பணம் போனது! ஷுகர் வந்தது!

ஒரு வியாபாரி மரணத்தை எதிர்நோக்கி மயங்கிய நிலையில் படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றிலும் மனைவி மக்கள் உற்றார் உறவினர் பெரும் கவலையோடு அமர்ந்திருக்கின்றனர். யாரும் எதிர்பாராத விதமாக வியாபாரி தலையை லேசாக அசைத்து, விழிகளை மெல்லத் திறந்து, பலவீனமான குரலில் ‘என் மனைவி எங்கே’ என்று கேட்கிறார். தலைமாட்டில் சோகத்தோடு சோகத்தோடு இருந்த மனைவி எழுந்து அவர் முன்பாக வந்து, ‘இங்கே தான் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்றுமில்லை; ஓய்வெடுங்கள்’ என்று கூறுகிறார். ‘பிள்ளைகள் எங்கே என்று?’ என்று மனைவியை விசாரிக்கிறார்.’ அவர்களும் தந்தை அருகில் நெருங்கி வந்து நின்று, ‘எல்லோரும் இங்கே தான் இருக்கிறோம். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்’  என்கிறார்கள். அந்த இறுதி நிமிடங்களிலும் கூட வியாபாரி முகத்தில் எரிச்சலுடன் கூடிய ஒருவித மாற்றம். ‘அப்படியென்றால் இன்றைக்கு யாருமே கடைக்குப் போகவில்லையா? கடையை மூடி விட்டீர்களா?’ என்று உடல் பலவீனங்களை மீறிய கோபத்துடன் விசாரிக்கிறார். அனைவரின் மனத்திலும் ஓர் அசவுகரியம் உருவானது.

இது ரஜ்னீஷ் சொன்ன குட்டிக்கதை. இக்கதையில் வரும் வியாபாரியின் மனநிலையினைக் கணக்கில் கொண்டு ஹோமியோபதியில் உரிய மருந்தளித்தால் அவரைக் காப்பாற்றவும், நலப்படுத்தவும் வாய்ப்பு உண்டு. அவருக்கு என்ன மருந்து ஏற்றது என்பதை இறுதியில் பார்ப்போம்.

***

வெளியூரிலிருந்து கண்ணன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். வயது 35. இரண்டாண்டு காலமாக சர்க்கரை வியாதிக்காக, ரத்தக் கொதிப்பிற்காக, மூட்டு வலிகளுக்காக ஆங்கில சிகிச்சை எடுத்து வருகிறார். பல்வேறு பரிசோதனை அறிக்கைகள் கொண்டு வந்திருந்தார். அவற்றையும் பார்த்து விட்டு, நோய்க்குறிகளையும் கேட்டறிந்து கொண்டு, பின்னர் அவரது குடும்பம், தொழில், அவற்றிலுள்ள லாப நஷ்டங்கள் பற்றிக் கூறுமாறு கேட்டேன்.

அவர் புறநகர் பகுதியில் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு கட்டிடத்தை வாங்கி, பலசரக்குக் கடை துவங்கியுள்ளார். வியாபாரம் சரிவர நடைபெறாமல் போகவே, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கூட்டாக நகரின் மையப் பகுதியில் மற்றொரு வியாபாரத்தை துவங்கியுள்ளார். மூலதனமும், வாடகையும், இதரச் செலவுகளுமாக  பணம் கரைந்ததே தவிர எதிர்பார்த்தபடி வியாபாரம் மூலம் லாபம் கிடைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குறை கூறி வந்தனர்.மேலும் அவருக்கு எதிராக இருவரும் சேர்ந்து கொண்டு பல்வேறு புகார்களைக் கூறினர். எனவே அந்த வியாபாரக் கூட்டிலிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேர்ந்தது.

‘தொழில் விஷயமாக அங்குமிங்குமாய் அலைய வேண்டிய நிலையில் வீட்டை, குடும்பத்தைக் கவனிக்க முடிகிறதா?’ என்று கேட்டேன்.

‘எங்கு போனாலும், எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்குத் திரும்பி விடுவேன். வீட்டுக்கு வந்தால் தான் மனசுக்கு நிம்மதி. வெளியிடங்களில், கடையில், கடன்காரர்கள் வந்துவிட்டால், வேறு பிரச்னைகள் வந்து விட்டால் எப்படியாவது சமாளித்து விட்டுப் பின்னர் சிறிது நேரமாவது வீட்டிற்குப் போய் தங்கி விட்டு வந்தால் தான் நன்றாக இருக்கும்.”

‘தூக்கம்?’

