பகுதி 4 'வேண்டியதைப் பெறுவது எப்படி?அடம் பிடிப்பும் நிலாச் சோறும்!'

 

வளரும் பொழுது குழந்தைகள் இயற்கையாக கற்றுக் கொள்வது உண்டு. ஐம்புலன்கள் கற்றல், எவ்வாறு பழக்க வழக்கங்கள் அமைகின்றன, இவையெல்லாம் முழு நலனுடன் சேர்ந்தவை என்பதைச் சென்ற வாரம் அறிந்தோம். 

இந்த பகுதியில், குழந்தைகள் ஆரம்பக் காலத்தின்  முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கட்டுப்பாடுகள் எப்படி அமைகின்றன, அல்லது சரியாக அமையாமல் போகின்றன என்கிற கோணத்திலிருந்து பார்வையிடலாம்.  

சுருக்கமாகச் சொன்னால்: குழந்தைகள் பிறந்த முதல், அவர்களின் ஐந்தாறு வயது வரையான காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி மிக மிக விரைவாக இருக்கும். ஐம்புலன்களின் மூலம் கற்றலைத் தவிர, வெவ்வேறு செயல்முறைகளையும் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் என்ன என்று பார்த்து கற்றுக் கொள்வார்கள்.  இப்படிச் செய்வதால் உடலுக்கும் பயிற்சியுடன் அறிவாற்றல், சுயமதிப்பு வளர உதவுகிறது. 

குழந்தைகள் கற்றுக் கொள்வதில் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை உபயோகிப்பார்கள். புரிதலை வரவழைத்துக் கொள்ள தாங்கள் விரும்புவதை, கேட்பதைப் பெறப் பல நுணுக்கமான வழிகளில் செய்து பார்ப்பார்கள். குழந்தைகள் வளர்ச்சிக்கு வெவ்வேறு பொருட்களை அறிமுகப்படுத்தி, அதை அனுபவித்து, விளையாட விடுவது மிகத் தேவையானது. இது தான் அவர்களின் தசை, மூளை, கவனம் எனப் பல்வேறு வகையான வளர்ச்சிக்கு உரமாகும்.

இந்த வயதில் குழந்தைகளிடம் இதையும் பார்த்து இருப்போம், பல சமயங்களில் தங்களுக்கு வேண்டியதை அடைவதற்கு, இதுவரையில் முன்னர் என்ன செய்தால் அது கிடைத்திருந்தால் அதே யுக்தியை மறுபடியும் உபயோகிப்பார்கள். இந்த நமக்குச் சம்மதம் அல்ல, யுக்திகள் நல்லவை அல்ல, என்றால் என்ன செய்வதென்று இந்த பகுதியில் பார்ப்போம். புரிய வைப்பது, எப்படி, எப்போது? அவர்கள்,வேண்டியதைப் பெறுவது எப்படி? இதை விளாவரியாக இங்கும் அடுத்த பகுதியிலும் பார்க்கலாம். 

புரிதல்-அறிதல் சூழல்

குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே நம் குரல், பேசும் தோரணங்கள், நம் உடம்பின் சூடு, வார்த்தை சொற்களின் அழுத்தம் இவற்றின் மூலம் நாம் சொல்வதை, நம் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்கள். ஒரு வேளை இதை நாம் அறியாவிட்டால், பாப்பாவிற்கு ஒன்றும் புரியாது என்று நினைத்து,  உயிருள்ள பொம்மை போல் உறவாடக் கூடும். உண்மையில், போன பல வாரங்களில் சொன்னது போல், பிறப்பிலிருந்தே குழந்தைகள் அவர்களுடன் உறவாடுவோரின் முக பாவங்களிருந்தும் மற்ற அடையாளங்களிலிருந்தும் அவர்களின் உணர்வுகளை, மனநிலையைச் சீக்கிரமே புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

நாம் குழந்தைக்குப் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம், அதன் சேட்டைகளை, கற்றல்களைக் கூர்ந்து கவனித்துக் கண்டு மகிழ்கிறோம். எவ்வாறு குழந்தைகளை நாம் கூர்ந்து கவனிக்கிறோமோ அதே போல் குழந்தைகளும் நாம் செய்வதை, சொல்லும், பழகும் விதங்களைக் கூர்ந்து கவனித்து அதன் பிரதியாக தானும் செய்வார்கள். இதுவே சமூக நலனின் முதல் அடிகள் என்றும் கூறலாம்.

