பகுதி 1 வளர்ப்பைச் சிறப்பிக்க: மிகச் சிறந்ததைப் பெற, மிகச் சிறந்ததைக் கொடு!

மிகச் சிறந்ததைப் பெற, மிகச் சிறந்ததைக் கொடு!

கடந்த பல ஆண்டுகளாகக் குழந்தைகளின் ஆரம்பக் கால வளர்ச்சியான ப்ரீ நேடல் (pre natal, பிறப்பதற்கு முன்பு), பெரிநேடல் (perinatal, பிறந்த உடனே), போஸ்ட் நேடல் (postnatal, பிறந்த பிறகு) என்கிற காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பல நிபுணர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார்கள்.

உடல், மன வளர்ச்சி, வளரும் சூழல், உறவுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, அதன் முக்கியத்துவத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இது கல்வி, அறிவாற்றல் வளர்ச்சி, ந்யுரோசைன்ஸ், மனநலம், உளவியல் எனப் பல துறையினரின் கண்டுபிடிப்பாகிறது. இவர்களின் ஒட்டுமொத்தத் தகவல் : குழந்தைப் பருவ காலங்களின் மிக முக்கியமான தேவை – ஊட்டமளிக்கக் கூடிய சூழல் என்பதே.

இதைப் பெற்றோர் முழுமையாக  உட்கொள்வது அவசியம்,  மிகவும் தேவையானது. எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் வாழ்வின் தொடக்கத்தைச் சரியாக அமைப்பதால் அன்றைக்கும் சரி, பிற்காலத்திலும் கை கொடுத்து உதவும். வளர்ந்து வரும் குழந்தையின் நலனுக்கு அஸ்திவாரமாய் அமையும்.

நலன் என்றால்

டபுள்யூ எச் ஓ (World Health Organization, WHO) என்ற உலக நிர்வாகம் நலன் (Health) என்றால், நோயற்ற நிலை மட்டும் நலன் என்பதாகாது என்கிறார்கள். உடல் நலன், மன நலம், சமூக உறவு நலன், நம்பிக்கை இவை யாவும் நன்றாக இருப்பதே நலன் என்பதாகும்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும், உடல்-மனம்- உறவு-நம்பிக்கை எல்லாம் கலவையாகச் செயல்படுகின்றன. நலன்கள் யாவிலுமே ஒன்றுக்கொன்றின் தாக்கம் இருக்கும். அதனால் தான் நலனை ஹோலிஸ்டிக்காக (Holistic) அதாவது முழுமையாகக் கருதப்படுகிறது.

குழந்தைகள் நலனுடன் வாழ அவர்களுடன் இருப்பவர்களான பெற்றோர், பெரியவர்கள், ஆசிரியர்கள், அவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள், ஒவ்வொருவரும் குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால்தான் அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? செய்வதின் விளைவுதான் என்ன?

குழந்தைப் பருவத்திலேயே நலனுக்கு நல்ல அஸ்திவாரத்தைப் போடத் தேவை என நிபுணர்களின் கருத்து. இதில் ஆரம்ப வருடங்களில் குழந்தைகளுடன் நேரம் கழிக்கும் ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் உள்ளதால், அது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்த தருணத்தில் குழந்தை பராமரிப்பில் அவர்களுடன் உறவு கொள்ளும் அனைவரின் அணுகுமுறை, மனப்பான்மை எவ்வாறு இருக்கிறது என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம். கூட இருப்பவர்களின் அணுகுமுறை, சொற்கள் குழந்தையின் குணாதிசயங்களில் வெளிப்படும். எப்படி என்பதைப் போகப் போகப் பார்ப்போம்.

குழந்தைகளுடன் இருப்பவர்களைப் பொருத்தவரை:

  • குழந்தைகள் தங்களது முதல் ஐந்து வருடங்களில் தங்களைச் சுற்றியுள்ளதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது ஏன்?
  • இந்த காலகட்டத்தில் குழந்தைகளும் யோசிப்பதுண்டா?

(இவை இரண்டையும் மையமாக வைத்து வரும் பல வாரங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்).

அரவணைப்பு

அரவணைப்பது, ஆடை அணிவிப்பது, பால், சோறு ஊட்டுவது, சுத்தமாக இருக்க வைப்பது, தீங்கு நிகழாமல் பாதுகாப்பது குழந்தை வளர்ப்பதில் அடங்கும். இவை அனைத்தும் தேவையே. இவற்றை ‘அடிப்படைத் தேவை’ எனக் குறிப்பிடுவார்கள். இவை இருந்தால்தான் நலன் மேம்படும். உலகளவில் குழந்தை உளவியல் நிபுணர்களும் ஆய்வாளர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அத்துடன் இதையும் சொல்லி இருக்கிறார்கள்: குழந்தைகள் உண்பது, உடை அணிந்து கொள்வது தானாகவே செய்யப் பயிலும் வரை, படிப்படியாக இந்த செய்முறைகளை அவர்களுக்குச் சொல்லித் தந்து, செய்ய வைக்கலாம். நீங்கள் இப்படி எண்ணுவீர்களா, முயல்கிறீர்களா?

