பகுதி 6: உங்கள் குழந்தை மிகவும் அடம் பிடிக்கிறதா? இதுதான் காரணங்கள், உடனே சரி செய்யுங்கள்!

குழந்தைகள் அடம் பிடிப்பை பற்றியும் அதன் இன்னும் ஒரு விதமான கவனத்தை ஈர்ப்பது பற்றி சென்ற வாரம் உரையாடினோம். அடம் பிடிப்பின் காரணிகளை,  அதன் தீர்வைப் பற்றி இந்த பகுதியில் உரையாடலாம்.

அடம் பிடிக்கும் காரணி

அடம் பிடிப்பு ஏற்படக் காரணி, சூழல்கள் இருக்கலாம். குழந்தையால் தானாகச் செய்ய முடியவில்லை என்ற போது பிள்ளைகளுக்கு அந்த இயலாமையின் மேல் வெறுப்புத் தட்டிவிடும். தனக்குத் தெரிந்த செய்முறைகள், அதில் குறையிருந்தாலும் அதையே கடை பிடித்துத் திரும்பத் திரும்பச் செய்து பார்ப்பார்கள். அதில் அவர்கள் விரும்பியது கிடைத்து விட்டால் அந்த உத்திகளை மறுபடியும் உபயோகிப்பார்கள். 

பெரும்பாலும் குழந்தைகள் நன்றாக அறிவது, தாங்கள் சில விதங்களில் கேட்டால் அது கிடைத்துவிடும் என்று. போன வாரமும், மேல் பகுதிகளில் சொன்னது போலும் அடம்பிடிப்பில் குழந்தைகள் உபயோகிக்கும் இந்த யுக்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம். இதில், பொருளை வீசி எறிவது, சத்தம் எழுப்புவது, தை தை எனக் குதிப்பது, கண்ணீர் சிந்தாமல் அழுவது, நகராமல் அதே இடத்தில் நிற்பது என்று பல விதங்கள் உண்டு. 

கவனத்தை ஈர்த்து, அதன்மூலம் தன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற தேடலில் ஆரம்பித்து, பிறகு கிடைக்கும் வரைச் செய்வதை அடம்பிடிப்பதாகச் சொல்வதுண்டு. இந்த “அடம்பிடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எப்படிக் கேட்க வேண்டும் என்று தெரியாத பட்சத்தில் இப்படிச் செய்வார்கள். 

கேட்கும் எல்லாவற்றையும் பூர்த்தி செய்வது, வாங்கித் தந்துவிடுவது என்ற பழக்கம் இருந்தால் மறுத்த உடனே, நாம் “இல்லை” என்றதும், கேட்டதை அடைய அடம் பிடிப்பு ஆரம்பமாகும். தேவையை உடனடியாக பூர்த்தி கொண்ட அனுபவத்தில்  திரும்பத் திரும்பக் குழந்தைகள் இதையே செய்வார்கள். அப்போது தானாகக் கட்டுப்படுத்த முடியாத கோபமும் அடம் பிடிப்பும் பழக்கமாகிவிடும். உஷார்!

அடம் பிடிப்பைச் சரி செய்ய

குழந்தை அடம்பிடிக்கும் பொழுது, அமர்க்களப் படுத்தும்பொழுது, கூட இருக்கும் நாம் அந்த சூழலில் மிகப் பொறுமையாக, எந்தவித பதட்டமும் காட்டாமல், அமைதி காத்து குழந்தையை அணுகினால், பிரச்சனையைச் சீர் செய்ய உதவும். 

முன்னர் சொன்னது போல், இந்த காலகட்டத்தில் குழந்தைகள் நாம் செய்வதைக் கூர்ந்து கவனித்து அதையே பிரயோகம் செய்வார்கள். அடம் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் நாம் அமைதி காத்து அடத்திற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளைப் பரிந்துரைத்தால், அதுவே வழிகாட்டி ஆகும். 