‘தூக்கம் வரவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் கனவிலும் இந்தப் பிரச்னைகள் தான். வியாபாரம், தொழில், கடன்கார்ர்கள், கணக்குவழக்கு, பகலில் நடந்தது எல்லாம் கனவிலும் வரும்’

அவருக்குரிய ஒரு மருந்தைத் தேர்வு செய்து 200 வீரியத்தில் ஒருவேளையும், 1எம் என்ற வீரியத்தில் ஒரு வாரம் கழித்து ஒரு வேளையும் சாப்பிடச் சொல்லி அனுப்பினேன். 15 நாட்கள் கழித்து சற்றே புத்துணர்ச்சியுடன் மீண்டும் வந்தார். ரத்த சர்க்கரை 15 நாட்களில் 330மி.கி. அளவிலிருந்து 210.மி.கி. ஆகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மூட்டு வலிகளும் குறைந்திருந்தன. பசி, தாகம், நீர், மலம் எல்லாம் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பதாகக் கூறினார். ரத்த அழுத்தம் குறித்து எந்தத் தொந்தரவும் இல்லை என்றார்.

மீண்டும் அதே மருந்து 1எம் வீரியத்தில் ஒரு வேளை மட்டும் தரப்பட்டது. 30 நாட்களுக்குப் பின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆய்வுகளோடு வந்தார். ரத்த சர்க்கரை அளவு 140மி.கி.,ரத்த அழுத்தம் நார்மல். அவரது ஆரோக்கியத்தில் மட்டுமில்லை, அவரது நடவடிக்கைகளிலும், மனநிலையிலும் கூட குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. மேலும் சிறிது காலம் மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்த சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்த ஹோமியோபதியில் சில மருந்துகளும், தாய் திரவங்களும் பயன்படுகின்றன. என்றாலும் ஹோமியோபதிக்குரிய அணுகுமுறைப்படி நோயாளியை ஆய்வு செய்து மருந்தளித்தால் முழுநலம் ஏற்படுகிறது.

‘முழுமையாக குணப்படுத்த முடியாத நோய்களில் நீரிழிவும் ஒன்று’ என்று ஆங்கில மருத்துவம் கூறிவருவதை இந்திய மருத்துவங்களும் ஹோமியோபதியும் நிராகரிக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மருத்துவ முன்னோர்களால் எழுதப்பட்டுள்ள எந்தப் பதிவுகளிலும் நீரிழிவு நோய் என்பது பூரணமாகக்  குணப்படுத்த முடியாத நோய் என்று குறிப்பிடப்படவில்லை.

மிகப் பழமையான ஆயுர்வேத நூல்களிலும் இந்நோயை ‘பிரமேகம்’ என்று விளக்கியுள்ளனர். சிறுநீரின் தன்மையின் அடிப்படையில் இந்த பிரமேகத்தை நம் முன்னோர்கள் 20 வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றுள் மதுமேகம், சத்ரமேகம் என்ற இரு வகை மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மதுமேகம் என்பது அல்லது சத்ரமேகம் என்பதற்கு ‘தேன் போன்ற சுவையுள்ள சிறுநீர்’ என்பது பொருள் .கி.மு.6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதர் எழுதிய ஆயுர்வேத நூல்களில் சர்க்கரை நோயின் வகைகள், அறிகுறிகள், பின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உண்மைகளுக்கு நெருக்கமாக சுஷ்ருதர் எழுதியிருப்பது வியக்கத்தக்கது. அதே போல சித்தர்களும் சர்க்கரை நோய் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். இத்தகைய முன்னோர்களின் மருத்துவ  இலக்கியங்களிலும், ஹோமியோபதி கோட்பாடுகளை விவரிக்கும் ஆர்கனான் நூலிலும், ஆங்கில மருத்துவம் கூறுவது போல் ‘நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்த மட்டுமே இயலும். முழுமையாக குணப்படுத்த இயலாது’ என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை.

***

கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட ரஜ்னீஷ் கதையில் வரும் வியாபாரிக்குத் தேவையான ஹோமியோபதி மருந்து ‘பிரையோனியா’. ‘always talks of business’ ‘always business thoughts’ என்ற மனக்குறி அடிப்படையில் பிரையோனியா மருந்து அவருக்கு உரிய மருந்தாகிறது. இதே மருந்து தான் நீரிழிவுத் துயருக்கு வந்த கண்ணனுக்கும் வழங்கப்பட்டது. ‘dreams about business of the day’ wants to go home’ ‘thinks and talks constantly about his business’ போன்ற முக்கிய குறிகள் அடிப்படையில் பிரையோனியா அவருக்கு பொருத்தமான மருந்தாக அமைந்து நன்மை அளித்துள்ளது. ஹோமியோபதி சிகிச்சை என்பது விஞ்ஞானமும் கலையும் இணைந்தது. ஆழ்ந்த படிப்பும் பயிற்சியும் அனுபவமும் மனிதநேயமும் மட்டுமே வெற்றிக்குத் துணைபுரியும்.

Dr.S.வெங்கடாசலம்,                                                                                                மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்/ செல் : 94431 45700  / Mail : alltmed@gmail.com

<!–

–>