நானே நானா யாரோ தானா என அசத்த வைக்கும் நவீன அழகுக் கலை சிகிச்சைகள்!

பொதுவாக நாம் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை வழங்கும் தொழில்நுட்பத்தை தருவதுதான் தற்போது டிரெண்டில் உள்ள நவீன ஒப்பனைச் சிகிச்சை முறைகள். கடந்த பத்தாண்டுகளில் ஒப்பனைச் சிகிச்சைகளைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்களது தோற்றம் குறித்த உணர்வு இளைஞர்களிடம் பெருகியிருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் பிரபல ஒப்பனை சருமவியல் நிபுணர் டாக்டர் சயித்ரா வி.ஆனந்த். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

‘மரபியல் ரீதியாகத் தங்களது தோற்றம் எப்படி இருப்பினும் அதனை தாங்கள் விரும்பிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ள உதவுவதுதான் இன்றைய நவீன சிகிச்சை முறைகள். இதில் தற்போது, லேசர் ஹேர் ரிடக்ஷன், பாடி ஓடர், ஃபேஷியல் காண்டரிங்க், லிப் ஃபில்லர்ஸ் என உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தாங்கள் விரும்பியபடி மாற்றி அமைத்துக் கொள்ள பல வகையான நவீன சிகிச்சைகள் நாளுக்கு நாள்அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

லேசர் ஹேர் ரிடக்ஷன் என்பது முகம் மற்றும் உடலிலுள்ள தேவையற்ற முடியை லேசர் மூலம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் அகற்றுவதாகும். மேலும், முடியை நீக்கும் போது வலியோ, பக்க விளைவோ ஏற்படாத வகையில் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது போன்று பிறக்கும் போது இருக்கும் முக அமைப்புகளுடன் ஆயுள் முழுமைக்கும் வாழும் காலம் தற்போது மலையேறி விட்டது. அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஒட்டு மொத்த முகத்தின் வடிவத்தை மாற்றிப் புத்துணர்வுடன், அழகாகவும், எழிலாகவும் தோற்றமளிக்க உதவும் நவீன சிகிச்சைகள் ஏராளமாக வந்துள்ளன. உதாரணமாக புருவங்களை ஏற்றியும், மூக்கைக் குறுகலாகவும், உதடுகளை மென்மையாவும், கன்னங்களை பூசினாற்போலவும், உருண்டையான முகத்தை ஓவல் வடிவத்திலும், தாடைகளை கூராகவும் மாற்றி அமைக்கலாம்.

உதடு ஃபில்லர் சிகிச்சை முறை, இதன் மூலம் முக அழகுக்கு எழில் சேர்க்க, மென்மையான, கவர்ச்சியான, குவிந்த உதடுகள் வேண்டுமென்று விரும்புபவர்கள் லிப் ஃபில்லர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உதடு ஃபில்லர் ஊசிகள் மூலம் அவரவர் ஆசைப்படும் உதடுகளைப் பெற இந்த சிகிச்சை உதவுகிறது.

இதுபோன்று இன்னும் பல சிகிச்சை முறைகள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிரெண்டில் உள்ளது. எத்தனை நவீன சிகிச்சைகள் வந்துவிட்டாலும், இவ்வகைச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பு இந்த சிகிச்சை குறித்த விவரங்களையும், விளைவுகளையும் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். பிரபலங்களைப் போன்று நாமும் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பில்லாத எந்த சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தரமான மற்றும் தேர்ந்த நிபுணரிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது’ என்கிறார் சயித்ரா.

<!–

–>