தமிழக, புதுவை வானொலி நிலையங்களை மூடக் கூடாது: பாதுகாப்புக் குழு

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் ஐந்து வானொலி நிலையங்கள்  மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வானொலி பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றிக் குழுவின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் அகில இந்திய வானொலி  இயக்குநருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொ.இராஜமாணிக்கம் மனுவொன்றையும்  அளித்துள்ளார்.

“தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,  கோயம்புத்தூர் ஆகிய ஐந்து நிலையங்களும் புதுச்சேரியில் ஒரு வானொலி நிலையமும் மத்திய அலைவரிசையில் இயங்கும் சுயசார்பான வானொலி நிலையங்கள்.

இதையும் படிக்க.. தமிழகத்தில் 5 வானொலி நிலையங்களை மூடுவதை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு எம்.பி. வலியுறுத்தல்

“தற்போது இந்த வானொலி நிலையங்களின் சுய செயல்பாடுகளை நிறுத்தி, சென்னை வானொலி நிலையத்தின்  நிகழ்ச்சிகளை  அஞ்சல் செய்யும் நிலையங்களாக மாறுவதாக சென்ற ஆண்டு  அறிவிப்பு வந்தது.

“இதை எதிர்த்து வானொலி நேயர்கள், எழுத்தாளர்கள்  படைப்பாளர்கள், ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினர். இதனால், பிரசார் பாரதி சென்ற வருடமே இது தவறான செய்தி என்று மறுத்திருந்தது. ஆனால், மீண்டும் தற்போது சென்னை தவிர பிற வானொலி நிலையங்களை மூடுவதாகத் தெரிகிறது.

“சென்னை, திருச்சி வானொலி நிலையங்கள் நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டவை. அதன் பின் பிற வானொலி நிலையங்கள்  தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தொடங்கப்பட்டன.

இதையும் படிக்க.. புதுச்சேரி வானொலி நிலையத்தை மூடக் கூடாது: புதுவைத் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

“அனைத்து வானொலி நிலையங்களும் தற்போது சுயமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பி வருகின்றன. ஆனால், புதிய திட்டப்படி சென்னை வானொலி நிலையத்தில்  மட்டும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுப்  பிற எல்லா வானொலி நிலையங்களும் அதை நேரடி ஒலிபரப்பு செய்யும் நிலைக்கு மாற்றப்பட உள்ளன.

“ஒவ்வொரு வானொலி நிலையமும் வெவ்வேறு பகுதிகளில் செயல்படுகின்றன. அந்தந்தப் பகுதிக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பி வருகின்றனர். இதனால் இந்த வானொலி கேட்கும் மாவட்டங்களின் சிறப்புத் தன்மை வெளிக் கொணரப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களுக்கான தகவல்களும் சிறப்பாக  அளிக்கப்பட்டு வருகின்றன.

“குறிப்பாக, விவசாய நிகழ்ச்சிகள் டெல்டா மாவட்டங்களுக்கேற்ப திருச்சி வானொலி நிலையம் மூலமாகவும்; மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் விவசாயிகளுக்கேற்ப மதுரை வானொலி மூலமும் தயாரித்து வழங்கப்படுகின்றன.

பெண்கள் நிகழ்ச்சிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள பெண்களின் திறன்களை வெளிக்கொணர உறுதுணை புரிகின்றன. அதுபோன்றே இளைஞர் நிகழ்ச்சி, குழந்தைகள் நிகழ்ச்சி, நாட்டுப்புறக் கலைஞர் நிகழ்ச்சிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள் என எண்ணற்ற நிகழ்ச்சிகள் அந்தந்தப் பகுதியில்  காணப்படும் மனித வளங்களை வெளிக்கொணரவும் ஊக்குவிக்கவும் பெரும் உதவி செய்கின்றன.

“இதுபோன்று  மாவட்டம் சார்ந்த பல்வேறு திறன்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை ப் போதிய அளவில் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில்  இந்திய  ஒலிபரப்புத் துறை ஒரு மாநிலத்திற்கு ஒரு வானொலி நிலையம், ஒரே இடத்தில் தயாரிப்பு, ஒரே நிகழ்ச்சியை எல்லா வானொலி நிலையங்களும் ஒலிபரப்பு செய்வது என்பது மிகவும் அறிவியல்பூர்வமற்ற செயலாகும்.

” தற்போது வானொலி நிலைய ஒலிபரப்புகளை ஸ்மார்ட் ஃபோன் மூலம் கேட்கும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் வானொலி நிலையங்களைப் படிப்படியாக மூடும் நிலைக்கு மத்திய அரசு செல்வது ஏற்புடையதல்ல.

“ஏற்கெனவே ஒவ்வொரு வானொலி நிலையத்துக்கும் ஒரு நிலைய இயக்குநர்  இருந்த சூழலில் தற்போது சென்னையில் மட்டும் ஒரு நிலைய இயக்குநரும் பிற வானொலி நிலையங்களில்  உதவி இயக்குநர் அல்லது தலைமை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்ற அளவில் பொறுப்புகள் குறைக்கப்பட்டுவிட்டன. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உரிய தயாரிப்பாளர்களும் இல்லை. மிக்க குறைந்த மனித வளத்துடன் இயங்குவதாகவும் அறிகிறோம். ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு  இயக்குநரும் நிகழ்ச்சிகளுக்கு உரிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுச் செயல்பட வேண்டிய சூழலில், வானொலி நிலையங்களைச் செயல்படாமல் நிறுத்தும் சூழலை பிரசார் பாரதி செய்து வருகிறது.

“எனவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் ஆறு வானொலி நிலையங்களும் சுயமாக இயங்கும் வானொலி நிலையங்களாகத் தொடர்ந்து செயல்பட  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று குழுவின் ஒருங்கிணைப்பாளர்    பொ. இராஜமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>