இந்தத் திறனை தனக்கு வேண்டியதாகச் சுட்டிக் காட்டி நம்மிடமிருந்து கேட்டுப் பெறுவதற்கு உபயோகிப்பார்கள். குழந்தைக்கு ஒரு பந்து வேண்டும் என்றால் அதைக் கையால் காட்டிக் கேட்க, நாம் தருவதுண்டு. கேட்டால் கிடைக்கும் என்பதைக் கற்றுக் கொள்ளுவார்கள். சில சமயங்களில் கண்விழி எங்கே செல்கிறதோ அதை நாம் புரிந்து கொண்டு கொடுப்பதும் உண்டு. இதிலிருந்து சொல் இல்லா பாஷை (non verbal communication) பயன் படுத்தலாம் என்ற புரிதல் வருகிறது. போகப் போகக் குழந்தைகள் இந்த விதத்தையும் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுவார்கள்.

பார்த்து, தனக்குப் புரிந்ததை வைத்துச் செயல்படுவது

குழந்தைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் வார்த்தை வரும்முன் தங்களின் பல உருப்புகளை உபயோகிப்பார்கள். 

ஓர் சில வார்த்தைகள் வரும் முன்னால், பாப்பா தன் தூளியில் கட்டியுள்ளதை எட்டித் தொட முயல, அவர்களுக்கு உதவப் பக்கவாட்டில் வைப்போம். அப்படித்தான் குழந்தைகள் கையால் காட்டியும் தனக்கு வேண்டியதை”சொல்ல” முடியும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். இவ்வாறே கேட்டால், பொருட்கள் கிடைக்கும் என்பதையும் அறிவார்கள். 

வாய்ச் சொற்கள் முழுதாக வருவதற்கு முன்னால் குழந்தைகள் தங்களுக்குப் பொருட்கள் தேவை வேண்டும் என்றால் வெவ்வேறு விதமாக “கேட்பார்கள்”. கொஞ்சம் தானாக எட்டி முயலுவது. கண்களை உருட்டி உருட்டி வேண்டியதைப் பார்க்க நாம் ஊகித்துத் தருவோம். வார்த்தைகள் பேசும் ஆரம்பக் காலத்தில் “ஆ, ஆ, ஆ” என்றும், “ஹூம், ஹூம்” எனக் குறித்தும் கேட்பார்கள், அதற்குப் பிறகு “அது, அது” என்று பொருளைக் காட்டி கேட்பார்கள். பொருட்களின் பெயர் தெரிந்தும் அதைப்  பிரயோகிப்பார்கள்.

தங்களுக்கு வேண்டியதைக் கேட்க இப்படியெல்லாம் முடியும் எனப் பலமுறை செய்ய, நாமும் அதற்கு இணங்கித் தந்தால், இதுதான் வழி என்பதைப் புரிந்து கொள்வார்கள். இப்படித் திரும்பத் திரும்பச் செய்து வழிமுறைகளை அமைத்துக் கொள்வது அவர்கள் கற்றுக் கொள்ளும் விதங்களாகும்.

சில சமயம்,  பொருட்களின் விலையினாலோ, உடையும் என்பதாலோ, நம்முடையது அல்ல என்பதாலோ, அவர்கள் தன்னைக்  கவர்ந்த பொருளைத் தொட/ எடுக்க முயற்சிக்கும் பொழுது நாம் இல்லை என்று கூறுவோம், அல்ல சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்ப்போம். உதாரணத்திற்கு கைப்பேசி என்றால் ஒரு வினாடிக்குக் கொடுத்து எடுத்துக் கொள்வோம். தண்ணீர் பாட்டிலை அழுத்தி மூடி கொடுப்போம், ஆனால் துணிமணிகளையோ தாராளமாகத் தருவோம். அல்லது சிறிது நேரத்திற்கோ,  ஓரிரு முறை மட்டுமோ தந்து, பிறகு கொடுக்க மாட்டோம். 

