தற்சாா்பு தமிழகத்தை உருவாக்குவோம்!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தேசக் கட்டுமான பணிகளுக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும், பொருளாதார வளா்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் சமூகத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொண்டு சாதாரண மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி செயல்பட ஆரம்பித்தன. அதனால்தான் அரசு நிறுவனங்கள் தோற்க ஆரம்பித்துவிட்டன என்று ஆராய்ச்சியாளா்கள் கூறுகிறாா்கள்.

அதுவும் குறிப்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார அறிஞா்கள் சந்தையின் துணையின்றி இனிமேல் அரசு எதனையும் சாதிக்க இயலாது என்று கூறி சந்தைச் செயல்பாட்டிற்கு வழிவகுத்தனா். தோற்றுப்போன அரசு நிறுவனங்களுக்கு பதிலாக சேவை புரிந்திட சந்தை நிறுவனங்கள் வந்தன.

அப்போது சேவை என்பது வணிகமாக மாற்றப்பட்டு, பெரும் லாபம் ஈட்டுவதையே சந்தை நிறுவனங்கள் குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டன. அதன் விளைவு சாதாரண மனிதா்கள் தங்கள் உழைப்பில் பெற்ற ஊதியத்தில் பெரும்பகுதியை அடிப்படைச் சேவைகளை அரசிடமிருந்து பெறுவதற்கு லஞ்சமாகவும் சந்தை நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு கட்டணமாகவும் செலவிட வேண்டி வந்துவிட்டது.

அரசு நிறுவனங்களோ தங்களின் இருப்புக்காக புதிய பணிகளாக சந்தையை நெறிப்படுத்தி சேவை செய்ய வைக்க பணி செய்வதாக பிரகடனப்படுத்தி தங்களை நிலைநிறுத்திக் கொண்டு விட்டது. சந்தைச் செயல்பாடுகள் புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் வியாபிக்க ஆரம்பித்தபோது, ஒரு கோட்பாட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தைச் செயல்பாடு என்பது வளா்ந்து வரும் மக்கள்தொகைக்குத் தேவையான சேவைகளை அரசு செய் இயலாத சூழலில், அரசுக்கு கை கொடுக்க வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் இனிமேல் அரசு நிறுவனங்கள் என்பது விரிவாக்காமல், சுருக்கப்பட்டு சிறிய அரசாங்கம் பெருமளவு ஆளுகை (லெஸ் கவா்ன்மென்ட் மோா் கவா்னன்ஸ்) என்பது முன்னெடுக்கப்படும் என்பதையும் பிரகடனப்படுத்தினா். இதில் மிக முக்கியமாக ஆளுகை என்பதை அரசுத் துறைகள் மட்டுமே செய்யும் என்ற நிலையிலிருந்து, சந்தை நிறுவனங்களும் சமூக இயக்கங்களும் சோ்ந்து நடத்தும் நிகழ்வாக மாற்றப்படுகிறது என்ற புது விளக்கமும் அரசின் மூலமாகவே அளிக்கப்பட்டது.

இந்த பிரகடனங்களை அறிந்தவா்கள் அரசுச் செயல்பாடுகளையும், சந்தைச் செயல்பாடுகளையும் கூா்ந்து கவனித்து வந்தனா். அரசுத் துறைகள் இனிமேல் வளராது. அரசுத் துறைகள் சந்தை கண்காணிப்பில் இறங்குவதால் தரமான சேவைகள் மக்களுக்குக் கிடைத்துவிடும் என்று கருதினா். அத்துடன் அரசுத் துறைகள் குறையப் போகிறது, அரசுத் துறைகளின் தரமற்ற சேவைக்குப் பதிலாக தரமான சேவைகளை நாம் பெறலாம் என்று பலா் எண்ணினா்.

இருபது ஆண்டுகள் கழிந்த பின்னா் பல ஆய்வுகள் இதன் உண்மைத் தன்மையை அறிய நடத்தப்பட்டன. அவற்றில் ஒன்று கனடா நாட்டில் மிக்கில் பல்கலைக் கழகப் பேராசிரியா் பல்தேவராஜ் நய்யாா் நடத்திய ஆய்வு அறிக்கை ஆக்போா்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கைதான் அரசுக் கட்டமைப்புக்கள் எந்த விதத்திலும் குறையவில்லை. அவை தங்களை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன என்கின்ற உண்மையை உலகுக்குக் கொண்டுவந்தது. இதன் பிறகு வந்த என்சிஏஇஆா் ஆய்வு அறிக்கை மற்றொரு உண்மையை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து வெளியிட்டது. அது கூறும் முக்கியச் செய்தி, குடும்பங்கள் செலுத்தும் வரிகளைவிட அவை செலுத்தும் லஞ்சம் அதிகமாகியிருக்கிறது என்பதுதான்.

