தப்பித்தாரா சிவகார்த்திகேயன்? : 'டாக்டர்' – திரைப்பட விமரிசனம்

 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் இன்று (அக்டோபர் 9) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 

ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவராக சிவகார்த்திகேயன்.  சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்கா மோகனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்படுகிறது. ஆனால் எதனையும் மிக சரியாக செய்யும் சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போக, திருமணத்தை நிறுத்துகிறார் பிரியங்கா. இந்த நிலையில் பிரியங்காவின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறார். அவரை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் மிக அலட்சியமாக செயல்படுகின்றனர். 

அவரைக் கண்டுபிடிக்க சிவகார்த்திகேயன் உதவ முயல, சென்னையில் தொடர்ச்சியாக சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து பிரியங்கா மோகனின் குடும்பத்தை வைத்துக்கொண்டு கடத்தப்பட்ட சிறுமிகளை சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. 

இராணுவத்தில் பணிபுரியும் ஒரு மருத்துவரால், குழந்தைக் கடத்தல் கும்பலை, அதுவும் சாதாரண குடும்பத்தினரை வைத்துக்கொண்டு எப்படி மீட்க முடியும் என்ற கேள்வி எழும்படியான கதை. படத்தில் குழந்தைகளை காப்பாற்ற சிவகார்த்திகேயனும் பிரியங்காவின் குடும்பத்தினரும் மேற்கொள்ளும் செயல்களிலும் நம்பகத்தன்மை குறைவு.

ஆனால்…, ஆனால் படம் முழுக்க நகைச்சுவைக் காட்சிகள் மற்றும்  சுவாரசியமான திருப்பங்களுடன் நம்மை திருப்திப்படுத்திவிடுகிறார் இயக்குநர் நெல்சன். 

படத்தின் முக்கிய சிறப்பம்சம் படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள். உணர்வுபூர்வமான காட்சிகள்கூட நகைச்சுவை கலந்துதான் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி நகைச்சுவையுடன் சொல்லப்படும்போது அந்த காட்சிகளின் வீரியம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும்  நடந்துவிடாமல் திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதுவும் முதல் பாதி முழுக்க நகைச்சுவையாக செல்வதால் எல்லோராலும் படத்துடன் இலகுவாக ஒன்றிவிட முடிகிறது. நன்றாக வாய்விட்டு சிரிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் இல்லையெனினும், நம் முகத்தில் சிறிதாக புன்னகை எட்டிப்பார்க்கும் படியான காட்சிகள் தான் படத்துக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. 

இப்படி முதல் பாதியில் முன்பே கணிக்க முடியாத காட்சிகள் நகைச்சுவை வசனங்களினால் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் அப்படிப்பட்ட காட்சிகள் குறைவு. படத்தில் முதல் பாதியில் வரும் காட்சிகள் சூது கவ்வும், தெலுங்கு கேங் லீடர், நெல்சனின் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை நினைவுபடுத்தினாலும் ரசிக்கும்படி இருந்தது. இரண்டாம் பாதியில் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சி படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாமல் வேகத் தடையாக தோன்றியது. படத்தின் நேரத்தைக் கடத்த அந்தக் காட்சியை இயக்குநர் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது.

நெல்சன் படத்துக்காக அளித்த பேட்டிகளில் வழக்கமான சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் காண முடியாது என்று சொல்லியிருப்பார். உண்மைதான். இதுவரை நாம் பார்க்காத சிவகார்த்திகேயனை படத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமாக எல்லா படங்களிலும் நகைச்சுவையான முகபாவனைகள், வசனங்கள் என நம்மை முக பாவனைகள் என சிரிக்க வைக்க முயல்வார்.

அவரது துவக்க காலப்படங்களில் அது சிரிக்கும்படி இருந்தாலும், கடைசியாக வெளியான அவரது படங்களில் அவர் ஒரே மாதிரியாக நடிப்பதாக எண்ணம் தோன்றியது. ஆனால் இந்தப் படத்தில் தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறி நடித்திருக்கிறார். நகைச்சுவை வசனங்கள் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான வசனங்களையும், முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

சமீபத்தில் இயக்குநர் பொன் ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் உருவாகும். ஆனால் சிவகார்த்திகேயன் முதிர்ச்சியான நடிகராக மாறிவிட்டதால் வேறு இளம் நடிகர் அவரது வேடத்தில் நடிப்பார் என்று சொல்லியிருந்தார். அது டாக்டர் படத்தைக் காணும்போது இயக்குநர் பொன்ராமின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். 

