பாகுபலிக்கும் அம்ராபலிக்குமான சுவாரஸ்யமான தொடர்பு…

பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்தியாவெங்கிலும் பெருநகர மக்களிடையே இன்னும் படத்தைப் பற்றிய பிரஸ்தாபங்கள் மட்டும் ஒழிந்தபாடில்லை. நான்கைந்து பேர் கூடிப் பேசிக்கொண்டிருக்கையில் நிச்சயமாக ஓரிரு வார்த்தைகளாவது பாகுபலி பற்றிப் பேசாமல் அவர்களது சம்பாஷனைகள் முற்றுப் பெறுவதில்லை. பாகுபலி 1 & 2 திரைப்படங்களைப் பொறுத்தவரை பலரும் பல விசயங்களுக்காக நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் படத்தைப் பற்றி விமர்சித்து வருகிறார்கள். எது எப்படியாயினும் மொத்தத்தில் பாகுபலி ஒரு டிரெண்ட் செட்டர் திரைப்படம் என்பதில் எவருக்கும் எந்த வித ஐயமும் இல்லை.

யாருக்குத் தெரியும்? இன்னும் சில நாட்களில் பாகுபலி ஹேர் ஸ்டைல், பாகுபலி நகைகள், பாகுபலி புடவைகள், பாகுபலி ஸ்டைல் பொட்டுகள், வளையல்கள், என ஒவ்வொரு விசயமாக விழாக்கால சிறப்புத் தள்ளுப்படிகளாக மாறி மாகரங்களில் கடை விரிக்கப் படுமோ என்னவோ? டிரெண்டுகள் வெவ்வேறாயினும் அதை உருவாக்கிய பிராண்ட் பாகுபலி மட்டுமே!

பாகுபலி இரண்டாம் பாகம் படம் வெளியாவதற்கு முன்பே முதல் பாகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கிராபிக் நாவல் வெளியிடப்பட்டது, வாசிப்பில் ஆர்வமுள்ள சிறுவர்களை ஈர்க்க காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகின. பாகுபலி பிராண்ட் சித்திரம் பொறித்த டி. ஷர்ட்டுகள் தயாராகின. இவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கும் இப்போது பாகுபலியால் வியாபாரம் எகிறியிருக்கும் என்பது நிஜம் தான். அந்த வகையில் பாகுபலியால் பிரபலமாகி விட்ட இன்னொரு விசயம் அம்ராபலி நகைக்கடை. 

ஜெய்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நகைக்கடையின் கிளைகள் இந்தியாவெங்கும் முக்கிய நகரங்களில் கடை விரித்துள்ளன. இங்கு தயாராகும் நகைகளில் பெரும்பாலானவை வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்டவை. வெகு சில நகைகளை வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கத்திலும் வடிவமைத்துத் தருகிறார்கள். பாகுபலி முதல் பாகத்தில் ராஜமாதா சிவகாமி, பிங்கல தேவர், கட்டப்பா, பல்லாள தேவன், அமரேந்திர பாகுபலி, அவந்திகா, சிவுவின் தாய் சங்கா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் அணிந்து வரும் நகைகள் வித்யாசமான புதுமையான வடிவமைப்பில் இருந்தன. முதல் பாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இரண்டாம் பாகத்திலும் அந்த கதாபாத்திரங்கள் அணிந்து வரும் நகைகள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் தான் அதிகப்படியான நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கப் பட்டிருக்கக் கூடும் என நம்பலாம். அந்த நகைகளை வடிவமைத்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்ராபலி நகை வடிவமைப்பாளர்கள் தானாம். இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை சிவகாமி தேவி, தேவசேனா கதாபாத்திரங்களுக்காகத் தான் அதிகமான நகைகளை வடிவமைக்க வேண்டி இருந்ததாம். மொத்தமும் ஆண்டிக் வகை நகைகள். பழங்கால அரச குடும்பங்களை நினைவுறுத்தும் வகையிலான இந்த நகைகளை வடிவமைக்க இவர்கள் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது படத்தில் அந்த நகைகளைப் பார்க்கும் போது புரிகிறது. 

படம் பார்த்து விட்டு அம்ராபலி நகை டிசைன்களால் ஈர்க்கப்பட்டு அதை கூகுளில் தேடிப் பார்த்தால் நகையை விட சுவாரஸ்யமான விசயமெல்லாம் வந்து விழுந்தது. பாகுபலிக்கு அம்ராபலி நகையா? பெயர் பொருத்தம் ரிதமிக்காக இருக்கிறதே என்று யோசித்தால்… அது மட்டுமில்லை கி.மு. 500 ஆம் ஆண்டு வாக்கில் அம்ராபலி என்ற பெயரில் வைஷாலியில் ஒரு பேரழகி இருந்திருக்கிறாள் என்று குறிப்புகளை அள்ளித் தந்து தலையில் நறுக்கென கொட்டுகிறது கூகுள். யாரந்த பேரழகி என்று தேடினால் 60 களில் வைஜயந்திமாலாவை வைத்து அம்ராபலியின் வாழ்வை திரைப்படமாகவே ஆக்கி வைத்திருக்கிறார்கள் பாலிவுட்காரர்கள். தூர்தர்ஷனும் தன் பங்குக்கு 80 களில் அம்ராபலியின் கதையை ‘WOMAN OF INDIA’ என்ற பெயரில் மெகாத் தொடராக்கி இருக்கிறது. அம்ராபலியாக நடித்து தொடரை இயக்கி இருப்பது அப்போதைய பாலிவுட் டாப் ஹீரோயின் ஹேமாமாலினி. 