குழந்தை திரும்பக் கேட்டாலோ, தொட்டாலோ நாம் மறுக்க மிக மிதமாகச் சத்தம் செய்வோம். சில நேரங்களில் குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டு விடும். சில முறை குழந்தைகள் மறுபடி வேண்டும் என்று கேட்டுப்  பார்க்கும். பல தருணங்களில் அவர்கள் தங்களுக்கு ஏதோ காரணத்திற்குத் தடை செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து ஒப்புக் கொள்வதுண்டு. குழந்தைகளுக்கு “இல்லை”, “கூடாது”, “முடியாது” என்பதை அவர்களுடன் வாழும் நபர்கள், “ஹூம்” என்று சொல்லி, அல்ல வெளிப்படையாகத் திடமாக “நோ” என்று, தலையை இல்லை என்று அசைத்துக் காட்டி, கேட்கும் பொருளை விலகி எடுத்து வைத்து, எனப் பல முறைகளில் உணர்த்தலாம்.

ஆனால் சில முறை குழந்தைகளுக்கு அந்தப் பொருள் மிகவும் வேண்டும் என்றால் உடனே சிணுங்குவார்கள். நாம் தர மறுத்தால் சத்தம் கூடும். அதற்கு அடுத்தபடியாக கத்துவதும் உண்டு, பல முறை சத்தத்தை அடக்கப் பொருளைத் தந்துவிடுவோம். இது போல் கண்ணீர் வராத அழுகை – அதில் சத்தம் நிச்சயம், அடுத்தவர் மனதை வாட்டும் வகையில் அழுகையின் தோரணையும் தென்படும். அழுகையின் அடுத்த லெவல், அஆ, அஆ என்ற சத்தத்துடன் கை கால்களை அசைத்துக் கொள்வது. இப்படிப் பல வழிமுறைகளை வெவ்வேறு தருணங்களில் சின்னக் குழந்தைகள் உபயோகிப்பார்கள், இப்படிச் செய்தால்  கேட்டதைப் பெற முடிகிறதா என்ற தேடல் நடக்கிறது என்றே இதைச் சொல்லலாம்.  

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், குழந்தைகள் இப்படி முயல்வதில் தவறு  ஒன்றுமில்லை. அவர்கள் வளரும் நபர்கள். எப்படி, எது செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளப் பலவிதமான பிரயத்தனம் செய்தால்தான் தெரிய வரும். அதிலிருந்து எது பலிக்கின்றதோ அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிப்பார்கள். சாதாரணமாக மூன்று வயது வரை இப்படி வெவ்வேறு அணுகுமுறைகளைச் சோதித்துப் பார்ப்பார்கள்.

எந்த அளவிற்குக் கேட்க வேண்டும் என்பதையும், வேண்டியதை எப்படிப் பெற முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இதுவெல்லாம் ஒரு சந்தர்ப்பமாகிறது. இந்த சூழ்நிலையில் தங்களால் எவ்வளவு தூரம் கேட்டதை அடைய முடிகிறது என்றதையும் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் “ஆழம் பார்க்கிறார்கள்”!

சில சமயங்களில் கேட்பதைக் கேட்டவுடன் கொடுத்து விடுவோம். இல்லை அவர்கள் நம்மைப் பார்க்க, கண்களால் நாம் பாச வலையில் வந்து தந்து விடுவோம். இல்லை திரும்பத் திரும்பக் கேட்க நாம் சலிப்பு தட்டி தந்துவிடுவோம். ஓர்சில நேரத்தில், பிறர் வற்புறுத்திப் பரிந்துரைக்கையில் கொடுப்பதும் உண்டு. 

எந்த வழிமுறைகள் நமக்குச் சம்மதம் இல்லையோ, எது கூடாது என்று நினைக்கிறோமோ, அதை நாம் தெளிவாக முதல் சில சோதனைகளின் போதே தெரிவித்து விட வேண்டும். வரம்புகளையும் சாந்தமாக, ஆனால் திட நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும்.

மொத்தத்தில், இந்தப் பல வழிகளைக் குழந்தைகள் பயன்படுத்திக் கற்றுக் கொள்ளப் பார்ப்பார்கள். முடிவில் இந்த அனைத்திலும் ஏதோ ஓர் சில வழிமுறை பின்பற்றக் கூடியவை, இதைத் தாண்டிப் போகக் கூடாது என்று தீர்மானிப்பார்கள். இப்படித்தான் வேண்டியதைப் பெறுவதற்கான வழிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டாகின்றன.