சிவகார்த்திகேயனுக்கு பதில் படத்தில் வரும் அனைவரும் நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனர். யோகி பாபு ஒரு பக்கம் தனது வசனங்களால் சிரிக்க வைக்க, கிங்க்ஸ்லேதான் இந்தப் படத்தை தனது அப்பாவியான செய்கைகளால் படத்தைத் தாங்கி படித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் முதன்மை நகைச்சுவை நடிகரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டிருக்கிறார் கிங்ஸ்லே. 

அவருக்குப் பிறகு கவனிக்க வைப்பது தீபா. தீபாவின் வசன உச்சரிப்பும் முக பாவனைகளும் ஆங்காங்கே வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கதாநாயகி பிரியங்காவும் தன் பங்குக்கு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே படம் கதைக்குள் பயணிக்கத் துவங்கிவிடுவதால் சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்காவிற்கும் காதல் காட்சிகள் குறைவு. ஆனாலும் தனது அழகாலும், சிறப்பான நடிப்பாலும் மனதில் பதிகிறார் பிரியங்கா. 

மேலும் அர்ச்சனா, இளவரசு, அருண் அலெக்சாண்டர், ரகுராம், மிலிந்த் சோமன் என படத்தின் பிற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கின்றனர். படத்தின் வில்லனாக வினய். இரண்டாம் பாதியிலேயே வருகிறார். வழக்கமான வில்லன்களை நினைவுபடுத்தும் அவரது நடிப்பும், புதுமையில்லாத நாம் பார்த்து பழக்கப்பட்ட அவரது கதாபாத்திர வடிவமைப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. அவரது கதாப்பாத்திர வடிவமைப்பும் இரண்டாம் பாதி திரைக்கதையில் தொய்வு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. வினய்யின் பின்புலன் இன்னும் விரிவாக சொல்லப்பட்டிருந்தால் ஒருவேளை அவரது காட்சிகள் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம். 

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும், இசையமைப்பாளர் அனிருத்தும்  மிக சிறிய படத்தை, மிக பிரம்மாண்டமானதாக மாற்ற உதவியிருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கேமரா கோணங்கள், நேர்த்தியான காட்சி வடிவமைப்பு என தன் பங்குக்கு சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். அவரது திறமைக்கு  படத்தில் இடம்பெற்ற மெட்ரோ ரயில் சண்டைக்காட்சி ஒரு சான்று.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பெரிய வெற்றி பெற்றுவிட்டன. படத்திலும் சரியான இடத்தில் அது இடம் பெறுவதால் அனிருத்தின் பாடல்கள் படத்துக்கு பெரிதும் கைகொடுத்திருக்கின்றன என்றே சொல்லலாம். தனது பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் அனிருத். 

வழக்கமாக ஜனகரஞ்சமான படங்களில் பயன்படுத்தப்படும் யுக்திகளை முடிந்தவரை தவிர்த்திருக்கிறார் நெல்சன். குறிப்பாக கதாநாயகன் – வில்லன் மோதிக்கொள்ளும் காட்சிகள் வழக்கமான முறையில் நிறைய சண்டைக்காட்சிகளுடன் படமாக்காமல் சற்று மாற்றியமைத்திருப்பது நல்ல முடிவு. பரபரப்புடன் நகரும் இரண்டாம் பாதியில், சரியான இடத்தில் செல்லம்மா பாடலை இடம் பெறச் செய்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது. நம்ப முடியாத, ஏற்கெனவே பழக்கப்பட்ட கதைக்கு, தனது நகைச்சுவை மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் திரைக்கதையை அமைத்து ரசிக்க வைத்திருக்கும் விதத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

நெல்சன் தற்போது நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இதனால் டாக்டர் படத்தின் முடிவுக்காக நடிகர் விஜய்யின் ரசிகர்களும் காத்திருந்தனர். டாக்டர் படத்தின் முடிவு நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

தப்பித்தார் சிவகார்த்திகேயன், தக்க வைத்துக்கொள்வார் ரசிகர்களை!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>