நான்கு இந்திய வீரர்களுக்கு கரோனா: மயங்க் அகர்வால் இந்திய அணிக்குத் தேர்வு

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் ஆமதாபாத் நகரில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்திய அணியில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாட கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா என ஐந்து பேட்டர்கள் மட்டுமே உள்ளார்கள். இதன் காரணமாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று ஆமதாபாத்துக்கு வரும் மயங்க் அகர்வால், மூன்று நாள் தனிமைப்படுத்தப்படுவார். பிறகு ஞாயிறன்று நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் பயிற்சிகள் எதுவுமின்றி அவர் உடனடியாக விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>