தயவு செய்து இவற்றையெல்லாம் பாத்திரம் தேய்க்கும் சிங்க், வாஷ்பேசினில் போடாதீர்கள்!

ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்து, நல்ல முறையில் வீட்டிற்கு இணக்கமாக இருந்தால், வந்த புதுப்பெண் நன்றாக குப்பை கொட்டுகிறாள் என்று
சொல்வார்கள். எதை நினைத்து  அப்படி சொன்னார்களோ புரியவில்லை. ஆனால் இன்றைய நாட்களில், பெண்கள், குப்பையை மட்டும் அல்ல, எல்லாவற்றையும், சிங்க் கண்ணில் படும் எல்லா இடங்களிலும் கொட்டுவதுதான் வேதனையைத் தருகிறது. 

பெண்களைப் பொறுத்தவரை, சமையல் அறை சிங்க் என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. சாதாரணமாக, கை கழுவ, பாத்திரம் தேய்க்க, காய்கறி சுத்தம் செய்ய போன்ற உபயோகங்களைத் தவிர அதில் செய்யப்படும் அழிச்சாட்டியங்கள் கணக்கில் அடங்காது. 

அதற்கு வாய் மட்டும் இருந்தால், ‘என்னை விட்டுடுங்க’ என்று கதறிக்கதறி அழுதுவிடும். ஒரு தாய்,  குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக, சாதத்தில் பருப்பைக் கொட்டி, நெய்யையும் நிறைய ஊற்றி, பிசைந்து கொண்டு வருவாள். சாதத்தை இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவது வாய் சாப்பிடும் பொழுது, வாந்தி எடுக்கத் தொடங்கிவிடும். குழந்தையை இரண்டு சாற்று சாற்றி விட்டு, மீதம் உள்ள சாதத்தை வழித்து அப்படியே சிங்க்கில் கொட்டி விட்டு குழாயையும் திறந்து விட்டு சாதப்பருக்கைகள் சுத்தமாகி விட்டதா என்று தான் கவனிப்பாள், அந்தத் தாய். 

சிங்க்கில் சுத்தம் செய்யும் பொருட்டு, தண்ணீரை  ஊற்றும் பொழுது, சிங்க்கில் தெரியும் பண்டங்கள் தண்ணீருடன் கலந்து குழாய் வழியாக இறங்கிவிடுகிறது
என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாமே தண்ணீருடன் சுலபமாக குழாயில் இறங்குவதில்லை. அரிசி, சாதம், பாஸ்தா போன்றவை ஊறும் தன்மை உடையவை. சிங்க்கிலிருந்து நேராகக் கீழே இறங்காமல் பாதியில் அடைத்துக் கொண்டு இருக்கும்.

சப்பாத்தி, பூரி போன்ற மாவுப்பண்டங்களை உபயோகித்த மீதியை சிங்க்கில் கொட்டி, தண்ணீரைக் கொட்டி விடுகிறோம். மாவு தண்ணீருடன் சேர்ந்தால், அதற்கு ஒரு பிசுக்குத்தன்மை வந்துவிடும். இது கழிவுக் குழாயில் ஒட்டிக்கொண்டு, நீரைக்கூட வெளியேற்றாமல் தடுத்து நிறுத்தும். முட்டை உபயோகிப்பவர்கள், சிறு சிறு முட்டை ஓட்டுத் துகள்களை சிங்க்கில் போட்டு விடுவார்கள். அவை கழிவு நீர்க் குழாய்களில் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு பிரச்னை கொடுக்கும்.

பழங்கள் போன்ற உணவுப்பண்டங்களில் இருக்கும் ஸ்டிக்கர்களை சிங்க்கில் போடக்கூடாது. அவைகளில் இருக்கும் பசைத்தன்மை கழிவுக் குழாய்களில் நன்றாக ஒட்டிக்கொண்டு, கழிவு நீரை வெளியேற்றாது. 

இவற்றையெல்லாம் விட முக்கியமாக மிஸ்டர் முடி இருக்கிறாரே, அவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தலையை வாரி, எவ்வளவு ஜாக்கிரதையாக முடியைக் குப்பைத் தொட்டியில் போட்டாலும், அது எப்படியோ சிங்க் முதல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். 

சிங்க் கழிவு நீர்க் குழாயில் தங்கும் முடியானது, ஒரு சிறிய பந்தாக உருவெடுத்து, வடிகட்டி போல் செயல்படத் தொடங்கிவிடும். ஆகையால் கசடுகள் அப்படியே தங்கிவிடும். அவை பார்ப்பதற்கே அருவருப்பாக இருப்பதுடன் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். 

சிங்க் மட்டுமல்ல, டாய்லெட்டில் உள்ள பீங்கான் ஒதுக்கிடத்தையும் (க்ளாசெட்) ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். மாதவிலக்கு நாட்களில், பெண்கள், உபயோகிக்கும் சானிட்டரி நாப்கின்களை, உபயோகித்த பிறகு பீங்கானில் போட்டு அப்படியே ஃப்ளஷ் செய்வது தவறான செய்கையாகும். அதில் இருக்கும் பஞ்சு, நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதில் இருக்கும் பிளாஸ்டிக்கோ மக்காத தன்மை கொண்டது. இரண்டும் சேர்ந்து அடைத்துக் கொண்டால், மலக்கழிவுகள் வெளியேறாது. 

அடுத்து, ஆணுறை சாதனம். இதை உபயோகிப்பவர்கள், கண் மறைவாக கழிப்பதாக எண்ணிக்கொண்டு, டாய்லெட் பீங்கானில் போட்டுவிடுவார்கள். ஆணுறையானது, விரிந்து கொடுக்கும் தன்மையை உடையது. அதில் கழிவுகள் தங்கிவிட்டால் சுலபமாக அடைப்பு ஏற்பட்டுவிடும். மேலும் இவை ‘லாடெக்ஸ்’
என்னும் பொருளால் உருவாக்கப்படுவதால், இவைகளுக்கு கரையும்தன்மை கிடையாது. சிறிய தவறுகள் பெரிய செலவுகளை உண்டாக்கிவிடும். 

மக்கும் குப்பை, மக்காத குப்பை, திடக்கழிவுகள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவது நன்மையைப் பயக்கும். இல்லாவிட்டால் கழிவுக் குழாய்களை உடைத்துவிட்டு செப்பனிட வேண்டிவரும். நேரமும், பணமும் விரயமாவதுடன், நோய்களுக்கும் வந்து சேரும். 

ஆகையால் வாசகர்களே, சிறிது சோம்பேறித்தனத்துக்கு குட் பை சொல்லிவிட்டு, சமயோசிதமாகச் செயல்படுங்கள். சிங்க்கை மட்டுமல்லாமல் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள்.

<!–

–>