திரை விமர்சனம்: இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருக்கிறதா 83?

இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தருணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 83. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட், பண்டோம் பிலிம்ஸ் மற்றும் கபிர் கான் ஃபிலிம்ஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கபிர் கான் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் கேப்டன் கபீல் தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். தெத்துப்பல், திணறியபடி ஆங்கிலம் பேசுவது, தெனாவட்டான உடல்மொழி என கபில் தேவை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ரன்வீர். அவருக்கு கடுத்து கவனம் ஈர்ப்பது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தாக நடித்திருக்கும் ஜீவா. படம் நூல் பிடித்தார்போல் பரபரப்பாக சென்றுகொண்டிருக்க, ஆங்காங்கே தனது வெகுளித்தனமான நடவடிக்கைகளால் கலகலப்பாக்குகிறார். பெரிதாக வெடித்து சிரிக்கும்படி இல்லையென்றாலும், படம் பார்க்கும்போது புன்னகையுடன் பார்க்க அவர் முக்கிய காரணமாக இருந்தார். 

இன்று கிரிக்கெட் என்பது இந்தியாவில் பெருமைக்குரிய விளையாட்டாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சத்தால் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு ஸ்பான்சர் செய்ய விளம்பரதாரர்கள் போட்டிபோடுகிறார்கள். கிரிக்கெட் வீரர்களின் இன்றைய நிலைக்கு காரணம் 1983 ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்றது தான் முக்கிய காரணம். 

ஆனால் அன்றைய கிரிக்கெட் அணிக்கு இதெல்லாம் இல்லை. கிழிந்த ஷூ அணிகிறார்கள். செலவுக்கு போதிய பணம் இல்லாமல் பார்த்து பார்த்து செலவழிக்கின்றனர், போகிற இடங்களில் உரிய மரியாதை வழங்காமல் அவமானப்படுத்தப்படுகிறார்கள். 

முதல் போட்டியிலேயே தங்களது அசாத்திய திறமையால் இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற மிகவும் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்கிறார்கள். அதிர்ஷ்டத்தில் வெற்றிபெற்று விட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் கபில் தேவ் மட்டும் உறுதியாக இருக்கிறார். அவரது நம்பிக்கை தான் அரையிறுதிக்கு கூட தகுதி பெற மாட்டார்கள் என்று கருதப்படும் இந்திய அணியை கோப்பை வெல்ல வைக்கிறது. 

இதையும் படிக்க | பிரியா பவானி சங்கரின்’ பிளட் மணி’ படம் எப்படி இருக்கிறது ?

அமிஷ் மிஸ்ராவின் ஒளிப்பதிவில் விளையாட்டை நேரடியாக காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய காட்சிகளில் ப்ரீத்தமின் பின்னணி இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. இந்தக் காரணிகளால் 83 மிகச் சிறந்த காட்சி அனுபவத்தை தருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போதும் முக்கிய தருணத்தில் உண்மையான வீரர்கள் விளையாடிய காட்சிகளை ஒப்பிடுவது படத்தை சுவாரசியப்படுத்தியது. 

முக்கிய காட்சியில் கபில் தேவ் வருவது, சிறுவனாக சச்சின் போட்டிகளை உற்சாகம் பார்ப்பது, கபில் தேவ் 175 ரன்கள் குவிப்பது என ஆங்காங்கே ரசிகர்கள் கொண்டாடக் கூடிய காட்சிகள் படத்தில் இருக்கின்றன. மதக் கலவரம் நடந்துகொண்டிருக்கும் போது, மக்களை அமைதிப்படுத்த கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்ப அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் திட்டமிடுவது,  ராணுவத்தினர் கிரிக்கெட் போட்டிகளை கேட்டு மகிழ்வது  போன்ற போன்ற உணர்வுப்பூர்வமான தருணங்களையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டு. ஆனால் படத்தில் போட்டிகளின் போது கபில் தேவ் மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறார். அவரது கதாப்பாத்திரத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் 83 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற படமாக இல்லாமல், கபில் தேவ் வாழ்க்கையை சொல்லும் படமாகவே இருக்கிறது. 

இந்திய அணி தான் வெல்லப்போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். போட்டிகளில் எதிர் அணியினரின் பலம், பலவீனங்கள் குறித்து காண்பித்திருந்தால் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு இருக்கும். ஆனால் படத்தில் இந்திய அணி விளையாடுவதை மட்டும் பிரதானமாக காட்டுவது, தொலைக்காட்சிகளில் ஹைலைட்ஸில் பார்ப்பது போல் இருக்கிறது. அதனால் அந்த காட்சிகளில் பெரிய அழுத்தம் இல்லாமல் கடந்துபோகின்றன.

இருப்பினும் இந்திய அணி உலகக்  கோப்பை வென்ற வரலாற்றுத் தருணத்தை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்த விதத்தில்  தவிர்க்க முடியாத படமாக அமைந்திருக்கிறது இந்த 83
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>