நாகை அரசு கல்லூரியின் அடிப்படை வசதிகள் பூர்த்தியாவது எப்போது? 

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து 1991-ஆம் ஆண்டில் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது நாகை மாவட்டம். நாகைக்கு மாவட்டத் தலைநகருக்கான அந்தஸ்து கிடைக்கப் பெற்றிருந்தாலும், நாகையில் ஒரு அரசு கலைக் கல்லூரி கூட இல்லாத நிலையே இருந்தது. 

இது குறித்த தொடர் வலியுறுத்தல்கள் காரணமாக, நாகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அமைக்கப்படும் என 2012-ஆம் ஆண்டில் அரசு அறிவித்தது. இதையடுத்து, நாகை காடம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் இக்கல்லூரி தற்காலிகமாக தொடங்கப்பட்டது.  பின்னர், நாகையை அடுத்த புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவன கட்டடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. 

அங்கு, அடிப்படை கட்டமைப்பு வசதியின்மை உள்பட பல்வேறு பிரச்னைகள் எழுந்ததால், பாரதிதான் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, நாகை – செல்லூர் சாலையில் ரூ. 7.25 கோடி மதிப்பில் நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்ட 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இருப்பினும்,  பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகளில் நீண்ட தாமதம் ஏற்பட்டது.  பின்னர், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நாகப்பட்டினம் – பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. இருப்பினும், போதுமான வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம், நூலகம் போன்ற வசதிகள் புதிய கட்டடத்தில் இல்லாதது சர்ச்சைக்கு உள்ளானது.

இதையடுத்து, கல்லூரியின் புதிய கட்டடத்தில் கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ. 5 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம், நூலகம் ஆகியன கட்டப்பட்டன. இந்தக் கூடுதல் கட்டடங்கள்  2019-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி திறக்கப்பட்டன. பின்னர், அங்கு கல்லூரி முழுமையான அளவில் செயல்பாட்டில் உள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் இக்கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது.  இங்கு, தற்போது சுமார் 1,100-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 70-க்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் இக்கல்லூரிக்கு, சரியான பாதை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.  நாகை – செல்லூர் சாலையில் தேவநதி வாய்க்காலின் வடப்புறக் கரையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரிக்குச் செல்வதற்கு வாய்க்காலைக் கடந்தே செல்ல வேண்டும். 

இதையும் படிக்க | கிரெடிட் காா்டு செலவினம் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனை

ஆனால், வாய்க்காலைக் கடக்க இதுவரை நிரந்தர பாலம் இங்கு இல்லை.  
வாய்க்காலில் 2 பெரிய அளவிலான குழாய்களைப் பதித்து, அதன் மேல் மண்ணைக் கொட்டி, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட தற்காலிக பாதையே, கல்லூரிக்கான பிரதான பாதையாக உள்ளது. கனமழை காலங்களில் இந்தப் பாதையக் கடந்து செல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. 

இக்கல்லூரிக்குச் செல்வதற்கான ஒரே பாதை, இந்தப் பாதை மட்டுமே என்ற நிலையில்  ரூ. 12 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டபோதும், வாய்க்காலின் குறுக்கே நிரந்தர பாலம் அமைக்காமல் விட்டது எப்படி? என்பது புரியாத புதிராகவே உள்ளது. 

அண்மையில் பெய்த கனமழையின் போது,  இந்தப் பாதை உள்வாங்கி, வாய்க்காலில் அழுந்தியது.  அதிர்ஷ்டவசமாக அப்போது, கல்லூரி விடுமுறைக் காலம் என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், பாலம் உள்வாங்கியதால் வாய்க்காலின் நீர்ப் போக்குத் தடைபட்டு, கல்லூரியின் சுற்றுப் பகுதிகளிலும், அருகில் உள்ள வயல்களிலும் புகுந்தது. இதனால், கல்லூரியின் சுற்றுப் புறங்களில் வெள்ள நீர் தேங்கி, சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டது. 

கல்லூரியின் சுற்றுப் புறங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீர்.

அதேபோல, தெரு விளக்கு வசதிக் கூட இல்லாத பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு இதுவரை சுற்றுச் சுவரும் அமைக்கப்படவில்லை.  இதனால், இரவு நேரங்களில் இக்கல்லூரியின் சுற்றுப் புறங்கள், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகின்றன. பல நேரங்களில் கல்லூரியின் இரவு காவல் பணியில் இருப்பவர்களுக்கும், சமூக விரோதிகளுக்குமிடையே தகராறு ஏற்படும் சூழல்கள் கூட இங்கு ஏற்பட்டுள்ளது. 

இக்கல்லூரி மாணவ, மாணவியர் பெரும்பாலானோர் கிராமப் புறங்களில் இருந்து பேருந்துகள் மூலமே நாகை வருகின்றனர். அவர்கள்,  நாகை -செல்லூர் சாலை வழியேதான் கல்லூரிக்குப் பயணிக்கின்றனர். இந்தச் சாலையின் ஒரு பகுதி நாகை நகராட்சிக்கும், மற்றொரு பகுதி செல்லூர் ஊராட்சிக்கும் சொந்தமானதாக உள்ளது. இதில், ஊராட்சிக்குச் சொந்தமான சாலை நடந்து செல்வதற்குக் கூட தகுதியற்றதாக உள்ளது. இது தொடர்பாக, பல முறை, பலரும் கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அதற்கும் தீர்வு காணப்படவில்லை.

இதையும் படிக்க | பகல்பத்து 2ம் நாள் விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

அதேபோல, கல்லூரி மாணவ, மாணவியர் பயனைடயும் வகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கல்லூரி வரை பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான  தொலைவு நடந்தே கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளது. 

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் ஒரு கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்புகளில் கவனமற்ற நிலை தொடர்வது, தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகத்துக்கும் பெருமை தரக் கூடியதாக இருக்காது. 

எனவே, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாதைக்கு வாய்க்காலில் நிரந்தர பாலம் அமைக்கவும், சுற்றுச் சுவர் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலையை சீரமைக்கவும், பேருந்து இயக்கவும் தொடர்புடையத் துறைகளுக்கு மாவட்டநிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>