நெருக்கடி தரும் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள்: இந்தியா உணவு இடைவேளையில் 53/3

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.

ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெறும் டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கியுள்ளார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவரும் தேர்வாகியுள்ளார்கள். 

இன்றும் இந்திய அணி தொடக்க வீரர்களான ராகுலும் மயங்க் அகர்வாலும் நன்கு விளையாடினார்கள். 14 ஓவர்கள் வரை இவர்களை தெ.ஆ. பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. 5 பவுண்டரிகள் அடித்த மயங்க் அகர்வால் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். எனினும்26 ரன்களில் ஜேன்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா 33 பந்துகள் வரை தாக்குப்பிடித்தார். 3 ரன்கள் எடுத்தவர், ஆலிவர் பந்தில் ஆட்டமிழந்தார். ரஹானே முதல் பந்திலேயே ஆட்டமிழந்து மேலும் ஏமாற்றினார். 

இந்தியா முதல் நாள் உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.  ராகுல் 19, விஹாரி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆலிவர் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>