நதிமூலங்கள்

மனிதன் கண்ட சொற்களிலே அற்புதமான சொல் ‘மனிதன்’ என்றும் மனிதன் மகத்தானவன் என்றும் இலக்கிய மேதை மாக்சீம் கார்க்கி கூறுகிறார். மனிதனை ஆய்வு செய்வதாகச் சொல்லி ‘அகம்’ என்றால் என்ன? ‘ஆத்மா’ என்றால் என்ன? ‘மனம்’ என்றால் என்ன? ‘நான் என்றால் என்ன? என்று நீண்ட காலச் சர்ச்சைகள் நிறைய உண்டு.

புறச்சூழல் அகச்சூழலை உணர்வுகளை மனத்தைத் தூண்டி செயலை உண்டாக்குகிறது. அந்த மன உணர்வுகள் புறச்சூழல் மீது தாக்கம் செலுத்தி மறுவினை புரிகிறது. பிறந்த சிசு தாயிடம் பால் அருந்துவது உள்ளுணர்வுகளால் நடக்கிற இயல்புச் செயல்பாடு ஆனால் மனம் என்பது பிறப்பிலேயே அமைந்து விட்டாலும் புறச்சூழல்களால் தூண்டப்பட்டு உருவாக்கப்படுகிறது.

புறக்காரணங்கள் என்பது மாற்றத்திற்கான சூழ்நிலைதான். அகக் காரணங்களே மாற்றத்திற்கான அடிப்படை என்கிறது இயங்கியல். மனத்தை பித்துக் குளியாக, குரங்காக, கல்லாக, கரும்பாக எத்தனை விதமாய் சித்தரிக்கிறோம். எல்லாம் பொருந்துகிறதே!

கையளவு உள்ளம் வைத்து

கடல் போல் ஆசை வைத்து

விளையாடச் சொன்னான்டி’ என்பார்

கண்ணதாசன். ஆசைகளும், அச்சங்களும், எண்ணங்களும், வண்ணங்களும், பிறப்பு முதல் ஐம்புலன்களின் வழியாய் பதிவானவை. நுகரப்பட்டவை, எல்லாம் தொகுப்பாகி மனம் என்கிற அமைப்பாகிறது. யாராலும் படைக்கபடுவதல்ல மனம். தனி ஒரு உறுப்பல்ல மனம். புறநிலைமைகளின் காரணமாக தூண்டப்பெற்ற மனம், அகமுரண்பாடுகளிலிருந்து பாதிக்கப்படுகிறது. மாறுகிறது. வளர்கிறது.

COLLECT THE SYMPTOMS, SELECT THE REMEDY என்பது ஹோமியோபதி அணுகுமுறை. அப்படிக் குறிகளைச் சேகரிக்கும் போது மனக்குறிகள் வலுவாக நின்றால் அவற்றுக்கு முதன்மை கொடுத்து மருந்துத் தேர்வு செய்வது அவசியம்.

மனம் என்னும் மேடையின் மேலே…

பெண்கள் மீது எத்தனை இழி மொழிகள், அடைமொழிகள்.

வாழாவெட்டி, வேசி, விதவை, அபலை என்பதும் பெண்ணைத் தானே சுட்டிக் காட்டுகிறது.

ஒரு காலைப் பொழுதில் அபலையாய் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். வலதுபுற விலா எலும்புகளின் கீழே சற்று நடுவயிற்றுப் பகுதிக்கு அருகில் அடிக்கடி வலி வருவதாகக் கூறினார். வலி எந்த நேரம் வரும்? எந்த நேரம் அதிகமாக இருக்கும் என்று கேட்டேன். காலையில் எழுந்தவுடன் வலிக்கும். பஸ்ஸில் வரும் போது கூட வலித்தது என்று பல நேரங்களைக் குறிப்பிட்டார்? வலி எப்போது குறையும்? அல்லது குறைக்க என்ன செய்வீர்கள்? என்று மீண்டும் கேட்டேன். ஒவ்வொரு சமயம் ரொம்ப நேரம் வரை இருந்து வாட்டி வதைக்கும் என்றார்.