நாம் கண்டிக்கும்போது, அடம் பிடிப்பைக் கண்டிக்க வேண்டும், குழந்தையை அல்ல. குழந்தைக்கு “நம்மை நேசிக்கிறார்கள், நம் நடத்தை தான் பிடிக்க வில்லை” என்று தோன்றுவது முக்கியம். புரியாத வயதில் இது மிகவும் முக்கியம். அப்போது தான் குழந்தையும் தன்னுடைய இந்தக் குணத்தை மாற்றத் தயாராக இருக்கும்.

குழந்தை அடத்திலிருந்து வெளியே வந்த பிறகு, அடத்திற்கு பதிலாகச் சரியான பலவிதமான அணுகுமுறைகளைத் தெளிவு படுத்த வேண்டும். 

அடம்பிடிக்கும் போது, “சரி நீ நிதானத்தை அடைந்த பின், இவ்வாறு கூச்சல், கத்தல் இல்லாமல் தெரிவித்தால் புரியும், நான் காத்து இருக்கிறேன்” என்று சொல்லி பக்கத்தில் அமர்ந்து கொள்ளலாம்.

அதே போலக் குழந்தை அடம் பிடித்து சாந்தமாக ஆன பின் அவர்கள் எப்படிக் கேட்டு இருக்கலாம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதைக் குற்றம் சொல்லும் விதமாகச் செய்யக்கூடாது. அடத்திற்குப் பதிலாகக் கடைப்பிடிக்க வேண்டிய வேறு வழிகளை எடுத்துக் காட்டுகிறோம். 

இந்த தருணத்தில் குழந்தை சரியாகச் சொன்னது, செய்தது எதுவோ, அதை எடுத்துக் கூறவேண்டும். இப்படிச் செய்கையில் குழந்தைகள் அந்த நல்லவற்றைச் செய்து மற்றவற்றைப் புறக்கணிக்கப் பார்ப்பார்கள்.

“தேவை-வேண்டும்” வேறுபாடு புரிய வைப்பது நன்கு. முதலிலிருந்தே குழந்தைகளுக்குக் கேட்கும் பொருள் “தேவை”யானதா அல்லது  “வேண்டும்” என்பதா என்ற வேறுபாட்டைப் புரிய வைக்கலாம். 

“இல்லை”, “கூடாது” என்பதையும் புரிய வைக்க வேண்டும். “இல்லை” என்று சொல்லும் போது ஏன் என்று விளக்கினால் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறோம். ஆனால் இதை விவரிக்கும் போது உண்மையை மட்டும் சொல்ல வேண்டும் அதற்கு கை கால் காது வைக்காமல். நாம் பல முறை உண்மை புரியாது என்று நினைத்தோ, அல்லது அப்படிச் சொன்னால் குழந்தை அடங்கிவிடும் என்று நினைத்தோ, ஏதோ ஒன்றைச் சொல்லி விடுவோம் “அது வேண்டாம் அழுக்கு”, “அங்குப் போக வேண்டாம், பூச்சாண்டி வரும்” என்பது போல.  இப்படிச் செய்தால், நாம் உண்மை பேசவில்லை என்று குழந்தை உணர்ந்து விடும், தானும் வேண்டியதை அடைய எப்படியும் பேசலாம், எதையும் சொல்லலாம் என்று கற்றுக் கொண்டு, அடம் பிடித்து, அமர்க்களப் படுத்தித் தான் வேண்டியதைச் சாதித்துக் கொள்ள முயலும்.

குழந்தை தேவையற்ற அடம் பிடித்தால் “கூடாது” என்று நாம் குரலை உயர்த்தாமல் மிகத் தெளிவாக, ஒரே ஒரு முறை, பயமுறுத்தாமல் சொன்னால் இதுவே போதுமானது.

அடம் பிடிப்பு பெற்றோர், அக்கம்பக்கத்தினரின் கவனத்தைக் கவருவதற்காகவே என்று இருந்தால் கண்டிப்பாக அதற்கு இசைந்து விடக் கூடாது. அவர்கள் செய்வதை யாரும் பார்க்காமலிருந்தால் நிறுத்தி விடுவார்கள்.

