நிஜத்தில் ஒரு பாரதி கண்ணம்மா கதை! 46 ஆண்டுகளுக்குப் பின் குழந்தையின் தந்தை என உறுதி

 

சில நேரங்களில் திரையில் நடக்கும் கற்பனைக் கதைகளைவிடவும்  பரபரப்பாகவும் துணுக்குறச் செய்வனவாகவும் இருக்கிறது உண்மைக் கதைகள்.

சின்னத் திரையில் பாரதி கண்ணம்மா என்றொரு தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தனக்குள்ளதாகக் கருதும் குறை காரணமாகக் கண்ணம்மாவுக்குப் பிறந்த குழந்தை தன்னுடையதல்ல என்று  நினைக்கிறான் டாக்டர் பாரதி. இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்ற கண்ணம்மாவின் வலியுறுத்தலையும் நிராகரித்துவிடுகிறான். தன்னுடைய குழந்தை பாரதிக்குப் பிறந்ததுதான் என உறுதி செய்வதற்கான வழியில், கண்ணம்மாவின் போராட்டங்களுடன் ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளுடன் நீண்டுகொண்டிருக்கிறது தொடர்.

நிஜத்திலும் ஏறத்தாழ – சிற்சில மாற்றங்களுடன் சென்னையில் நடந்துள்ள கண்ணம்மா கதை பெரும் அதிர்ச்சியூட்டத் தக்கது.

இதையும் படிக்க | இரு பெண்கள், இரு நம்பிக்கை துரோகங்கள், ஒரு கொலை, ஒரு கைது: எங்கே செல்கிறது சமுதாயம்?

சென்னையில்  கொளத்தூர் பகுதியிலுள்ள முருகன் நகரைச் சேர்ந்தவர் இளவரசி. இவர்தான் நிஜ கண்ணம்மா, இவருடைய வாழ்க்கை முழுவதுமே போராட்டம்தான் என்றால் மிகையில்லை. இப்போது இவருக்கு வயது 65 என்றால் அதிர்ச்சியடைவீர்கள்.

1975-ஆம் ஆண்டில்  தன்னுடைய 19-ஆவது வயதில் விஜய கோபாலன் என்ற ஒருவரை இளவரசி காதலித்துத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கணவன் – மனைவியாக  7 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றனர்.

இந்த காலகட்டத்தில்கூட ஏனோ, வெவ்வேறு இடங்களில் இவர்கள் வசித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாழ்க்கையில் இளவரசி கருவுற்றார். இளவரசி கருவுற்றதுமே கழற்றிவிட விஜயகோபாலன் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் ஒரு வேலைக்காக ஹைதராபாத் செல்வதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்ற விஜய கோபாலன் திரும்பிவரவேயில்லை. கடிதங்கள்தான் ஒரே தொடர்பு என்றிருந்த காலம் அது. செல்போன்கள் எல்லாம் இல்லாத காலம். தொலைபேசியே இருக்காது. என்ன, எங்கே எதுவும் தெரியாது.

பாவப்பட்ட இளவரசியில் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு விஜயகோபாலனைத் தேடியலைந்தார். ஆனால், அவரைப் பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவேயில்லை.

இக்கட்டான இந்த நிலையில்தான் இளவரசிக்கு ஒரு பெண் குழந்தையும்  பிறந்தது. அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை.  கணவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்றும் தெரியவில்லை.

இவ்வாறாக காணாமல்போன கணவனைத் தேடிய போராட்டமாகக் கழிந்த நிலையில், தனியொரு பெண்ணாகத் தவித்துக் கொண்டிருந்த இளவரசிக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

இளவரசியைத் திருமணம் புரிந்துகொண்டு, ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையான தன்னுடைய கணவர் விஜய கோபாலன், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதுடன், காவல்துறையில் பணி செய்துவருகிறார் என்பது 1985 ஆம் ஆண்டில் இளவரசிக்குத் தெரியவந்தது.

1985-ஆம் ஆண்டு, கவனிக்க வேண்டிய விஷயம், திருமணம் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர், மணம் புரிந்த தன்னையும் குழந்தையையும் தவிக்கவிட்டு வேறு ஒரு திருமணம் செய்துகொண்ட கணவர்  விஜய கோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை செம்பியம் காவல்நிலையத்தில் போலீஸில் இளவரசி புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், விஜயகோபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். (அவரே காவல்துறையில்தான் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்)  விசாரணையில்போது, இளவரசியையும் தெரியாது, அவருக்குப் பிறந்த குழந்தையைப் பற்றியும் தனக்குத் தெரியாது என்று மறுத்துவிட்டார் விஜய கோபாலன்.

எதுவும் நடைபெறவில்லை. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்து 35 ஆண்டுகளான நிலையில், 2010-ஆம் ஆண்டு இதுதொடர்பாக நீதிமன்றத்தில் இளவரசியின் மகள் வழக்குத் தொடுத்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவில், இளவரசிக்கு விஜயகோபாலன் மூலமாகத்தான் இந்தப் பெண் குழந்தை பிறந்தது என்பது உறுதி செய்யப்பட்டது – 2020 ஆம் ஆண்டில், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து. ஒரு விஷயத்தில் நிஜ கண்ணம்மா வென்றுவிட்டார். 

இதையும் படிக்கஒரு கணவர், மூன்று காதலர்கள்: கருவிலிருந்த குழந்தைக்குத் தந்தை யார்? முடிவு: பெண் தற்கொலை!

இவ்வளவுக்கும் பிறகு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத இளவரசி மீண்டும் இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புதிதாகப் புகார் செய்தார்.

காவல்துறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, திருமணம் முடிந்து 46 ஆண்டுகளாகின்றன, முதன்முதலாகப் புகார் செய்து 36  ஆண்டுகளாகின்றன, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 11 ஆண்டுகளாகின்றன!

இவற்றுக்கிடையே, காவல்துறையில் பணியாற்றிவந்த விஜய கோபாலனோ, கடைசியாக சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார். இப்போது விஜய கோபாலனுக்கு வயது 72!

காதலித்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுக் கைக்குழந்தையுடன், 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருந்த இளவரசிக்கு வயது 65!

விஜய கோபாலனுக்கும் இளவரசிக்கும் பிறந்த மகளுக்கு இப்போது வயது 42, இவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

சட்டத்தின் மூலம் 36 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் விஜய கோபாலன் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின், பெண்ணை ஏமாற்றியது, இன்னொரு திருமணம் புரிந்துகொண்டது என, காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட விஜய கோபாலன் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை, தேடும் பணி நடைபெறுகிறது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனிமேல்தான், விசாரணைகள், நீதிமன்றங்கள், வழக்காடல்கள், தீர்ப்புகள், மேல் முறையீடுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது.

இப்போதைக்கு குழந்தையின் தந்தை விஜய கோபாலன்தான் என்பதை உறுதி செய்து  உலகுக்கு அறிவித்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் நிஜ கண்ணம்மா!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>