எனக்கு திருப்தி ஏற்படவில்லை. மருந்துக்கான படம் (Drug Picture) தெளிவு படவில்லை. வேறொரு கோணத்திலிருந்து குறிகளைக் கேட்க துவங்கினேன். அப்போது அந்த பெண் சம்பந்தமாக கிடைத்த விவரங்கள்:

 அந்த பெண்ணின் வயது 33. மணமாகி 13 வருடமாகிறது. கணவன் அன்பற்றவன். குடிகாரன், இரவு சாராய நெடியோடு கழியாத நாட்கள் இல்லை. 10 ஆண்டாக குழந்தை இல்லை. அதற்கு அவள் தான் காரணம் என்று மூர்க்கமான குற்றச் சாட்டுடன் கணவனின் ஏச்சு பேச்சுகளைத் தாங்கிக் கொண்டிருந்தவள் மனதில் மின்னலாய் ஒரு எண்ணம் வெளிச்சம்.

தன்னிடம் இணக்கமாய் சிரித்துப் பேசிய இன்னொரு வாலிபனுடன் உறவு கொண்டு தாய்மை அடைந்துவிட்டாள். கணவன் மூலமாகவே தான் கர்ப்பமடைந்ததாக அவனை நம்பச் செய்து விட முடியும் என்று நினைத்திருந்தாள். கணவன் நம்பவில்லை. அவனிடம் சந்தேகம் விசுவரூபம் எடுத்தது. கருவைக் கலைத்து விடுமாறு வற்புறுத்தினாள். அவள் மறுத்தாள். கரு சுமந்த வயிற்றில் தாக்குவதற்கு அவன் எத்தனிக்க அவள் எதிர்த்து போராட, பிரச்சனை ஊரார் முன்னிலையில் வந்து நின்றது. கணவனும் மனைவியும் பிரிந்தார்கள். அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான்.

அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற உதவிய வாலிபனுக்கும் மணம் முடிந்தது. அவனுக்கும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அவனுடைய வீடு அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது. அவன் வீட்டு விசேசங்களும், சந்தோஷங்களும், அவனுடைய பெண் குழந்தை வளரும் விதமும் அவள் மனதை தீவிரமாகப் பாதிக்கத் துவங்கியது. அது மட்டுமா?  அவன் அவளைச் சந்திக்கும் போதெல்லாம் யாரோ எவரோ என்று ஏறெடுத்துப் பார்க்காமல் அந்நியானாக நடந்து கொள்வதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனவேதனை அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சிறு இடத்தில் வேதனை ஏற்பட்டு விடுகிறது.

நதி மூலம் தெரிந்து விட்டதால் எளிதில் மருந்தை அறிய முடிந்தது. IGNATIA 200 இரண்டு வேளை மட்டும் கொடுத்தனுப்பினேன். ஆதரவு வார்த்தைகளோ, அறிவுரைகளோ ஏதும் சொல்லவில்லை. நாட்கள் நகர்ந்தன. எதிர்பாராத ஒரு நாளில் இன்னொரு பெண் மூலம் அவள் சொல்லி அனுப்பிய தகவல் கிடைத்தது. வலி நின்றுவிட்டது. அவரைப் பார்த்தால் வருத்தம் ஏற்படவில்லை. மனம் திடமாகி உள்ளது. சந்தோஷத்தோடு உடன் வேலை செய்யும் பெண்களைப் போலவே நானும் இயல்பாக மாறி தீப்பெட்டி ஆபிசில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இனி என் குழந்தை தான் எல்லாம்!

கலக்கம் எனது காவியம் – நான் கண்ணீர் வரைந்த ஓவியம்….

கோடையிலும் ஓர் இதமான நாள் குளிர்ந்த மாலைப் பொழுது. 18 வயது இளைஞன் ஒருவன் சோர்ந்த முகத்தோடு சாந்தமே வடிவாய் என்முன் அமர்ந்திருந்தான். கொஞ்ச நாட்களாக பசிக்கவில்லை. சாப்பிட முடியவில்லை என்பது தான்  அவன் பிரச்சனை. அவனுடைய உணவுப் பழக்க வழக்கங்கள் , சிறுநீர், மலம் வியர்வை நிலை, விருப்பு- வெறுப்புகள் எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தேன். கோடையானலும் அவ்வளவாக தாகமில்லை. தண்ணீர்க் குடிக்கும் நினைப்பே வராது என்றால் பளிச்சென்று வேறு குறிப்புகள். புலப்படவில்லை. ஆனாலும் நான் கேட்காமலேயே அவன் சொல்லத் துவங்கிய விசயம் மருந்துத் தேர்வுக்கு பெரிதும் உதவியது. பத்தாம் வகுப்பு வரை நான் படித்ததே பெரிய விசயம். அம்மா அப்பா ரெண்டு பேருமே பிரிந்து வாழ்கின்றார்கள். என் அப்பாவிற்கு என் அம்மா இரண்டாம் தாரம். என் அம்மாவுக்கு என் அப்பா இரண்டாம் தாரம்.

