துறு துறு சுட்டிக் குழந்தைகளுக்கு சத்துமிக்க ஆர்கானிக் கீரை சாதம்!

00000_keerai_sadham

தேவையான பொருட்கள் :

 • அரிசி                                                                               -1  கப்
 • பொடியாக நறுக்கிய பசலைக் கீரை                  -3  கப்கள்
 • பச்சை மிளகாய்                                                         -2  அல்லது 3
 • மஞ்சள்  தூள்                                                              -1 /4  டீ  ஸ்பூன்
 • வெங்காயம்                                                                -1 /4  கிலோ
 • எண்ணெய்                                                                  -1  டேபிள் ஸ்பூன்
 • பட்டை ,கிராம்பு     –                                                தேவையான அளவு

தனியாக வறுக்க ….

 • கடுகு                                           – 1 /4  டீ ஸ்பூன்
 • உளுந்தம் பருப்பு                    – 1 டீஸ்பூன்
 • கடலைப் பருப்பு                     – 1 டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய்                   – 2
 • சின்ன வெங்காயம்               – 1
 • உப்பு                                            -தேவையான அளவு 

செய்முறை:

பாசுமதி அரிசியை 15  நிமிடங்களுக்குத் தண்ணீரில்  ஊற வைக்கவும் ,இப்படிச் செய்வதால் சாதம் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அரிந்து வைத்த பசலைக்கீரை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து 3  முதல் 4 நிமிடங்களுக்கு மைக்ரோ வேவ் ஓவன் அல்லது பாத்திரத்தில் வேக வைக்கவும். கீரை வெந்ததும் ஆற விட்டு அளவாக உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சீரகம், லவங்கப் பட்டை போட்டு வெடித்ததும் அரைத்து வைத்த கீரைக் கலவையை அதில் கொட்டி கிளறி விடவும். கீரைக் கலவை சூடானதும் ஒரு கொதியில் அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கீரைக் கலவை அரிசியோடு கலக்குமாறு கிளறி விட்டு குக்கரை மூடவும். ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்தால் போதும், கீரையில் இருக்கும் தண்ணீர் மீதித் தண்ணீர் தேவையை ஈடு செய்யும்.

வாணலியை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு வெடித்து உளுந்து பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், மற்றும் பொடியாக அரிந்த கீரை மூன்று முதல் நான்கு கப்கள் சேர்த்து அளவாக உப்பு சேர்த்து வெந்த பின்பு இறக்கி  குக்கரில் இருக்கும் சாதத்தோடு கலந்து நன்றாக கிளறவும். கீரை அதிகமாக சேர்க்க சேர்க்க சுவை கூடும்.

கீரைச்சாதம் செய்யும் போது தண்ணீரின் அளவில் மூன்றில் ஒரு பங்குக்கு தேங்காய் பால் அல்லது பசும்பால், பாக்கெட் பால்  கலந்தும் செய்து பார்க்கலாம், தேங்காய் பாலில் செய்யும் போது சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

கீரையின் பலன்கள்:

கீரையின் பலன்களைப் பற்றி தனியாகச் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எல்லா வகைக் கீரைகளிலும் விட்டமின் ஏ சத்துகள் அபிரிமிதமாக இருக்கின்றன. மேலும் கால்சியம் போன்ற மினரல்களும் இரும்புச் சத்தும் கூட கீரை வகைகளில் அதிகம் உண்டு என்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய அத்யாவசியமான உணவு கீரை. வெறுமே கீரையை மசித்தும் ,பொரியல் செய்தும் உண்பதைக் காட்டிலும் இப்படி சாதமாக செய்து சாப்பிட்டுப் பழக்கினால்  குழந்தைகள் கீரையை சாதத்தின் நிறத்திற்காகவும் அதில் கலக்கப் படும் வாசனைப் பொருட்களின் மனத்தாலும் பசி தூண்டப் பட்டு கீரை சாப்பிட மாட்டோம் என்று எப்போதும் அடம் பிடிக்கவே மாட்டார்கள்.தினமொரு கீரை சாப்பிடுங்கள் வாழ்வை பசுமையாக்க!

<!–

–>