தொடரை வென்ற இந்தியா: 3-வது டி20யில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 

கொல்கத்தாவில் நடைபெறும் 3-வது டி20 ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் ராகுல் டிராவிடும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து 153/6 ரன்களை எடுத்தது. ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 155/3 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 65 ரன்களும் ரோஹித் சர்மா 55 ரன்களும் எடுத்தார்கள்.

இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது. அதன்பிறகு டெஸ்ட் தொடர், நவம்பர் 25 அன்று தொடங்குகிறது.

இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றி விட்டதால் கொல்கத்தா ஆட்டத்தில் இதுவரை இத்தொடரில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாடும் அவேஷ் கானும் 3-வது டி20யில் விளையாட அதிக வாய்ப்புள்ளன. அதேபோல டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாத சஹாலும் நாளைய ஆட்டத்தில் இடம்பெறலாம். டெஸ்ட் தொடர் உடனடியாகத் தொடங்குவதால் இந்திய டி20 அணியில் உள்ள ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், அஸ்வின், அக்‌ஷர் படேல், சிராஜ் ஆகியோரில் சிலருக்கு ஓய்வளிக்கப்படலாம். 

3-வது டி20 ஆட்டத்தில் அணியில் ஏற்படவுள்ள மாற்றம் பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது:

அணியில் யார் யாரை மாற்ற வேண்டும் என்பது பற்றி யோசிக்கவில்லை. அணி முன்னேறிச் செல்ல எது பொருத்தமாக உள்ளதோ அதைத் தேர்வு செய்வோம். முதலில் விளையாடும் வீரர்கள் மீது அக்கறை செலுத்துவோம் என்றார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>