திரில்லர்தான், ஆனால், காதல் கதை: திட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்

ஓடிடி நேரடி வெளியீடாக மற்றொரு தமிழ்ப் படம் திட்டம் இரண்டு – பிளான் பி. சோனி லைவில்.

படத்தைப் பார்க்கத் தொடங்கும்போது உள்ளபடியே நம்பிக்கையில்லாமல்தான் இருந்தது. ஓபனிங்கும் அதற்கேற்றவாறுதான் இருந்தது. மழை பெய்யும் இரவு. ஹெல்மெட் அணிந்த ஒருவர் கத்தியுடன் ஒரு வீட்டுக்குள் செல்கிறார். ஒரு பெண்ணைக் காணவில்லை. கணவன் வெளியூர் சென்றிருந்த நேரம் வேறு.

ஒரு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து என்னென்ன என்று எல்லாருக்கும் மனப்பாடமாகவே தெரியும். அதேபோலதான் திரையில் கதையும் விரித்துக் கொண்டுசெல்லப்படுகிறது. கார் விபத்து, எரிந்த சடலம், உடற்கூறு ஆய்வறிக்கை… இதே தடத்தில் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட முடிச்சுகளும் அவை அவிழ்வதும்தான் படத்தில் அலுப்பூட்டுகின்றன.  ஆனால், படம் அப்படிப்பட்டதல்ல. ஆனால், பொறுமையிழந்து பாதியிலேயே, போங்கடா, நீங்களும் உங்க திரில்லரும் என்று ஆஃப்  செய்துவிட்டு உறங்கச் சென்றவர்கள் ஏமாந்துவிட்டிருப்பார்கள்.

இதையும் படிக்க | மாலிக் – அவலை நினைத்து இடித்த உரல்? | திரை விமரிசனம்

தமிழில் இப்படியொரு விஷயத்தைக் கதைக் கருவாகக்கொண்டு ஒரு திரைப்படம் உருவாகி வெளிவந்திருப்பது அனேகமாக இதுவே முதல்முறை, உள்ளபடியே துணிச்சலான முயற்சிதான். குறிப்பிடும்படியான  வெற்றியையும் பெற்றிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஏற்கெனவே இவர் இயக்கத்தில் வெளியான ஒரு குறும்படம்கூட ஏற்கவியலாததாகத் தோன்றினாலும் புதிதாகத் தான் இருக்கும்.

படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் சமூகத்தில் ஆங்காங்கே நிலவுகிற ஒரு சிக்கல்தான். இதையொட்டிய நிறைய தற்கொலைகளை நாம் செய்திகளாகப் பார்த்திருக்கிறோம். இங்கே ஒருதலையானது, அவ்வளவுதான். ஆனால், நன்றாக யோசித்து ஒரு திரில்லருக்குரிய அம்சங்களை எல்லாம் கதைக்குள்ளே கொண்டுவந்து, ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர்.

திருநங்கைகள் பற்றிகூட லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற நல்ல பதிவுகளாக சில நூல்கள் வந்திருக்கின்றன. திருநம்பிகள் பற்றி… சில நேரங்களில் டாக்டர் கிஷோர் பேசுவதும் சில நேரங்களில் தீபா சூர்யா பேசுவதும் கொஞ்சம் லெக்சர் போல அலுப்பூட்டுவதாக இருக்கிறது. உணர்வுகளை மறுப்பதெல்லாம் ஓகே, ஆணவக் கொலை வசனங்களெல்லாம் எதற்காக?

ஒரு சராசரி ரசிகனாக படத்தின் மிக முக்கியமான கஷ்டம், காவல் ஆய்வாளரான ஆதிராவை ஒரு பெண்ணாகப் பார்க்க முடியாததுதான். அவருடைய தோற்றம் காரணமா, நடவடிக்கைகளா, புரியவில்லை. இத்தனைக்கும் அவர் பெரும்பாலான நேரம் காவல் சீருடையில் வருவதுகூட இல்லை. ஆனால், காதலன் அர்ஜுனுடன் பேசும்போது அவரே கூறுகிறார், நானும் பெண்தானே, வெட்கம் இத்தியாதி எல்லாம் இருக்கும்தானே என்று. ஆமாம், அதானே!