யாரந்த அம்ராபலி?  

வைஷாலி குடியரசின் அரசவை நர்த்தகியான அந்தப் பேரழகியின் பெயரை ராஜஸ்தான் நகைக்கடைக் காரர்கள் எதற்கு தங்களது கடைக்குச் சூட்டி பெருமிதப் பட வேண்டும்? என்று தோன்றும் தானே? எல்லாம் சாம்ராட் அசோகா டைப் கதை தான். வைஷாலியின் அழகுப் பெட்டகம் அம்ராபலியின் மீது தாங்கொணா மயக்கம் கொண்டிருந்த அரசன் அவள் தனியொருவருக்குச் சொந்தமாக இருக்க மனமொப்பவில்லை. வைஷாலியின் இளவயது காதலைக் கொலை செய்து விட்டு அவளை அரசவை நர்த்தகியாக்கி வைஷாலி ஜனபத கல்யாணியாக்குகிறான். இது அங்கே தென்னகத்தின் தேவதாசி முறைக்குச் சற்றும் குறையாத ஒரு பட்டம். அம்ராபலியின் அழகில் வைஷாலி அரசன் மட்டுமல்ல மகதத்தின் பிம்பிசாரனும் கூட  தேனில் விழுந்த வண்டாக மயக்கம் கொள்கிறான். பிம்பிசாரன் அந்நாளில் வீணை கற்றுக் கொண்டு கலையில் தேர்ந்தவனாகவும் இருந்ததால் அவனை அம்ராபலியும் விரும்பத் தொடங்குகிறாள். இதற்கு நடுவில் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வைஷாலி ராஜ்ஜியத்தின் மீது படை கொண்டு வருகிறான் பிம்பிசாரன். பெரும்போர் நடைபெறுகிறது. பல்லாயிரக் கணக்கானோர் போரில் மாண்டு போகிறார்கள். வைஷாலி தீக்கிரையாக்கப் படுகிறது. இதனால் மனமுடைந்து போன அழகி அம்ராபலி மன அமைதி வேண்டி புத்தரை நாடிச் செல்கிறாள். ஆரம்பத்தில் பெளத்தத் துறவிகள் அவளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் புத்தர் அம்ராபலியின் குற்றமற்ற தன்மையைப் பற்றி விளக்கியதும் பெளத்த துறவிகளில் ஒருவராக அம்ராபலியும் ஏற்றுக் கொள்ளப் படுகிறார். இப்போதும் கூட அம்ராபலி புத்தரைச் சந்தித்த மாமரச் சித்திரம் பெளத்த ஜாதகக் கதைகளில் குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது.

சமஸ்கிருதத்தில் அம்ரா என்றால் மாங்கனி என்று பொருளாம். அம்ராபலி பிறந்ததுமே அவளது தாய் அவளை ஒரு மாமரத்தின் அடியில் கிடத்தி கை விட்டுச் செல்கிறாள். பிறகு அம்ராபலி வைஷாலியைச் சேர்ந்த அரசவை நடன ஆசிரியரான குமார் பட்டால் வளர்க்கப்பட்டு வாழ்வின் அழகியலையும், துன்பியலையும் ஒரு சேர அனுபவித்து முடிவில் அமைதி நாடி புத்தரைத் தேடிச் சென்று துறவியாவதாக பெளத்தக் கதைகள் சொல்கின்றன.

அந்த அம்ராபலியின் நினைவாகத் தான் இந்த ஜெய்பூர் நகைக்கடைக்கு இந்தப் பெயர் அமைந்திருக்கிறது. பாகுபலி ரசிகர்கள் கவனத்துக்கு ஒரு டிப்ஸ்… சென்னையில் அம்ராபலியின் கிளை நுங்கப் பாக்கம் காதர்நவாஸ்கான் சாலையில் இருக்கிறதாம். கூகுளாண்டவர் சொல்கிறார். நகைகளின் விலைகள் ரூ 600 தொடங்கி பாகுபலியின் அனுஷ்கா அணிந்து வந்த நகைகளைப் போல என்றால் 60000, 70000 ரூபாய் வரையிலும் வெரைட்டியாக கிடைக்கிறதாம். பாகுபலிக்காக வடிவமைத்த டிசைன்களில் படப்பிடிப்புத் தேவை போக எஞ்சிய நகைகளெல்லாம் கூட தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவாம். விரும்புவோர் வாங்கிச் செல்லலாம் என அறிவித்திருக்கிறார்கள்.

பாகுபலிக்காக மட்டும் இல்லை இதற்கு முன்பே பாலிவுட்டின் ராம்லீலா திரைப்பட்த்துக்கும், ஹாலிவுட்டில் ட்ராய் திரைப்படத்துக்கும் இவர்கள் நகைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு தான் பாகுபலிக்கும், அம்ராபலிக்குமான தொடர்பு!
 

Image courtsy: Google

<!–

–>