உதாரணத்திற்குக் குழந்தை ஏறத்தாழ ஒன்றறை வயது இரண்டாவது வயதிற்குள் எங்குச் சிறுநீர் கழிக்க வேண்டுமோ அதை காட்டி, பழக வைப்பது என்பதை எடுத்துக் கொள்வோம். குழந்தை நடக்க ஆரம்பத்திலிருந்து அவர்களுக்குச் சிறுநீர் போகும் இடத்தை காட்டி பரிச்சயம் செய்த பிறகு, கழிப்பு முறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைக் கிரமமாகப் பெரியவர்கள் கற்றுத் தர முடியும். இதை, குழந்தைப் பழகப் பழக, தானாகப் போக ஊக்குவிக்கலாம். நாளடைவில் குழந்தைகள் தானாகச் செய்யத் தொடங்குவார்கள்.

தன் தேவையைத் தானே பார்த்துக் கொள்ள முடிகிறது என்று அவர்கள் அறிய அறிய, பொறுப்பு உணர்வு வளர்வதற்கு அது அஸ்திவாரம் ஆகும். சுற்றுச்சூழல் சுத்தமும் சிறுவயதில் ஆரம்பமாகும். இவ்வாறு செய்தால் அனாவசியமாகக் குழந்தை டையாப்பர் அணிவதைத் தவிர்க்கலாம்.

என்னிடம் ஆலோசிக்க வரும் பெரும்பாலான தாயார்கள் ஐந்து, எட்டு வயது வரை குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிப்பதைப் பழக்கவில்லை, தாங்களே பார்த்துச் செய்வதாகச் சொல்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை குழந்தைக்காக ஒவ்வொன்றையும் செய்வது பெற்றோரின் பொறுப்பு, கடமை என்று சொன்னார்கள். சொல்லித் தருவது கடமை, செய்து கொண்டே இருப்பது? இதனால் தானோ குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் தடுமாறுவது?

குழந்தைகள் தானாகச் செய்யப் பழக்கினால் தங்களைத் தவறாக எண்ணுவார்கள் என்று நினைத்து, அது அரவணைப்பு ஆகாது என அஞ்சினார்கள். சிந்திக்க வேண்டியவை:

  • குழந்தைகளால் எதையும் செய்ய முடியாது என்ற நினைப்பினால், அவர்களுக்கு எல்லாவற்றையும் தானே செய்து விடுவதா?
  • பாசத்தைக் காட்டுகிறோம் என்ற எண்ணத்தினாலா?
  • ஆரம்ப வயதில் எல்லாவற்றையும் பெரியவர்கள் கற்றுத்தர வேண்டும், சிறிது சிறிதாகக் குழந்தைகளும் பயில வேண்டும் எனக் கருதுவதுண்டா?
  • எந்த காலகட்டத்தில் அவர்களாக செய்ய விடுவது?

செய்ய விடலாமா? பெற்றோரே செய்யவா?

பார்த்துப் பார்த்து எல்லாவற்றையும் செய்து விட்டால், குழந்தைகளுக்குச் செய்முறைகளைப் பற்றிய சிந்திப்போ, அல்லது தானாகவும் செய்து கொள்ளலாம் என்று தோன்றாமல் கூடப் போகலாம். எப்பொழுதும் தன் தேவைகளுக்கு மற்றவர் உதவியையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதன் காரணியே, இந்தச் சூழல்களில் எந்தவிதமான ஊக்குவிப்பும் இருக்க வாய்ப்பு இல்லாததுதான். அவர்களைச் செய்ய விடாமல் நாமாகச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் அறிவோ, உணர்வோ, சமுக வளர்ச்சிகளோ, திறன்களோ வளர வாய்ப்பில்லாமல் போகும், மாறாகப் பாதிக்கப்படும்.

அரவணைப்பு உகந்தது, தேவையே. ஊக்கத்துடன் கலந்தால்தான் இதற்கு முழுப் பலன் உண்டு. அதாவது குழந்தைகளின் திறன்கள் வளர, நல்ல ஆற்றலுடன் வளர்வது அவசியம்.  

பிறந்ததிலிருந்து குழந்தைகளால் யோசிக்க முடியும் என்ற கண்ணோட்டத்துடன் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் பார்ப்பதுண்டா? யோசிக்கத் தூண்டுவதுண்டா?

குழந்தைகளின் வளர்ச்சி முறைகள், மற்றும் வளர்ப்பு பற்றிய எண்ணங்களைப் பற்றித் தொடர்ந்து அறிவோம். வரும் பல வாரங்களுக்கு இதன் பல்வேறு விதங்களை இங்கு விவரித்து வருவேன். என்ன தேவை? ஏன்? எதற்காக? அவைகளைச் செய்வதின் பலனையும் அவைகளை அமைக்க சில பரிந்துரைகளுடனும்.

மேலும் பேசுவோம்…..

மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

***************************************************

<!–

–>