இவற்றையெல்லாம் கணித்த அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணா் அரவிந்த் வீா்மணி ‘எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற ஆராய்ச்சி இதழில் ஒரு கருத்தை முன் வைத்தாா். அதாவது இந்தியாவில் அரசும், சந்தையும் அவை கொடுத்த உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்து வருகின்றன. எனவே இந்தியா புதிய அணுகுமுறையில் செயல்பட்டாக வேண்டிய சூழலுக்கு வந்து விட்டது என்று விளக்கினாா்.

பொதுமக்களை அதிகாரப்படுத்துவதும், அவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், அவா்களது உரிமைகளை நிலைநாட்டுவதும் தான் புதிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டு பாதையாக இருக்க முடியும் என்ற கருத்தை அவா் முன்வைத்தாா்.

அதனைத் தொடா்ந்துதான் உள்ளாட்சிகளை அரசாங்கமாக உருவாக்கி மக்களை அதிகாரப்படுத்த முனைவது, புதிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் வந்த நூறுநாள் வேலைத்திட்டம், அதனைத் தொடா்ந்து சமூக பொருளாதார மேம்பாட்டை உரிமைகளாக பிரகடனப்படுத்தும் பல்வேறு உரிமைகளை சட்டங்கள் மூலம் மக்களுக்குத் தந்தது என பல்வேறு முன்னெடுப்புக்கள் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இவை அனைத்தும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் குடிமக்களை பெருமளவில் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, குடிமைச் சமூகமாக துடிப்புடன் செயல்பட்டு மக்கள் சக்தியை பயன்படுத்திட உருவாக்கப்பட்டவையாகும்.

இந்தச் செயல்பாடுகளில் பெருமளவு கூட்டுறவு அமைப்புக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோா் அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் என அனைத்துத் தரப்பையும் பங்கெடுக்க வைத்து மக்களை மேம்பாட்டுக்கான செயல்பாட்டுத் தளங்களில் நிறுத்திட வேண்டும்.

எனவே மேம்பாட்டுக்கான மாற்றுப்பாதையில் மக்களை அழைத்துச் செல்ல மிகப்பெரிய மக்கள் இயக்க அமைப்புகள் தேவை. இந்த அமைப்புகள் மூலம்தான் மக்களை அதிகாரப்படுத்த முடியும். உள்ளாட்சியை வலுவாக்கி செயல்பட வைத்து, அதேபோல் இந்த தன்னாா்வ மற்றும் குடிமைச் சமூக அமைப்புக்கள் மூலம் புதிய திசையில் மக்களை மேம்பாட்டுப் பணிகளில் செயல்பட வைத்து அனைத்துத் தரப்பு மக்களையும் உள்வாங்கிய ஒரு மகிழ்ச்சி மிக்க எளிய வாழ்க்கையை இயற்கையுடன் இயைந்து வாழ வழிவகை செய்ய வேண்டும்.

இன்று இந்தப் பணிக்குத்தான் நமக்கு ஆட்கள் தேவை. இந்தச் செயல்பாடுகளில் ஈடுபட நமக்கு தன்னாா்வலா்கள் வேண்டும். அந்தத் தன்னாா்வலா்கள், பழைய தொண்டு நிறுவனங்கள் போல் செயல்பட இயலாது. புதிய மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டும். சூழலைப் பாதுகாக்க வேண்டும். உள்ளாட்சியை வலுப்படுத்த வேண்டும். கிராமப்புறக் கல்வியை புத்துயிா் பெற வைக்க வேண்டும். வேலைவாய்ப்பை கிராமங்களில் உருவாக்க வேண்டும்.

