தொண்டர்கள் வேண்டாம்…கோடிகள் போதும்!

கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தலுக்காக துண்டு ஏந்தியும், உண்டியல் குலுக்கியும், ரசீது புத்தகம் அச்சடித்தும் மக்களிடம் நிதி வசூலித்து வந்த அரசியல் கட்சிகள், அதனைப் பெரு முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் எனப் பிரமுகர்கள் வசூலாக மாற்றிக் கொண்டதால் நிதி திரட்டுவதற்காக பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தும் கலாசாரம் மாறத் தொடங்கியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை நடத்தி முடிப்பதற்கு சுமார் ரூ.621 கோடி செலவாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் ரூ.621 கோடி என்றால், அந்த வாக்காளர்களை தங்கள் பக்கம் கவர்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் செலவிடப்பட உள்ள தொகை ஒரு தொகுதிக்கே 3 இலக்கங்கள் கொண்ட கோடிகளை எட்டும் போலிருக்கிறது.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், கடந்த காலங்களைப் போல் அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் நிதி திரட்டுவதற்கான பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கும் முன்னரே பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் கடந்த கால தேர்தல் வரலாறுகளிலிருந்து, 2021 சட்டப் பேரவைத் தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமாக மட்டுமன்றி விசித்திரமாகவும் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

தொண்டர்கள் நிதியில் வளர்ந்த கட்சிகள்: ஒரு காலத்தில் கட்சிக் கூட்டங்களுக்கு, கொள்கை உணர்வோடு தொண்டர்கள் திரண்டனர்.

கையிலிருக்கும் பணத்தை செலவிட்டு கொடி, ஒலி பெருக்கி சகிதம் லாரிகளில் பயணித்து கட்சிக் கூட்டங்களுக்கு சென்ற தொண்டர்களிடமே நிதியையும் வசூலித்து அரசியல் கட்சிகள் வளர்க்கப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தலைவர்களின் புகைப்படங்கள், தலைவர்களின் சிறப்புரையுடன் கூடிய ஒலிப் பேழைகள், கொடி, ஒட்டு வில்லைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து கட்சிக்கு நிதி திரட்டும் இடங்களாகவும் பொதுக் கூட்ட மைதானங்கள் திகழ்ந்தன.

கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு வரைகூட கட்சி வளர்ச்சிக்காகவும், தேர்தலுக்காகவும் நிதி திரட்டும் கூட்டங்களை மாவட்டத் தலைநகரங்கள் மட்டுமன்றி, சிற்றூர்களிலும் கூட அரசியல் கட்சிகள் நடத்தி வந்தன. கூட்டத்தில் தொண்டர்களுக்கு இடையே துண்டு ஏந்தி கட்சிக்காக நிதி வசூலிக்கப்பட்டது. துண்டு, உண்டியலாகவும், ரசீது புத்தகமாகவும் மாற்றம் அடைந்தபோதிலும், நிதி வசூலிக்கும் வழக்கம் மட்டும் தொடர்ந்து நீடித்து வந்தது.

தொண்டர்களிடமிருந்து விலகிய தலைமை: காங்கிரஸ், அதிமுக நீங்கலாக பிற கட்சிகள் வழக்கம் போல் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தப்பட்டு வந்த இதுபோன்ற நிதியளிப்புக் கூட்டங்கள், கட்சித் தலைமையிடம் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அந்தந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு இருந்து வந்தது.

பொதுக் கூட்டங்கள் நடத்தி தொண்டர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட நிதி, கட்சி தலைமை அலுவலகத்தில் 4 சுவர்களுக்குள் ஒப்படைக்கும் சடங்காக மாறிய பின், மாவட்டச் செயலர்களுக்கு நெருக்கமானவர்கள் நீங்கலாக பிற நிர்வாகிகள் தலைமையிடமிருந்து விலகி நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

இதனாலேயே, ஒரு காலத்தில் மாவட்ட பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் மட்டுமின்றி கிளைச் செயலர்களின் பெயர்களையும் பெருங்கூட்டத்திற்கு இடையிலும் நினைவில் வைத்து அழைத்து பெருமைப்படுத்திய தலைமைகள் தற்போது இல்லாத நிலை உருவாகிவிட்டது. தலைமையிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்களுக்கு அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்திவிட்டது. கட்சி ஆதரவாளர்களே ஆனாலும்கூடத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொண்டால் பணம், உணவு, போக்குவரத்து இத்யாதிகள் கேட்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

பிரமுகர் வசூலாக மாறிய மக்கள் வசூல்: துண்டு மற்றும் உண்டியல் மூலம் பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் நிதி வசூலித்து வளர்ந்த கட்சிகள், பின்னர் பிரமுகர்களைக் குறி வைத்து நகரத் தொடங்கின.

அந்தந்த மாவட்டத்திலுள்ள பெரு முதலாளிகள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவன உரிமையாளர்களிடம் ஒவ்வொரு கட்சியும் கணிசமான நிதியை, அன்பளிப்பாகவோ, கட்டாய வசூலாகவோ பெற்றுக் கொள்கின்றன. விதிமுறைக்கு மாறாக செயல்படும் ஆலைகளின் உரிமையாளர்கள், கட்சிக்கு மட்டுமல்லாமல், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களின் செலவுக்கும் நிதியை வாரி வழங்கத் தொடங்கினர். அந்த வரிசையில் லெட்டர் பேட் கட்சிகளுக்கும் கூட கணிசமான தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற வசூல் வேட்டையை நடத்துவதற்காகவே, கடந்த சில ஆண்டுகளாக சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் விளக்கி தொண்டர்களிடமும், மக்களிடமும் நிதி வசூலித்து வளர்ந்த அரசியல் கட்சிகள், இன்றைக்கு பிரமுகர்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு மாறிவிட்டன.

நிதி இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: இதனால் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற நிலை முற்றிலும் மாறிவிட்டது.

தொகுதியில் பணத்தை கோடிக்கணக்கில் தன்னால் செலவிட முடியும் என வரிசையில் முந்தி நிற்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்ற சூழல் உருவாகிவிட்டது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளர் நேர்காணலின்போதே எவ்வளவு செலவிட முடியும் என்ற கேள்வியும் அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகள்தான் இத்தகைய வழிமுறைகளை பின்பற்றுகிறதென்றால், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோஷத்தோடு களமிறங்கியுள்ள புதிய மாநிலக் கட்சிகளின் தலைமைகளும் கூட, கடந்த பல ஆண்டுகளாக தங்களை தூக்கிப்பிடித்த பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முன் வருமா என்பதும் இன்றைய சூழலில் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளின் நிதி இருப்பு வேண்டுமானால் தற்போது கோடிகளில் வளர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால், இந்த வளர்ச்சி உருவாவதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்த கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள் என்ற சொத்து அழிந்து வருகிறது என்ற அச்ச உணர்வு கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுவதை பணநாயகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை தடுத்துவிட்டது போலும்!
 
 
 

<!–

–>