்டால், தேர்தல் முடிவுகளில் பாஜகவும் தேசிய மாநாடு கட்சியும் கூடுதல் லாபம் அடைந்துள்ளன; காங்கிரஸூம் மக்கள் ஜனநாயகக் கட்சியும் முந்தைய தேர்தல்களைவிட சரிவு கண்டுள்ளன.

முக்கியமான விளைவுகள்: சட்டப் பேரவைத் தேர்தலைவிட அதிக அளவில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் ஜம்மு -காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த கவுன்சில்கள் நல்ல முறையில் இயங்கும்போது ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். 

அடுத்து சட்டப் பேரவைத் தேர்தல்  விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குப்கர் கூட்டணி தொடருமானால், யூனியன் பிரதேசத்தின் முதல் பேரவையில் மாநிலக் கட்சிகளின் ஆளுகை உறுதியாகும்.

பாகிஸ்தானிலிருந்து தூண்டிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும் பிரிவினைவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில், பெரிய வன்முறைகளோ தேர்தல் தகராறுகளோ இல்லாமல் வெற்றிகரமாக தேர்தல் நடந்து முடிந்திருப்பதே ஜனநாயகத்தின் வெற்றியாகும்.  

இதுவரை வெல்லாத காஷ்மீர் பிராந்தியத்தில் 3 இடங்களில் பாஜக வென்றிருப்பது அக்கட்சிக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. பந்திபோரா, ஸ்ரீநகர், புல்வாமா மாவட்டங்களில் தலா ஓரிடத்தில் பாஜக வென்றுள்ளது.
  
ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பதாக, தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் குப்கர் கூட்டணியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். ஆனால், குப்கர் கூட்டணியைவிட பாஜகவுக்கே பெருமளவில் மக்கள் வாக்களித்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக, 4,87,364 வாக்குகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் தேசிய மாநாடு (2,82,514), காங்கிரஸ் (1,39,382), மக்கள் ஜனநாயகக் கட்சி (57,709) ஆகியவை உள்ளன. கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டிருந்தால், பாஜகவும் தேசிய மாநாடு கட்சியும் மேலும் பல இடங்களில் வென்றிருக்கும். 

குப்கர் கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பிராந்திய நலன்களுக்கு மக்கள் முன்னுரிமை தருவதன் வெளிப்பாடு. அதேசமயம், பாஜக அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதும், தனிப்பெரும் கட்சியாக வென்றிருப்பதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கிறது.  

எனினும் ஜம்மு, காஷ்மீர் ஆகிய இரு பிராந்தியங்களில் மத அடிப்படையிலேயே மக்கள் வாக்களித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள 15 மாவட்டங்களில் குப்கர் கூட்டணியும், ஹிந்துக்கள் அதிகமுள்ள 5 மாவட்டங்களில் பாஜகவும் அதிகமாக வென்றிருப்பது, மக்களிடையே நிலவும் மதப்பிளவை வெளிக்காட்டுகின்றன. 

அனைத்துத் தரப்பினரும் ஏற்கத்தக்கவராக எந்த ஓர் அரசியல் கட்சியும் இப்போது அங்கில்லை. முன்னர் காங்கிரஸ் கட்சி அந்த இடத்தை ஜம்மு-காஷ்மீரில் பெற்றிருந்தது. தற்போது அக்கட்சி நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. 

ஜம்மு, காஷ்மீர் பிராந்தியங்களிடையிலான மத வேற்றுமையை மாற்றத்தக்க அரசியல் தலைமை அங்கு உருவாகும்போதுதான் அப்பகுதியில் உண்மையான ஜனநாயகம் மலரும். மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகளை ஜனநாயகப் பாதையில் ஒரு மைல்கல்லாக மட்டுமே கருத முடிகிறது; அனைவருக்கும் பொதுவான தலைவர்கள் உருவாவதே இறுதி இலக்காக இருக்கிறது.

தேர்தல் முடிவுகள்: ஒரு பார்வை
மொத்த இடங்கள் – 280
முடிவு அறிவிக்கப்பட்டவை – 278
குப்கர் கூட்டணி:
தேசிய மாநாடு    – 67
மக்கள் ஜனநாயகக் கட்சி – 27
மக்கள் மாநாடு    – 08
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 05
ஜ.கா. மக்கள் இயக்கம்    – 03
ஜ.கா. தேசிய சிறுத்தைகள்கட்சி    – 02
மொத்தம்: 112

பாஜக கூட்டணி:
பாஜக – 75
ஜ.கா. அப்னி கட்சி – 12
மொத்தம்: 87

பிறர்:
காங்கிரஸ் – 26
மக்கள் ஜனநாயக முன்னணி- 2
பகுஜன் சமாஜ் – 01
சுயேச்சைகள் – 50
மொத்தம்: 79

<!–

–>