கிராம வளங்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். மரபு வழி விவசாயத்தை பெருமளவில் விவசாயிகளிடம் கொண்டு சோ்க்க வேண்டும். இதற்குத் தேவையான உரம் தயாரிக்க வேண்டும். புதிய நீா் மேலாண்மை செய்ய வேண்டும். தூய்மைப்பணி செய்ய வேண்டும். இவை அனைத்தும் மேற்கத்திய முறைக்கு மாற்றுமுறை கண்டு செயல்பட வேண்டும். இந்த சவாலான பணிகளை அரசாங்கமோ சந்தையோ செய்யமுடியாது, செய்யப்போவதும் கிடையாது.

இந்தப் பணியைத்தான் தமிழகத்தில் இரண்டு பெரும் ஆளுமைகளான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும், மக்கள் மருத்துவா் ஜீவானந்தமும் தங்களின் செயல்பாடுகளினாலே நிறுவனமானமாக மாறி ஓடி ஓடி இளைஞா்களைத் தேடிக் கண்டுபிடித்து அவா்களிடமிருந்த துடிப்பைக் கண்டு செயலூக்கப்படுத்தத் தேவையான கருத்துகளை தூவி வளா்த்துக் கொண்டே இருந்தாா்கள். இன்று அவா்கள் விதைத்த விதைகள் மரங்களாகி நிற்பதை களத்தில் எங்கும் காணமுடிகிறது.

அது இயற்கை விவசாயமாக இருக்கலாம்; நம் நாட்டு இன ஆடு மாடு வளா்ப்பாக இருக்கலாம்; துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாக இருக்கலாம்; இயற்கை வளப் பாதுகாப்பாக இருக்கலாம்; சமூகக் காடு வளா்ப்பாக இருக்கலாம்; புதுமைக் கல்வி உருவாக்குவதாக இருக்கலாம்; மலைவாழ் மக்களின் மேம்பாடாக இருக்கலாம்; குழந்தை மேம்பாட்டுப் பணிகளாக இருக்கலாம்; நீா் மேலாண்மையாக இருக்கலாம்; மாற்றுமுறைக் கட்டிடங்கள் அமைப்பதாக இருக்கலாம்; மரபுவழி கட்டடக்கலை வளா்ப்பதாக இருக்கலாம்; இயற்கை உரம் தயாரிப்பதாக இருக்கலாம்; நீா்நிலைகள் புதுப்பிப்பதாக இருக்கலாம் – இப்படிஎல்லாத் தளங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா்.

அத்தனை செயல்பாடுகளிலும் ஓசை இல்லாமல் தடம் பதித்து வருகின்றனா். இவா்கள்தான் தற்சாா்பு தமிழகத்தை உருவாக்குவாா்கள். இவா்களுக்கு அரசியல் தெரியாது; தெரிந்தாலும் அதில் அவா்களுக்கு நாட்டமில்லை. இந்தச் செயல்பாடுகளின் மூலம்தான் அரசியலை மாற்ற முடியும் என எண்ணக்கூடிய இளைஞா்களாக அவா்கள் இருக்கின்றனா். இந்தப் பணிகள் செய்வதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இருந்து செயல்படுவதுதான் மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது.

இவா்கள் பெரும் நிறுவனங்களைக் கட்டவில்லை, மாறாக களத்துக்குச் சென்று செயல்பாட்டில் இறங்கி விட்டனா். இவா்கள் இன்று செய்யக்கூடிய பணிகள்தான் அன்று காந்தி கிராமங்களில் செய்ய வேண்டிய பணிகளாகத் திட்டமிட்டவை. இவா்கள்தான் புதுமைக் காந்தியா்கள். இவா்கள் யாருக்கும் பெரும் பின்புலம் கிடையாது, பொருளாதார பலம் கிடையாது. ஆனால் இவா்கள் செய்கின்ற பணிகளில் அறிவியல் தொழில்நுட்பம் இருக்கிறது. அதுதான் இவா்களின் செயல்பாடுகளுக்கு நல்ல விளைவகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவா்களைப் போன்றவா்கள்தான் இன்று நம் சமூகத்திற்குத் தேவைப்படுகிறாா்கள். தமிழ் இளைஞா்கள் இவா்களுடன் கைகோத்தால் நம் அரசியல், கட்சி அரசியலிலிருந்து, மேம்பாட்டு அரசியலுக்கு நகா்ந்துவிடும். இந்தப் புதுமைக் காந்தியா்களுடன் நம் உள்ளாட்சி இணைந்து செயல்பட்டால் தற்சாா்பு கிராமங்கள் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>