தமிழும் பாஸ்க் மொழியும் புனித சவேரியாரும்

இன்று புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாள்! 

தூய சவேரியார், ஸ்பெயின் நாட்டின் நவாரே பகுதியில் உள்ள பாம்ப்லோனா நகரத்தின் அருகே பிறந்தவர்.

அவர், ‘பாஸ்க்‘ (Basque) என்ற இனத்தைச் சேர்ந்தவர். ‘பாஸ்க்‘ என்ற மொழியைப் பேசியவர்.

உலகத்திலேயே மிக விந்தையான, கடினமான மொழிகளில் இந்த பாஸ்க் மொழியும் ஒன்று. அவ்வளவு எளிதாக யாரும் கற்றுக் கொண்டு ‘பாஸ்‘ ஆக முடியாத மொழி, இந்த பாஸ்க் மொழி.

‘பாஸ்க் மொழியைக் கற்றுக்கொண்டால் பாஸ்க் இன மக்களின் ஆன்மாக்களைக் கைப்பற்றி விடலாம்‘ என்று சைத்தான் ஒருமுறை பாஸ்க் மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றதாகவும், அது கடினமான மொழி என்பதால் பாதியில் அந்த முயற்சியை கைவிட்டதாகவும் கூட ஒரு கதை உண்டு.

இத்தனைக்கும் சைத்தானை மிகப்பெரிய அறிவாளி என்பார்கள். அந்த சைத்தானே கூட கற்க முடியாமல் அரைவாசியில் அப்பீட் ஆகிவிட்ட மொழி பாஸ்க் மொழி.

தமிழர்களைப் போலவே பாஸ்க் மக்களுக்கும் ஒரு மொழி, ஒரு நிலப்பரப்பு, ஒர் உளவியல் சார்ந்த பண்பாடு அனைத்தும் உள்ளன. தனிநாடுதான் இல்லை.

பிரான்ஸ் நாட்டையும், ஸ்பெயின் நாட்டையும் பிரிக்கும் பிரனீஸ் (Pyrenes) மலையின் இருபக்கமும் பாஸ்க் இன மக்கள் வாழ்கிறார்கள்.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள மொழிகள், பெரும்பாலும் ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், ரஷிய மொழி போன்ற இந்தோ ஐரோப்பிய மொழிகளாகவே இருக்கும் என்பது எழுதப்படாத வரலாற்று விதி. இந்த, ‘இந்தோ ஐரோப்பிய‘ மொழிகள், இந்தியத் தலைநகரம் தில்லியில் இருந்து, அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் வரை பேசப்படுகின்றன.

ஆனால், புனித சவேரியாரின் தாய்மொழியான பாஸ்க் மொழியோ, இந்தோ ஐரோப்பிய மொழிக்கூட்டத்தைச் சேராத, ஏன்? ஐரோப்பாவுக்கே முற்றிலும் தொடர்பில்லாத ஒரு தனிமொழி.

கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தோ ஐரோப்பியர்கள் கிழக்கில் இருந்து படையெடுத்து வந்தபோது மலைகளின்மேல் ஏறி தப்பித்துக் கொண்ட மகத்தான மொழி அது.

பாஸ்க் மக்கள் வாழும் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாட்டின் மொழிகளான ஸ்பானிஷ்சும், பிரெஞ்சும் லத்தீன் மொழியில் இருந்து தோன்றியவை. ஆனால், பாஸ்க் மொழி எப்படித் தோன்றியது என்பது கடவுளுக்கே வெளிச்சம். இந்தியப் பெருங்கடலில் இருந்து அழிந்து போன நமது குமரிக் கண்டம் (லெமூரியா) போல, அட்லாண்டிக் மாகடலில் இருந்து மறைந்துபோன ‘அட்லாண்டிஸ்‘ கண்டத்தின் மொழி பாஸ்க் மொழி எனவும் கருதப்படுகிறது.

இப்போது கதைக்கு வருவோம். தூய சவேரியாரின் தாய்மொழியான பாஸ்க் மொழிக்கும் நமது தாய்மொழியான தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. தமிழில் ‘அம்மா‘ என்ற சொல், பாஸ்க் மொழியிலும் ‘அம்மா‘தான்.

அண்ணன், ஆள், உடல், மூக்கு, கள்ளன், குறு (சிறிய), அழல் (அழுகை) உப்புதல் (வீக்கம்) வியர்வை, கொதி, பனி, இரு, உள், அலசு, கரை, மடி (இறத்தல்) போன்ற எண்ணற்ற சொற்கள் தமிழிலும், பாஸ்க் மொழியிலும் ஒரே மாதிரியாகவே ஒலிக்கின்றன.

இந்தோ ஐரோப்பிய மொழிப்பரவலுக்கு முன் தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரை தமிழ்மொழியே பரவிக்கிடந்தது. தமிழின் எஞ்சிய ஒரு துண்டம்தான் இந்த பாஸ்க் மொழி. இத்தாலியின் தஸ்கனி, கிரீஸ் நாட்டின் கிரீட் தீவு உள்பட தமிழ் மொழியின் எச்சசொச்சங்கள் நிறைந்த எல்லா பகுதிகளிலுமே தென்னவரான தமிழருக்கே உரித்தான தாய் தெய்வ வழிபாடு இன்றும் நிலவுகிறது.

தென் ஐரோப்பிய ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களால் வணங்கப்படும் ‘பிளாக் மடோனா‘ எனப்படும் அன்னை மேரியின் திருவுருவம், மதுரை அங்கயற்கண்ணியின் (மீனாட்சி அம்மையின்) திருவுருவம் போன்றது.

புனித சவேரியார் மதம் பரப்ப, தமிழகத்துக்கு வந்தபோது தன் தாய்மொழியான பாஸ்க் மொழிக்கும், தமிழுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை உணர்ந்திருப்பார். அதனால், தமிழர்கள்பால் குறிப்பாக தமிழ்பேசிய தென்கடல் பரதவர்கள் பால் அவர் ஈர்க்கப்பட்டிருப்பார்.

பெஸ்காரியா எனப்படும் முத்துக்குளித்துறையை தனது தாய்வீடாகவே அவர் உணர்ந்திருப்பார். அதனால், ‘செம்புல பெயல்நீர் போல‘ அதாவது, செம்மண்ணில் கலந்த தண்ணீர் போல, அவரது அன்புடைய நெஞ்சம் பரதவ மக்களுடன் ஒன்று கலந்தது.

தூய சவேரியார், இறைபணியும், சமூகப் பணியுமே செய்தார். ஆயர் இராபர்ட் கால்டுவெல் போல அவர் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்‘ எழுதவில்லை. அல்லது இத்தாலியின் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி எனப்படும் நமது வீரமாமுனிவரைப் போல ‘தேம்பாவணி‘ போன்ற தீந்தமிழ்க் காவியத்தை அவர் வடிக்கவில்லை. ஜி.யு. போப் போல திருக்குறளை மேற்கத்திய மொழியில் அவர் மொழிபெயர்க்கவும் இல்லை.

ஆனாலும் என்ன? ‘பெரிய தகப்பன்‘ என்று பெருமையோடும், உரிமையோடும் சவேரியார் இன்றும் அழைக்கப்படுகிறார். அந்தப் பெருமை வேறு யாருக்கும் கிட்டவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!

மீண்டும் நினைவூட்டல்! இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் திருநாள்!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>