இப்படிச் செய்தால்தான் கிடைக்கும்

சில பெற்றோர்கள் குழந்தைகள் கேட்பதையெல்லாம் கொடுப்பார்கள், சில முறை கேட்காமலேயே வேண்டியதைக் கொடுக்கக் கூடும். இதிலிருந்து குழந்தைகள் கருத்தில், நாம் கேட்டால் கிடைக்கும் என்று பதிந்து விடுகிறது. 

எப்போதும் கேட்டது கிடைத்து  விட்டால் குழந்தை இந்த ஒரு வழிமுறை மட்டும் தான் இருக்கிறது என்று இதையே உபயோகிப்பார்கள். மேலும், எப்போதும் கேட்டது கிடைக்க வேண்டும் என்றும் எடுத்துக் கொள்வார்கள்.

வெவ்வேறு சூழ்நிலைகளில் இப்படியே அமைந்து விட வாய்ப்பு இருக்கிறது: ஒரே குழந்தை, முதல் “வாரிசு”, ஆண் குழந்தை, பல வருடத்திற்குப் பிறகு பெற்ற பிள்ளை, குழந்தை உடலில் வியாதி, ஒரு பெற்றோர் இல்லாத வீடுகளில், தத்து எடுத்த பிள்ளை, கடைக்குட்டி. 

பெற்றோர் தாங்கள் குழந்தைக்கு அதிக நேரம் தரவில்லை என்ற குற்ற உணர்விலோ, பாசம் காட்டுவதாக எண்ணியோ, அல்ல குறைபாடுகள் இல்லாமல் வளர்ப்பதாக எண்ணியோ இப்படிச் செயல் படலாம். 

சில சூழ்நிலைகளில், ஒரு வேளை பெற்றோர் குழந்தைக்குக் கேட்டதைத் தர மறுத்தால், பக்கவாட்டில் இருப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பெற்றோரை ஏசுவார்கள். குழந்தைக்கு அது தேவையில்லை, நல்லதல்ல என்று எடுத்துச் சொன்னாலும் கேட்க மறுத்து, குழந்தை கேட்பதைத் தந்துவிட வற்புறுத்துவார்கள். 

இதே உருவத்தில் இன்னொரு விதமும் உண்டு. ஒரு நபர் குழந்தையைச் சொல்லித் திருத்தும் போது அந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் குழந்தையின் சார்பில் பேசுவார்கள். குழந்தைக்கு எடுத்துச் சொல்வது எடுபடாது. முதியோர், தாத்தா-பாட்டி கூட இருந்தால், செல்லமும் சேர்ந்து, “குழந்தை, கொடுத்துடு” என்பதற்கு மறுபேச்சு கிடையாது. மொத்தத்தில், குழந்தையைப் பொறுத்தவரை “கேட்டால் கிடைக்கும்”. கிடைக்கவேண்டும். . 

இப்படியே போய்க் கொண்டு இருந்தால் இதுவே “கேட்டவுடன் கிடைக்கும்” என்றது குழந்தைகளுக்குப்  பழகிவிடும். குழந்தைகள், தான் கேட்டதை கிடைக்கும் வரை சமாதானம் ஆக மாட்டார்கள். “அடம்” பிடிப்பது என்பது இதுதான்.

அடம்பிடிப்பு வெளிப்படும் பரிமாணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது எவ்வாறு வெளிப்படும் என்றால் குழந்தைகள் தாங்கள் கேட்கும் பொருட்கள் கிடைக்கும் வரை சமாதானம் ஆக மாட்டார்கள். அவர்களின் விளையாட்டுப் பொருட்களை மற்றவருடன் பகிரச் சொன்னாலும் முரண்டு பிடிக்கக் கூடும், தின்பண்டங்கள், பொருட்கள், சாக்லேட் பகிர மறுப்பார்கள்.  சொல்வதைச் செய்ய மறுப்பார்கள். எவ்வளவு நேரமானாலும் சரி, வேண்டியது கிட்டும் வரையில் அடம் பிடித்து இருப்பார்கள்.

விளைவு? குழந்தைகள், தாங்கள் ஆசைப்படுவதை அடைவதில் தப்பில்லை என்ற மனப்பான்மை இருக்கும். இது, சுயநலத்தின் அடிக்கல். 

