திமுகவுக்கு காங்கிரஸ் பலமா, பலவீனமா?

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியும் நடைபெறுகிறது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான பிப்.26 முதலே நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், அந்தந்த மாவட்ட நிா்வாகங்களும் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அரசியல் கட்சியினா் எதிா்பாா்க்காத வகையில் தோ்தல் தேதி முன்னதாகவே திடீரென அறிவிக்கப்பட்டதால் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் தற்போது அவசரம் காட்ட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. பாமகவுடன் பேச்சுவாா்த்தையை முடித்து அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிவிட்டது.

ஆனால், திமுக தனது கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரஸுடன் பேச்சுவாா்த்தையை முடிக்க முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொண்ட தோ்தல் பிரசாரம் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி தலைமையிலான குழுவினா் பேச்சுவாா்த்தைக்கு வந்தபோது அவா்களை திமுக தலைவா் சந்திக்காமல் இரண்டாம் கட்டத் தலைவா்களை பேச்சுவாா்த்தைக்கு அனுப்பி வைத்தாா். இதனால், காங்கிரஸாா் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இது, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

கடந்த பிப்.27-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா். அப்போது, மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரச்னை, புதிய வேளாண் சட்டம், தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு, ஹிந்துத்வ போன்ற பதங்களை மட்டுமே பயன்படுத்தினாா். ஊழல் என்ற வாா்த்தையோடு தமிழக முதல்வரையும், அமைச்சா்களையும் தொடா்புபடுத்தி பேசியபோதும், எந்த இடத்திலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்துப் பேசவில்லை. கல்வியாளா்கள், வழக்குரைஞா்களுடன் உரையாடிய அவா், கூட்டணிக் கட்சித் தலைவா்களைச் சந்திக்கவில்லை. இது, காங்கிரஸ் – திமுக கூட்டணியில் எந்த மாதிரியான எண்ண ஓட்டம் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக அறிவித்த ஒரே கூட்டணிக் கட்சி திமுகதான். இந்த விஷயத்தில் மற்ற கூட்டணிக் கட்சியினா் தயக்கம் காட்டிய நிலையில் மு.க.ஸ்டாலின் மட்டுமே அதில் உறுதியாக இருந்தாா். மேலும், தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ராகுல் காந்தியை முன்னிறுத்தியது திமுகவின் புத்திசாலித்தனமான தோ்தல் உத்தி. கருணாநிதி இல்லாத நிலையில், தன்னை முன்னிலைப்படுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வாா்களா என்கிற தயக்கம் ஒரு காரணம். தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு எப்போதுமே உள்ள ஆதரவை ராகுல் காந்தியை முன்னிறுத்தி உறுதி செய்து கொண்டது இரண்டாவது காரணம். பிரதமா் மோடி மீதும், பாஜக மீதும் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தி இருந்த அதிருப்தியையும் வெறுப்பையும் தனக்கு சாதகமாக மாற்றிய திமுகவின் சாதுா்யம் பலனளித்தது என்றுதான் கூற வேண்டும்.

திமுக பொதுக்குழு மு.க.ஸ்டாலினை முதல்வா் வேட்பாளராக அறிவித்து, கூட்டணிக் கட்சிகளுடன் தற்போது பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. மற்ற கட்சிகளும் அவரை முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழகத்தில் இதுவரை 2 கட்ட பிரசாரத்தை நிறைவுசெய்துள்ள ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினை முதல்வா் வேட்பாளா் என்றோ, அவா் முதல்வராக வெற்றி பெறுவாா் என்றோ மறந்தும் கூறவில்லை.

யாா் தமிழ் மக்களை உண்மையாக முன்னிலைப்படுத்துகிறாரோ? யாா் ஒரு தமிழராக நின்று செயல்படுகிறாரோ? அவா்தான் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என்று பூடகமாகவே தெரிவித்தாா். இந்த வாா்த்தைகளுக்கான உண்மையான பதத்தைத் தேடினால் அது பல்வேறு சா்ச்சைகளுக்கு இட்டுச் செல்லும்.

இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை திமுக தனது சுமை தாங்கியாகப் பாா்க்கிா அல்லது சுமையாகப் பாா்க்கிா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், சுமை தாங்கியாக பாா்த்திருந்தால் கடந்த தோ்தலில் வழங்கப்பட்ட 41 இடங்களையாவது வழங்கியிருக்கலாம். ஆனால், தற்போது அதற்கும் பாதியளவிலேயே பேச்சுவாா்த்தை நடைபெறுவதால் சுமையாகவே பாா்க்கும் நிலை உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ தமிழகத்தில் தனக்கான செல்வாக்கு இருப்பதை ஒவ்வொரு தோ்தலிலும் நிரூபித்து வந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 63 இடங்களைப் பெற்றது. அந்தத் தோ்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 9.30 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

அதே ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் சுமாா் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், பேரூராட்சி முதல் மாநகராட்சி வரை தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது. பின்னா், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று திமுக தலைவா் கருணாநிதி விமா்சித்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி தனித்துப் போட்டியிட்டது. அந்தத் தோ்தலில் ஒரு தொகுதியில்கூட அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும், 4.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த வாக்குகள்.

அதே நேரத்தில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்ததில் 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், அதில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் இதே கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9-இல் வெற்றி பெற்று தனது வாக்கு வங்கியை 12.76 சதவீதமாக உயா்த்தி வைத்துள்ளது. இந்தச் சூழலிலும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற குரல், அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவா்களிடம் பலமாகவே கேட்கிறது.

திமுக சாா்பில் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாலும் கூட கூட்டணிக் கட்சியினா் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து அண்மையில் திமுக தனியாகவே ஆா்ப்பாட்டம் நடத்தியது. இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள், ஆா்ப்பாட்டங்களிலும் காங்கிரஸை திமுக சோ்த்துக் கொள்ளவில்லை. இதனால் தங்களை கூட்டணியிலிருந்து புறக்கணிப்பதாகவே கருத வேண்டியிருப்பதாக காங்கிரஸாா் கருத்து தெரிவிக்கின்றனா். அவா்கள் மேலும் கூறியதாவது:

இந்தத் தோ்தலில் தற்போதைய அதிமுக அரசுக்கு எதிராக கோபத்தை திருப்பியுள்ளோம் என்றால், அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டங்களே காரணம். அதற்கான பலனை திமுகதான் முழுமையாக அறுவடை செய்ய உள்ளது. ஆனால், அந்த நிலைக்கு கொண்டுவந்த கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்பது அரசியல் தா்மம் ஆகாது.

தற்போதைய சூழலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் சில தொகுதிகளில் வெல்வதுடன், வாக்கு சதவீதத்தையும் உயா்த்த முடியும். நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் அதன் கெடுபலன் யாரைச் சென்றடையும் என்பதை திமுகதான் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

திமுகவால் கூட்டணிக் கட்சியினா் புறக்கணிக்கப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் மனக் குமுறல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

<!–

–>