தொடர்ச்சியாக ரூ. 100 கோடி வசூலித்த 9 படங்கள்: புதிய சாதனை நிகழ்த்திய பிரபல இயக்குநர்

தொடர்ச்சியாக ஒன்பது படங்கள், ஒவ்வொன்றும் குறைந்தது ரூ. 100 கோடி வசூல். 

இந்தச் சாதனையை எந்தவொரு இந்திய இயக்குநராவது நிகழ்த்தியதுண்டா?

பாலிவுட் பற்றி தெரிந்தவர்களுக்கு விடை தெரிந்திருக்கும்.

ரோஹித் ஷெட்டி.

சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு அக்‌ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளர். கத்ரினா கயிப், ஜாக்கி ஷெராப் போன்றோரும் நடித்துள்ளார்கள். அஜய் தேவ்கனும் ரன்வீர் சிங்கும் கெளரவ வேடங்களில் நடித்துள்ளார்கள். சூர்யவன்ஷி படம் கடந்த தீபாவளி அன்று வெளிவருவதாக இருந்தது. கரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி 5 நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் கடைசியாக வெளியான 9 படங்களும் குறைந்தது ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளன. சூர்யவன்ஷி படமும் இந்தப் பட்டியலில் இணைந்ததால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி. இந்தியாவில் முதல் 5 நாள்களில் ரூ. 102.81 கோடியும் வெளிநாடுகளில்  ரூ. 31.48 கோடியும் வசூலித்ததாக கரண் ஜோஹர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

2010-ல் அஜய் தேவ்கன் நடித்த கோல்மால் 3 படத்திலிருந்து வசூலில் செஞ்சுரி அடிக்க ஆரம்பித்தார் ரோஹித் ஷெட்டி. அடுத்தது சிங்கம். பிறகு வரிசையாக – போல் பச்சன், சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் ரிடர்ன்ஸ், தில்வாலே, கோல்மால் அகைன், சிம்பா என ரோஹித் ஷெட்டி இயக்கிய படங்கள் அனைத்தும் தலா ரூ. 100 கோடி வசூலை இந்தியாவில் அடைந்தன. இதில் சென்னை எக்ஸ்பிரஸ், கோல்மால் அகைன், சிம்பா படங்கள் அதிகபட்சமாக முறையே ரூ. 227 கோடி, ரூ. 206 கோடி, ரூ. 240 கோடி வசூலை எட்டி அசத்தின. இத்தகவல்களை பாலிவுட் திரைப்படப் பத்திரிகையாளர் தாரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷெட்டி

இப்போது சூர்யவன்ஷியும் ரூ. 100 கோடியை எட்டியதால் இந்தியாவில் தொடர்ச்சியாக ஒன்பது ரூ. 100 கோடி வசூல் படங்களை அளித்த ஒரே இயக்குநர்  என்கிற சாதனையை ரோஹித் ஷெட்டி நிகழ்த்தியுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>