டாட்டூ போட்டுக்கறதுல மட்டுமில்லை அதை அழிக்கிறதுலயும் இந்தியா தான் ஃபர்ஸ்ட்! ஏன் தெரியுமா?

டாட்டூ கலாச்சாரம் பாட்டிகள் காலத்ததுன்னு நினைச்சுக்கிட்டிருந்தது ஒரு காலம். இப்போது டாட்டூ போட்டுக்கிறது ஃபேஷனோ ஃபேஷன். சமீபத்துல தமிழ்நாட்டுல டாட்டூ ஃபேஷன் மேலும் மும்முரமாகப் பரவ பிக் பாஸ் புகழ் ஓவியா, நமீதா முதல் காயத்ரி ரகுராம் வரை எல்லோருமே கூட ஒருவகையில் உதவினாங்கன்னு தான் சொல்லனும். பிக்பாஸ் வீட்டில் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக்கூட ரசிகர்கள் அத்தனை ஆர்வமாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களின் புறங்கழுத்திலும், தண்டுவடத்தின் துவக்கப் பகுதியிலும் வரைந்திருந்த அழகு டாட்டூக்களை நிச்சயம் மிஸ் செய்திருக்க மாட்டார்கள். இவங்க மட்டுமில்லை இந்தியாவில் டாட்டூ பிரியர்களாக நிறைய நடிகர், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். த்ரிஷா, நயந்தாரா, தீபிகா படுகோன், கரீன கபூர், எல்லோருமே டாட்டூ லவ்வர்ஸ் தான். த்ரிஷா பூலோகம்னு ஒரு படத்துல உடல் முழுவதுமே டாட்டூ வரைந்து நடித்திருந்தார். நயன்தாரா இன்னும் ஒரு படி மேலே போய் தன்னுடைய முன்னாள் காதலர் பெயரையே கையில் டாட்டூவாக வரைந்து வைத்திருந்தார். டாட்டூக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று தற்காலிகமானது எளிதில் அழிக்கக் கூடியது. இது கிட்டத்தட்ட பெயிண்டிங் மாதிரி. ஆனால் சில வகை டாட்டூக்கள் நிரந்தரமானவை அவற்றை அத்தனை எளிதில் அழித்து விட முடியாது. பெரும்பாலும் தீவிரமான காதலில் இருப்பவர்களே இப்படியான நிரந்தர டாட்டூக்களை வரைந்து கொள்வதுண்டு. 

சென்ற நூற்றாண்டில் நமது பாட்டிகளும், அம்மாக்களும், அக்காக்களும் கூட கையில் பச்சை குத்திக் கொள்வார்கள். கிராமத்தில் சில பாட்டிகள் பாவடையை தூக்கிக் கட்டிக் கொண்டு ஆற்றில் குளிக்கும் போது கண்டதுண்டு கை புஜங்களில் மகர மச்சம், காலின் ஆடுசதையிலும், முன் காலிலும் மறிமான்கள், புறங்கையில் அன்னப் பட்சிகள், நெற்றியில் நெற்றி வட்டம், என்று உடலில் வெயில் படும் வண்ணமிருக்கும் பகுதிகளில்  எல்லாம் பச்சை குத்தியிருப்பார்கள். இன்று வயதாகி தோல் வழண்டிருந்தாலும் கூட பார்க்க ஆச்சர்யமாக இருக்கும் அந்தப் பச்சை குத்தலில் இழையோடும் கலை நுணுக்கம். பாட்டிகளின் காலத்தின் பின் அம்மாக்கள் மற்றும் அத்தைகளின் காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பெயர்களையும், இனிஷியல்களையும் பச்சையாகக் குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் முன்கை சதைகளில் இந்த வகைப் பச்சைகள் இடம்பெறும். அதே சமயத்தில் தான் ஆண்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் சின்னங்களை கைகளில் பச்சையாகக் குத்திக் கொண்டு கொள்கப் பற்றோடு இருக்கும் வழக்கமும் இருந்து வந்தது. பிறகு அக்காக்களின் காலம் வந்தது அவர்கள் எளிமையாக கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் மேலுள்ள திரளான சதைப்பற்றில் கும்பம், பிறைச்சந்திரன், சூரியன், என்று பச்சை குத்திக் கொண்டார்கள். 

பிறகு இன்டர்நெட் யுகம் வந்து உலகம் சுருங்கி குளோபல் வில்லேஜ் ஆனதோ இல்லையோ… பச்சை குத்திக் கொள்ளல் என்ற பெயர் புழக்கமே இல்லாமல் ஒழிந்தது. அன்றைக்கு பச்சை குத்துதல் என்பது குறவன், குறத்திகளின் தொழில், வீட்டுக்கு வந்து பச்சை குத்தி விட்டு கூலியாக படி நெல்லும், கம்பும், கேழ்வரகும் வாங்கிச் செல்வார்கள், பழைய துணிகள் கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். ஆனால் இன்று அதையே டாட்டூ என்ற பெயரில் இயற்கை அல்லது செயற்கை வண்ணங்கள் கலந்து வரைந்து கொள்ள அழகு நிலையங்களில் குறைந்தபட்சம் சின்னதாக ஒரு டாட்டூ வரைந்து கொள்ளவே 5000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம். இப்படிச் சென்று கொண்டிருக்கிறது டாட்டூக்களின் கதை.

சரி அதை விடுங்கள்;

உலக அளவில் டாட்டூ வரைந்து கொள்வதில் இந்தியாவிற்குத்தான் முதலிடம். போலவே ஆசைப்பட்டு வரைந்த டாட்டூக்களை மனம் வலிக்க வலிக்க அழித்துக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் அதிகம், இந்தியா தான் அதிலும் முதலிடம் வகிக்கிறது என இண்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜன்ஸ் அஸோசியேஷன் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் டாட்டூ அழித்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜன்களை நாடியவர்களின் எண்ணிக்கை நாடு வாரியாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டாட்டூ நீக்கியவர்களின் புள்ளி விவரம்

  1. இந்தியா 22,860
  2. ஜப்பான் 20,159
  3. அமெரிக்கா 14,124
  4. இத்தாலி 11,356
  5. தைவான் 5,759
  6. மெக்சிகோ 4,739
  7. பிரேசில் 4,290
  8. துருக்கி 3,912
  9. எகிப்து 3,640
  10. கொலம்பியா 2,715

டாட்டூ நீக்குவதற்கான காரணம்…

மிக, மிக எளிதான ஒரு காரணம் மட்டுமல்ல வழமையான ஒரு காரணமும் கூடத்தான். சர்வதேச அளவில் டாட்டூக்களை நீக்குவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் ஒரே காரணம்… முன்னால் காதலன் அல்லது காதலி பெயர்களையோ அல்லது இனிஷியல்களையோ தான் பச்சை குத்திக் கொண்டிருப்பதால் காதல் தோல்வி அல்லது முறிவுக்குப் பின் அந்த டாட்டூக்களை தொடர்ந்து மெயிண்டெயின் செய்வதில் பல்வேறு அகச்சிக்கல்கள் இருப்பதால் ஒரேயடியாக அவற்றை அழித்து விடப் பார்க்கிறார்கள் என்பதே! 

<!–

–>