பரபரப்பான டி20 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 19) டி20 தொடரும் நவம்பர் 26 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.
    
டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அஃபிஃப் ஹுசைன் 36 ரன்கள் எடுத்தார். ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் முகமது வாசிம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

வங்கதேச அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தடுமாற்றத்துடன் விளையாடியது பாகிஸ்தான் அணி. 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஹைதர் அலி, சோயிப் மாலிக் டக் அவுட் ஆனார்கள். இதன்பிறகு ஃபகார் ஸமானும் குஷ்தில் ஷாவும் பொறுப்புடன் விளையாடி தலா 34 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றி பெற 32 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். முஸ்தாபிசுர் வீசிய 18-வது ஓவரில் ஷதாப் கானும் முகமது நவாஸும் இணைந்து 15 ரன்கள் எடுத்தார்கள். 19-வது ஓவரில் நவாஸ் இரு சிக்ஸர்கள் அடித்தார். இதையடுத்து 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து முதல் டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. ஷதாப் கான் 10 பந்துகளில் 21 ரன்களும் முகமது நவாஸ் 8 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>