குழந்தைகளின் மீது அளவுக்கு மீறி கவனம் செலுத்தினால் அடம்பிடிப்பு ஏற்படுவதாகு வாய்ப்பு அதிகம். கேட்டது கிடைக்கும் என்ற அனுபவத்தில் இந்த யுக்தியைப் பயன்படுத்தி இருப்பார்கள். அடம், எப்போதும் தன்மேல் கவனத்தை ஈர்ப்பது, இரண்டும் மனநலத்திற்கு உதவாது. அடம் பிடிக்கக் கூடும் என்ற சூழ்நிலைகளில், உதாரணமாகத் தனியாக விட்டுச் செல்லும் போது, குழந்தைக்கு முன்கூட்டியே எடுத்துச் சொல்லிவிட்டால், அடம் ஆரம்பித்தாலும் வேகமாக அமைதி ஆகிவிடுவார்கள்.

அடம் பிடிக்கும் தன்மை நிலைத்து விட்டால், வளர வளர மற்றவர்களைப் புரிந்து கொண்டு, அனுசரித்துப் போகும் சுபாவம் இருக்காது. இது குழந்தை வளர்ப்பின் பல நிலைகளில் பார்க்கலாம். இது உருவாகும் ஒரு தருணத்தை வரும் பகுதியில் பார்ப்போம். 

அடம் பிடிப்பும் நிலாச் சோறும்

உதாரணத்திற்குக் குழந்தைகள் சாப்பிட வைக்கச் செய்யும் முயற்சிகளைப் பார்க்கலாம். ஒரு கையில் சாப்பாடு இன்னொரு கையில் அவர்களை வசியம் செய்யும் கைப்பேசியில் படம். (இதுவெல்லாம் குழந்தையின் ஓர் இரண்டு மூன்று வயதில் பழக்கம் ஆரம்பமாக்கப் படும்). 

குழந்தை ஓடிக் கொண்டே இருக்கும், அவர்கள் பின்னால் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓடி, ஓடி, வாயில் ஊட்டி விட முயல்வார்கள். பாதி வாயிலும் மீதி தரையிலும் என்று இருக்கும். 

குழந்தை சாப்பிட்டால் போதும் என்பதால் இவ்வாறு செய்வதுண்டு. ஆனால் இது போலவே ஒவ்வொரு தடவையும் செய்தால், இதில் ஒளிந்திருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்ற மந்திரத்தைக் குழந்தைகள் உள்வாங்கிக் கொள்வார்கள். விளைவு, சாப்பிடுவது இப்படித்தான் என்று நினைப்பது, எல்லாவற்றிற்கும் எல்லோரும் நம் பின்னால் ஓட வேண்டும் என்ற எண்ணம்.

குழந்தைகளைப் பொருத்தவரை அவர்களின் முன்னால் பெற்றோர், கூட இருக்கும் பெரியவர்கள் எந்த வழி முறைகளைப் பின்பற்றுகிறார்களோ அதைக் கூர்ந்து கவனித்துத் தானும் பின்தொடர்வார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்றவரைக் கவனமாகப் பார்த்து கற்றுக் கொள்வது பெரும் பழக்கமாகும். 

இதிலிருந்து, தங்களது வழிகளை அமைத்துக் கொள்வார்கள். பார்ப்பதை அப்படியே பின் தொடர்ந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு, எல்லோரும் டிவி முன்னால் அமர்ந்து சாப்பிட்டால், குழந்தையும் அதையே கேட்கும், செய்ய வற்புறுத்தும். அதே மாதிரி, சாப்பிட்டு தட்டை அங்கேயே வைத்தால் குழந்தைகளும் அவ்வாறே செய்வார்கள். குழந்தைகள் செய்வது நம்முடைய பிரதிபிம்பம்.

அதனால் தான் சாப்பாட்டை இப்படியே சாப்பிட விடுவதா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது? எவ்வாறு உணவை மதித்து, சுவைத்து, சாப்பிடப் பழக்குவது? இதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். 

மிகச் சிறந்ததைப் பெற,

மிகச் சிறந்ததைக் கொடு!

மேலும் பார்ப்போம்…..

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com

***************************************************

<!–

–>