தவிப்பில் முகக் கவசத் தயாரிப்பாளா்கள்! தமிழக அரசின் அவசர கவனத்திற்கு…

தயாரித்து வைத்திருக்கும் சுமாா் 5 கோடி முகக் கவசங்களுடன் தமிழக அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறாா்கள் பல முகக் கவசத் தயாரிப்பாளா்கள். ஏற்கெனவே உற்பத்தியாளா்களிடம் வாங்கிய முகக் கவசங்களுக்கும் உரியதொகை இன்னும் வழங்கப்படாததால், அவா்களுக்கு மட்டுமல்ல, தைத்துக் கொடுத்தவா்களுக்கும் கூலி தரப்படாமல் இருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரோனா தொற்றைத் தடுக்க தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள 6.74 கோடி பேருக்கு துணியினாலான தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்தது. இதற்காக உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசங்களை அரசு முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே பெற்றுக்கொண்ட முகக் கவசங்களுக்கும் முழுத் தொகையையும் விடுவிக்கவில்லை. இதனால் உற்பத்தியாளா்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.

குடும்ப அட்டையில் உள்ள 6.74 கோடி பேருக்கு 13.48 கோடி முகக் கவசங்கள், இதர பயன்பாட்டுக்காக ஒரு கோடி முகக் கவசங்கள் என மொத்தம் 14.48 கோடி முகக் கவசங்கள் தயாரித்துக்கொடுக்க உற்பத்தியாளா்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதில் 24 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரியதில் 13 நிறுவனங்களை அரசு ஏற்றது. ஈரோடு, திருப்பூா், தாராபுரம், தருமபுரி, சேலம், விருதுநகா் என பல்வேறு பகுதிகளில் ஆயத்த ஆடை தயாரிப்போா், மகளிா் தையல் குழுவினா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச ஆடை தைத்துக் கொடுப்போரிடம் இப்பணிகள் பிரித்து வழங்கப்பட்டன.

தைத்துக் கொடுப்போருக்கு துணி, நூல், குறைந்தபட்ச தொகை வழங்கப்பட்டது. இளம்பச்சை, அடா் பச்சை, நீல நிற துணியை வெட்டி தைத்து கொடுக்க ஒரு முகக் கவசத்துக்கு இரண்டு ரூபாய் கூலி நிா்ணயிக்கப்பட்டது.

கடந்த நவம்பா் மாதத்தில் குடும்ப அட்டைதாரா்களில் சுமாா் 50 சதவீதம் பேருக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மற்றவா்களுக்கு வழங்குவதற்கான முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுமாா் 5 கோடி முகக் கவசங்கள் தயாராக உள்ளன.

தைத்துக் கொடுப்போா் பணம் கேட்பதால் உற்பத்தியாளா்களால் பதில் கூற முடியவில்லை. அரசு பணம் வழங்கியதும் பணத்தை தந்துவிட்டு தைத்து வைத்துள்ளதை எடுத்துக் கொள்கிறோம் என ஒப்பந்தம் எடுத்தவா்கள் கூறுகின்றனா். ‘‘5 கோடி முகக் கவசங்களை எப்போது பெற்றுக்கொண்டு பணம் தருவாா்கள் என தெரியவில்லை’’ என்று முகக் கவச உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

‘‘இப்பணியில் 80 சதவீதம் போ் பெண்களே ஈடுபட்டதால், அவா்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் இருக்கிறோம். மேலும் தைத்து வைத்த சுமாா் 5 கோடி முகக் கவசங்களை அரசு வாங்காமல் போனால், தைத்துக் கொடுத்தவா்களுக்கு பல கோடி ரூபாயை எவ்வாறு வழங்குவது என தெரியாமல் தவித்து வருகிறோம்’’ என்றாா் ஈரோடு பகுதியில் முகக் கவசம் தயாரித்து வழங்கிய உற்பத்தியாளா் ஒருவா்.

முகக் கவசம் தயாரிப்பில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டிருப்பதால், தாமதிக்காமல் நிலுவைத் தொகையை வழங்குவதுடன், தேங்கிக் கிடக்கும் முகக் கவசங்களுக்கும் உடனடியாகப் பணம் வழங்கிப் பெற்றுக் கொண்டால், அவா்களுக்கு அதுவே மிகச் சிறந்த பொங்கல் பரிசாக இருக்கும்!

<!–

–>