மற்றபடி ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கேரக்டர்னாலும் ஓகேதான். சிறப்பாகச் செய்திருக்கிறார். இந்தப் படத்திலும். குறிப்பாகத் தன் தோழி தொடர்பான மரணத்தைத் தொட்டுச்செல்லும் இடங்களில், எப்பப் பார், கண்ணீர்விட்டுக்கொண்டே இருக்கிறார் என்றாலும்கூட. இறுதிக் காட்சிகளிலும் மனதில் இருப்பதை முகத்தில் காட்டுவதில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஆதிரா –  அர்ஜுன் இடையே காதல் தோன்றுவதையும் வளர்வதையும் மிக நன்றாகவே கொண்டுசெல்கிறார்கள். என்ன, ரொம்ப ரிச்சான இன்ஸ்பெக்டர் ஆதிரா, வீட்டில் கரண்ட் கட் (நிச்சயமாக அரசைக் குறை கூறவில்லை!) என்று கூறிவிட்டு மெழுகுவர்த்திகள் எரிய விடுகிற அறையெல்லாம் நினைத்துப் பார்க்கிற மாதிரியாகவா இருக்கிறது?  கடைசியில் ஒரு சீனில் வீட்டில் வெறிகொண்ட மாதிரி கத்திவிட்டு, விழுந்து கிடக்கும் டாப் ஆங்கிள் காட்சியில் இருக்கிற வீடெல்லாம்,  ஹூம். பணக்காரக் கதை.

சின்னக் குழந்தைகளாக இருக்கும்போது தண்ணீருக்குள் விழுந்துவிட்ட ஆதிராவைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதிக்கிறாள் தீபா. உனக்கே நீச்சல் தெரியாதே, குளத்தில் குதித்து என்ன  செய்வாய்? என்ற கேள்விக்கு, எனக்கு எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மட்டும்தான் தோன்றியது என்கிற தீபா சூர்யாவின் பதில் நச்.

ஆதிராவும் அர்ஜுனும் புதுச்சேரி செல்லும் வரைக்கும்கூட முடிச்சு என்னவென்பதைச் சற்றும் ஊகிக்க முடியாத அளவுக்குப் பராமரித்துக் கொண்டுசென்றிருப்பது பிரமாதம்.

அர்ஜுனாக நடிக்கும் சுபாஷ் செல்வத்தின் நடிப்பு தொடக்கத்தில் பொருந்தாமல் தோன்றினாலும்  அடுத்தடுத்த காட்சிகளில் கவனம் குவிக்கிறார். ஆனால், ஆதிரா – அர்ஜுன் காதல் காட்சிகள் பல நேரம் நகைச்சுவைக் காட்சிகள் போல சம்பவிக்கின்றன.

தீபா சூர்யாவாக வரும் அனன்யா ராம்பிரசாத் சில காட்சிகளில் தேர்ந்த நடிப்பு. கதையின் இணைப்புச் சங்கிலியாக வரும் பரணி பாத்திரத்தில் பாவெல் நவகீதன் நன்றாகச் செய்திருக்கிறார்.

இதையும் படிக்க | மாலிக் – அவலை நினைத்து இடித்த உரல்? | திரை விமரிசனம்

ஒளிப்பதிவு சில இடங்களில் மிகச் சிறப்பாக இருக்கிறது. சில இடங்கள் சுமார்.  அது எதற்கு அடிக்கடி அவ்ளோ டைட் க்ளோஸ்அப்? பின்னணி இசை ஒரு திரில்லருக்கு உரிய வகையில் செட்டாகியிருக்கிறது, பாராட்டுகள்.

ஒருவேளை இது மலையாளப் படமாக இருந்திருந்தால், நம்ம ஆள்கள்  எல்லாம், இன்னா கருத்துபா, இன்னா காட்சிங்கோபா, ஒரு சின்ன நாட், இன்னா பில்டப்பு, ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பார்களோ?

ஒரு முறை படத்தைப் பார்த்துவிட்டு, அல்லது விமர்சனங்களின் வழி  கதை சொல்லலை அறிந்த பிறகு, மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் சில வசனங்கள் மிகுந்த செறிவுள்ளனவாக இருக்கும் – காவல்நிலையத்தில் ஆதிராவிடம் அர்ஜுன் சொல்கிறான், போலீஸ் டிரஸ்ல நீங்க கெத்தா இருக்கீங்க!

படத்தின் முடிவு – மிகச் சிறப்பு. ஆமாம், நீங்களும் நானும் யார், அல்லது விக்னேஷ்  கார்த்திக்தான் யார், தீர்மானிக்க?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>