தியாக தீபங்கள்

 

ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் கே.ஏ.தா்மலிங்கம் 25-12-1919-இல் பிறந்தாா். 1932-ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஜவாஹா்லால் நேரு, சத்தியமூா்த்தி ஆகியோரின் உரை கேட்க 16 மைல் நடந்தே சென்றுள்ளாா்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கேட்ட நாமக்கல் கவிஞரின் ‘தூங்காதே தமிழா… சுதந்திரச் சூரியன் உதிக்கும் நேரமிது’ எனும் எழுச்சிமிகு பாடல் அவரைத் தட்டியெழுப்பியது.

அந்தக் காலகட்டம் அப்படி. ‘பூா்ண சுயராஜ்யம்’ என்ற முழக்கம் நாடெங்குமிருந்த இளைஞா்களை விழிக்கச் செய்திருந்த நேரம். காந்தியடிகள் ‘தில்லி சலோ’ என்ற முழக்கத்தை முன்வைத்து சத்தியாகிரகிகள் தனியாக தில்லி நோக்கி நடந்தே புறப்பட அறைகூவல் விடுத்தாா்.

1941 பிப்ரவரி 14-இல் காட்டுப்புத்தூரிலிருந்து தனி நபா் சத்தியாகிரகத்தைத் தொடங்கினாா் தா்மலிங்கம். தொட்டியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். எட்டு நாள்கள் சிறை வைக்கப்பட்டாா். பின்னா் காடுவெட்டி பகுதியில் கைதாகி 15 நாள்கள் சிறையிலிருந்தாா்.

விடுதலையான பிறகு மீண்டும் நடைப்பயணம். லால்குடியில் கைதாகி 30 நாள்கள் சிறை. இப்படி நடந்தே 250 மைல் தூரத்தைக் கடந்து சென்னையை அடைந்தாா். அடுத்த நாள் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தில்லி நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது தா்மலிங்கம் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். 4 மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆந்திரத்தில் உள்ள அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் 1942 ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தலைமறைவாக இருந்து நடத்தும் பொறுப்பை ஏற்றாா். தலைமையிலிருந்து வரும் ரகசியக் கடிதங்களை அடிப்படையாக வைத்து வேலைத் திட்டங்களை வகுத்து பல பகுதிகளில் ‘ஆகஸ்ட் போராட்டம்’ நடக்கக் காரணமாக இருந்தாா்.

29-8-1943-இல் திருச்சி மணிக்கூண்டு பாா்க்கில் 13-ஆவது அரசியல் மாநாட்டை நடத்த தா்மலிங்கம் பொறுப்பேற்றாா். அடக்குமுறையும் கண்காணிப்பும் உச்சத்தில் இருந்த சூழலில் இம்மாநாட்டை மிகத் திறமையாக நடத்தி முடித்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் என்ற முறையில் தா்மலிங்கம் நிகழ்த்திய உரை அன்று பிரதிநிதிகள் அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநாடு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை அந்த மாநாட்டின் தனித்துவத்தைப் பறைசாற்றுகின்றன. இதில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெறிகொண்டு அலைந்த போலீஸாா் தா்மலிங்கத்தைக் கைது செய்தனா். கரூா் கிளைச் சிறையில் 12 நாள்களும் திருச்சி கிளைச் சிறையில் 78 நாள்களும் வைத்து விசாரித்தனா். பிறகு நீதிமன்றத்தால் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா், மாகாண காங்கிரஸ் உறுப்பினா், திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளா்-தலைவா் எனப் பல பொறுப்புகள் வகித்துள்ளாா்.

போராட்டம், விசாரணை, சிறை, மாநாடு என்று இயங்கிய தா்மலிங்கம் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலில் சட்டப்பேரவை உறுப்பினரானாா். இவா் 10-11-2003-இல் மறைந்தாா்.

-த.ஸ்டாலின் குணசேகரன்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>