அப்பாவின் முதல் மனைவிக்கு (அவர் இல்லை) ஒரு பிள்ளை உண்டு அவனிடம் அப்பாவுக்கு அதிகமாய் பாசம் உண்டு. அம்மாவின் முதல் கணவருக்கு (அவர் இறந்து விட்டார்) 2 பிள்ளைகள் உண்டு. அம்மா அவர்கள் மேல் தான் அன்பாய் இருக்கும் நான் அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை நான் இங்குள்ள வீட்டில் பெரும்பாலும் தன்னந்தனியாக இருப்பேன். பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த வரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. இப்போது எனக்கு ஆறுதலாக யாரும் இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்.

நான் தான் வீட்டில் சமைப்பேன். அப்பா குடித்து விட்டு வந்து சாப்பிட்டு தூங்கி விடுவார். சில நாட்களில் என்னுடன் வாதாடிக் கொண்டிருப்பார். எனக்குப் பசிப்பதே இல்லை. நிர்பந்தமாய் சாப்பிட்டால் வயிற்றில் சிரமங்கள் வந்து விடுகின்றன. அவன் இன்னும் சொல்லிக் கொண்டே போனான். ஏனோ தெரியவில்லை. எனக்கு அபூர்வ ராகங்கள் திரைப்படம் நினைவில் மிதந்தது. அவன் தன் நிலை குறித்து சொல்லிக் கொண்டிருந்த போது அவன் விழிகளிலிருந்து நீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. நான் உனக்கு உதவுகிறேன். நானும் கூட உன் நண்பர் தான்.

உறவு என்பது வானத்திலிருந்து விழுவது அல்ல, நாம் உருவாக்கியக் கொள்வது, உன் விளையாட்டுத் தோழர்கள். வகுப்பு நண்பர்கள், உன்மீது அன்பு செலுத்தும் எத்தனையோ பேர்களோடு இருக்கிறார்கள் என்று சொன்ன போது  விழிகள் பனித்திருக்க புன்னகை பூத்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மருந்து பல்சடில்லா 1m

ஒரு வேளை நாட்கள் சில நகர்ந்தன. அவன் அவ்வப்போது வந்து என்னைச் சாதாரணமாக சந்தித்து சிறிது நேரம் உரையாடிவிட்டு செல்கிறான். நன்றாகப் பசித்து சாப்பிடுகிறான்.

நானே எனக்குப் பகையானேன் – என் நாடகத்தில் நான் திரையானேன்…

கல்லூரி மாணவர் ஒருவர், மிகவும் சிக்கலான உபாதை தனக்கிருப்பதாகச் சொல்லத் துவங்கினார். பிரச்னையை நேரடியாகக் குறிப்பிடாமல் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டே போனார். பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன்.

சாப்பிட்டுச் சிறிது நேரம் கழித்ததும் ஆண்குறி விறைப்படைந்து விடுவதாகவும், அந்நிலை நீண்ட நேரம் நீடித்திருந்து பின்னர் குறைவதாகவும் உள்ளடங்கிய குரலில் சொன்னார். பாலுணர்வுக் கிளர்ச்சியோ, சிந்தனைகளோ ஏதுமற்ற மனநிலையில் கூட சாப்பிட்ட பின் இப்படி ஏற்படுகிறதே என்று வருந்தினார். ஆனால் விறைப்பு ஏற்பட்டு கொஞ்ச நேரத்தில் மெதுமெதுவாக வேட்கை கிளம்புகிறது என்றார். குறிப்பாக மதிய உணவுக்குப் பின் இந்தத் தொந்தரவு கடந்த சில மாதங்களாக இருப்பதாகவும், வகுப்பில் அமர்ந்து கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அவரை வெகு சீக்கிரமே குணப்படுத்திய மருந்து  NUXVOMICA 200

நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஹோமியோபதி சிகிச்சை நோயாளியின் நதி மூலம் தெரிந்தால் மருந்து தேர்வு செய்வதற்கான கதவு திறக்கும்.

மனதின் பதிவுகள் உடலில் நோயாக வெளிப்படும் போது, முழு மனிதனுக்கு மருந்தளிக்காமல் புண்ணுக்கு புணுகு தடவுவதால் புண்ணியமில்லை. ஹோமியோபதியர்களாகிய நாம் நோய் நாடி நோய் முதல் நாடிச் செல்லல் வேண்டும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

<!–

–>