ஜியோவின் மீதான நம்பிக்கை தொடருமா? ஏர்டெல்லின் புதிய முயற்சி வெற்றி பெறுமா?

ஜியோவின் வருகை இந்திய டெலிகாம் துறையில் நிறைய மாற்றங்களை விளைவித்தது. ஜியோ வழங்கிய சிறந்த திட்டங்களால் இன்று பலதரப்பட்ட மக்கள் அதற்கு வாடிக்கையாளர்களாகி பயனடைந்து வருகின்றனர்.

ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து வழங்கி வரும் அதிரடி சலுகை திட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் திணறி வருகின்றன. தங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க ஒவ்வொரு நாளும் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன.

சமீபத்தில் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சலுகை ஒன்றினை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பின்படி, இனி நவம்பர் 25-ம் தேதியிலிருந்து ஜியோ வாடிக்கையாளர்கள் 100% கேஷ் பேக் வாய்ப்பை பெற முடியாது.

ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக கடந்த மாதம் ஒரு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது நினைவில் இருக்கலாம். இதன்படி, உங்கள் ஜியோ எண்ணில் நீங்கள் 399 ரூபாய்களை ரிச்சார்ஜ் செய்தால், 400-க்கு திரும்பப் பெறுவீர்கள் என்பதுதான் அது. அதாவது நீங்கள் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அதற்கான கூப்பன்கள் கிடைக்கும். அதனை அடுத்த ரீசார்ஜ் சமயத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், நீண்ட காலமாக செயல்பட்டுவந்த இந்தத் திட்டத்தை இப்போது நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 25-க்குப் பிறகு, ஜியோவின் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இந்நிலையில் ஜியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட பார்தி ஏர்டெல் தயாராகி வருகிறது. சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிய வியூகங்களை வகுத்து அதனை அதிரடியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக, வெறும் ரூ.2,500-ரூ.2,700 விலையிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய ஏர்டெல் தயாராகி வருகிறது. இதற்காக அந்த நிறுவனம் பல்வேறு செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களிடம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. எந்தெந்த நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு, எதிர்கால சந்தை திட்டங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை. அதுவே நிறுவனத்தின் கொள்கையும் கூட என்பதை மட்டுமே ஏர்டெல் பதிலாக தருகிறது.

ஏர்டெல் இணையதள இணைப்புடன் குறைந்த விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விலை கொண்ட போன்களுக்கு நிகராக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போன், நவீனரக ஆண்ட்ராய்டு இயங்கு தளம், 1ஜிபி ரேம், இரட்டை 4ஜி சிம் வசதி, நான்கு அங்குல தொடுதிரை, இருபக்க கேமரா, வோல்டி அழைப்பு தொழில்நுட்பம், நீடித்து உழைக்கும் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என தெரிகிறது.

அந்த ஸ்மார்ட்போனுடன், வெகுஜன வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலான மிக குறைந்த விலையில் 4ஜி இணைப்பு, இலவச அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஜியோவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக ஏர்டெல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெலின் இந்த முயற்சி, வாடிக்கையாளர்களை சாதாரண செல்லிடப்பேசி பயன்பாட்டிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு தரம் உயர்த்தும் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

தொலைத் தொடர்பு சேவையில் தனது மேலாதிக்கத்தை செலுத்தி வாடிக்கையாளர்களிடம் அடாவடி கட்டண வேட்டையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டதற்கு ஜியோவின் வரவே அடிப்படை காரணம் என்பதும் மறுப்பதற்கில்லை.

<!–

–>