தெ.ஆ. ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகுகிறாரா?: பிசிசிஐ தரப்பு பதில்

ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக விராட் கோலியிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறது. 

மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

டெஸ்ட் தொடருக்கு அடுத்து விளையாடவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

கோலியின் மகள் வாமிகா, கடந்த வருடம் ஜனவரி 11 அன்று பிறந்தார். தெ.ஆ. டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட், ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. தெ.ஆ. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

கோலி விலகல் தொடர்பான தகவல் வெளியான பிறகு, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவேண்டுமா, இந்திய அணி மீது அவருக்கு அக்கறை இல்லையா என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

இதையடுத்து, கோலி விலகல் தொடர்பாக பிசிசிஐ தரப்பிலிருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சொந்தக் காரணங்களுக்காக ஒருநாள் தொடரிலிருந்து விலகப் போவதாக விராட் கோலியிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் எழவில்லை. இதற்குப் பிறகு அவர் முடிவெடுத்தாலோ, காயம் காரணமாக விலகினாலோ அது வேறு விஷயம் என்று கோலி விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>