அடம்பிடிப்பு முற்றிப் போனால், அதில் குழந்தை தன்னை காயப் படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை அடம்பிடித்து மூச்சைப் பிடித்துக் கொண்டால் நிலைமையைச் சமாளித்த பின்னர், அதைக் கையாள குழந்தை மருத்துவரின் ஆலோசனை அல்லது மனநல நிபுணர்களை அவசியம் அணுக வேண்டும்.

குழந்தையுடன் இருக்கின்றவர் மனத்திடத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் தம்மைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் வெட்கப் பட்டு, அங்குச் சிலர் வாங்கி தரச் சொல்ல, அது மேலும் வெட்கமாகும். இதிலிருந்து விடுபட, குழந்தையின் ஆட்டத்திற்கு இணங்கி-கேட்டதைச் செய்து விடுவதும் உண்டு. இதைக் கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். சில சூழ்நிலைகளில் முடியாமல் போய் இசைந்து விட நேரலாம், அப்படி நடந்தால் சற்று நேரத்திற்கு பிறகு, அல்லது வீட்டிற்குத் திரும்பிய பின்னர் “ நீ கேட்ட விதம் சரியான முறையில் இல்லை. உன்னையும் காயப்படுத்தி, என்னையும். அதனால் தான் அது போல் கேட்பது, பிடிக்க வில்லை. அப்படி செய்யாமல், கேட்டு கொள்ளலாம், ப்ளீஸ்” என்று சொல்லலாம், சிறு குழந்தைக்குக் கூட. 

அடம்பிடிப்பு அடிக்கடி நேர்ந்தாலோ, அல்லது பெற்றோருக்கு அடம்பிடிப்பில் அதிகக் கோபம் வந்தாலோ, அல்லது குறிப்பிட்ட சூழலில் நேர்கிறது என்று தெரிகிறது ஆனால் அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை,  பலமுறை நேர்ந்து கொண்டே இருந்தால், குழந்தையின் மனவளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல. குழந்தை மருத்துவரை அல்லது மனநல நிபுணரைச் சந்தித்து இதற்குத் தீர்வு காணுங்கள். 

ஆக, இங்கு நாம் பேசியது, தராமல் மருப்பது, கைப்பேசி தந்தால் சாப்பிடுவது, இடுப்பை விட்டு இரங்காமல் இருப்பது, வெளியே செல்வோரைத் தடுப்பது, காய்கனிகளைத் துப்புவது, என்ற பல அடம்பிடிப்பு இருக்கின்றன. இப்படி எல்லாம் நேராமல் இருக்க முதலிருந்தே குழந்தைகளுக்கு “உண்டு”/ “இல்லை”, “தருகிறேன்”/ “தர மாட்டேன்” இரண்டையும் விளக்கம் கொடுத்துப் புரிய வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அடம் பிடிக்க வாய்ப்பே இருக்காது.

அடம் பிடிப்பு ஏற்படாமல் இருக்க, மிக எளிதான சிலவற்றை நாம் செய்கிறோமா என்பதைக் கவனிக்கலாம். குழந்தை நேரத்திற்கு உணவு அருந்துகிறதா? வயிறு நிறையச் சாப்பிடுகிறதா? தூக்கம் எப்படி? அதன் சூழல் ஆதரவாக, அரவணைப்புடன் இருக்கிறதா என்று கணக்கு எடுங்கள். அடிப்படைத் தேவைகளின் குறைபாடு, அவற்றைச் சரியாகச் செய்யாததும், கூட இருப்பவர்களின் பாசம், அவர்களின் மீது நம்பிக்கை, மரியாதை இவை இல்லாதது ஆடத்தின் அஸ்திவாரமாகும். இங்குச் சொன்னதில் நாம் உணவை உதாரணமாக எடுத்துக் கொண்டு அடம் பிடிப்பு எவ்வாறு நேர்கிறது என்பதை அடுத்த வாரம் ஆராயலாம். ஏனென்றால்,

மிகச்சிறந்ததைப் பெற,

மிகச்சிறந்ததைக் கொடு!

மேலும் பார்ப்போம்..

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்            malathiswami@gmail.com

<!–

–>