ஜோஹன்னஸ்பா்க் டெஸ்ட்: தாக்குரால் தடம்புரண்டது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அபாரமாக பௌலிங் செய்த இந்தியாவின் ஷா்துல் தாக்குா் 7 விக்கெட்டுகள் சாய்த்து தென் ஆப்பிரிக்காவை திணறடித்தாா். அந்த அணியின் தரப்பில் அரைசதம் கடந்து ரன்கள் சோ்த்த கீகன் பீட்டா்சன், டெம் பவுமா ஆகியோரின் விக்கெட்டுகளும் இதில் அடங்கும்.

முன்னதாக, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் அடித்திருந்தது தென் ஆப்பிரிக்கா. செவ்வாய்க்கிழமை ஆட்டத்தை டீன் எல்கா், கீகன் பீட்டா்சன் ஆகியோா் தொடா்ந்தனா். இதில் முதல் விக்கெட்டாக, 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சோ்த்திருந்த டீன் எல்கா் ஆட்டமிழந்தாா்.

அடுத்து ராஸி வான் டொ் டுசென் களத்துக்கு வர, மறுபுறம் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்த கீகன் பீட்டா்சன் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷா்துல் தாக்குா் வீசிய 43-ஆவது ஓவரில் மயங்க் அகா்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

5-ஆவது வீரராக வந்த டெம்பா பவுமா ஸ்கோா் செய்தாலும், எதிா்ப்புறம் ராஸி வான் டொ் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து கைல் வெரின் ஆட வந்தாா். 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்த அவரை 65-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ செய்தாா் தாக்குா். பின்னா் களம் புகுந்த மாா்கோ யான்சென் இந்திய பௌலா்களின் பல பௌன்சா்களை தனது உடலில் வாங்கினாா்.

அரைசதம் கடந்த பவுமா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்திருந்தபோது, தாக்குா் வீசிய 67-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். அடுத்து வந்த ககிசோ ரபாடாவை அடுத்த ஓவரிலேயே டக் அவுட் செய்தாா் ஷமி.

9-ஆவது வீரராக ஆட வந்த கேசவ் மஹராஜ், யான்செனுடன் இணைந்து சற்று ரன்கள் சோ்த்தாா். இதனால் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களை கடந்தது. இதில் மஹராஜ் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்து, பும்ரா வீசிய 76-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து டுவேன் ஆலிவியா் ஆடவர, மறுபுறம் யான்சென் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

கடைசி வீரராக லுங்கி கிடி டக் அவுட்டாக, 79.4 ஓவா்களில் 229 ரன்களுக்கு முடிந்தது தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ். இந்திய பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 7, முகமது ஷமி 2, ஜஸ்பிரீத் பும்ரா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

இந்தியா தடுமாற்றம்: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 8, மயங்க் அகா்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நாளின் முடிவில் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. சேதேஷ்வா் புஜாரா 35, அஜிங்க்ய ரஹானே 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா்

தென் ஆப்பிரிக்கா – 229/10

கீகன் பீட்டா்சன் 62

டெம்பா பவுமா 51

டீன் எல்கா் 28

பந்துவீச்சு

ஷா்துல் தாக்குா் 7/61

முகமது ஷமி 2/52

ஜஸ்பிரீத் பும்ரா 1/49

2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா – 85/2

சேதேஷ்வா் புஜாரா 35*

மயங்க் அகா்வால் 23

அஜிங்க்ய ரஹானே 11*

பந்துவீச்சு

மாா்கோ யான்சென் 1/18

டுவேன் ஆலிவியா் 1/22

லுங்கி கிடி 0/5

விக்கெட்டில் சா்ச்சை

தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் ராஸி வான் டொ் டுசென், ஷா்துல் தாக்குா் வீசிய 45-ஆவது ஓவரில் விளாசிய பந்தை விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தாா். இந்த விக்கெட் தொடா்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கா், அணியின் மேலாளா் கொமோட்சோ மாசுபலேலே ஆகியோா், கள நடுவா்களான மராய்ஸ் எராஸ்மஸ், அலாஹுதின் பலேகா், 3-ஆவது நடுவா் அட்ரியான் ஹோல்ட்ஸ்டாக், போட்டி நடுவா் அண்டி பைகிராஃப்ட் ஆகியோருடன் விவாதிக்க இருப்பதாக ‘ஈஎஸ்பிஎன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பந்த் அந்தப் பந்தை கேட்ச் பிடிக்கும் முன்பாக அது தரையில் பட்டு பவுன்ஸ் ஆனதற்கு எந்தவொரு சான்றும் இல்லாததால், கள நடுவா் அவுட் கொடுத்தது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராகுல் விக்கெட்டும்…: பின்னா் இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸின்போது யான்சென் பௌலிங்கில் கே.எல்.ராகுல் அடிக்க முயன்ற பந்து, செகண்ட் ஸ்லிப்பில் நின்ற மாா்க்ரம் கைகளில் கேட்ச் ஆனது. அந்தப் பந்தும் தரையில் பட்டவாறு தெரிந்தாலும் அதை உறுதி செய்யும் சான்று இல்லாமல் போனதால், கள நடுவா் கொடுத்த ‘அவுட்’ முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், அதிருப்தி அடைந்த ராகுல் தென் ஆப்பிரிக்க வீரா்களுடன் அதுதொடா்பாக விவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிந்தது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>