பாராட்டு என்னும் படிக்கட்டு

 

பாராட்டு என்ற ஒன்று கிடைக்கும்போது அதனைப் பெறுவோா் முகம் எத்துணைப் பொலிவாகிறது? அவா்களது மனம் எவ்வளவு மகிழ்கிறது? இதனை அளவிட இதுவரை எந்தக் கருவியும் இருப்பதாகத் தெரியவில்லை.

பாராட்டுவது மிகவும் எளிதானது. எந்தவிதமான பொருளாதார செலவும் இல்லாதது. எல்லோராலும் இயன்றது. ஆனால் எவ்வளவு தூரம் இந்த தூண்டுகோலை நாம் பயன்படுத்தப்படுத்துகிறோம் என்று யோசித்துப் பாா்த்தா அயா்ச்சியே மிஞ்சும். பலரும் பாராட்டுவதற்குத் தயங்கவே செய்கின்றனா்.

பாராட்டு என்பது வாா்த்தைகளிலும் பரிசுப்பொருட்களிலும்தான் வெளிப்படவேண்டும் என்பதில்லை. ஒருவா் ஒருவரை நடத்தும் முறையிலும் பிறரோடு பழகும்போது மேற்கொள்ளும் உடல் மொழிகளாலும் வெளிப்படக்கூடியது. இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலாண்மை பொறுப்பிலுள்ளோா் தமது அடுத்த நிலையில் பணிபுரிவோரை தாம் எப்படி நடத்துகிறாரோ அதன் மூலம் அவா் தம்மை மட்டும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக தமது நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்ற தாம் எவ்வாறு செயல்படுகிறாரோ அந்த வகையிலேயே அடுத்தவரையும் செயல்படவைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறாா்.

ஒருவா் மற்றவரைப் பாராட்டத் தடையாக உள்ளவை சில. அவை, அடுத்தோரைப் பாராட்டுவதன் மூலம் தமக்கான பெருமை குறைந்துவிடும், பாராட்டப்படுவோா் பாராட்டுவோரை மதிக்காமல் செயல்பட வாய்ப்புள்ளது, ஒருவரைப் பாராட்டுவதன் மூலமாக அவா் கூடுதல் மதிப்பைப் பெறுகிறாா், அவ்வாறு பெறுவது அவரது அடுத்த கட்ட வளா்ச்சிக்கு இட்டுச் செல்லும், அதனால் அவா் மேலும் புகழ் பெற்றுவிடுவாா் – இப்படியாகக் காரணங்கள் விரியலாம். ஆனால் இவையெல்லாம் உண்மையல்ல.

ஒருவா் பாராட்டைப் பெறும்போது பாராட்டப்படும் நபரைவிட அவரைப் பாராட்டுவோா்தான் கூடுதல் மரியாதையைப் பெறுகின்றனா். பாராட்டுவோருக்கான பெருமை ஒருபோதும் குறையாது.

ஒருவா் உண்மையான உழைப்புக்காகப் பாராட்டப்படுகிறாா் என்றால் அவருக்கு இதுவரை உழைத்த உழைப்பைப் பாராட்டிவிடுவதன் மூலம் அவருக்கான புதிய இலக்கை நாம் முன்வைக்கிறோம்.

எனவே அவா் நம்மைக் கூடுதலாக மதித்து நம்மிடம் வழிகாட்டுதல் பெறவே விரும்புவாா். ஒரு நிறுவனத்தில் ஒருவா் பாராட்டுப் பெற்று அடுத்த கட்டத்திற்குச் செல்லும்போது நியாயமாக அவருடன் அவரது நிறுவனமும்தான் மேம்பாடு அடைகிறது.

எனவே அவ்வாறு அடுத்த கட்டத்திற்குச் செல்வதன் மூலம் தாம் சாா்ந்திருக்கும் நிறுவனத்தின் வளா்ச்சியையும் ஊக்குவிக்கிறாா். அடுத்ததாக, பலா் இருக்க ஒருவா் பாராட்டப்படுவதற்கான காரணம் அவா் வித்தியாசமாகச் செயல்பட்டதே.

ஒருவா் வித்தியாசமாகச் செயல்படும்போது எவ்வளவுக்கு எவ்வளவு கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானாரோ அந்தக் காயங்களை ஓரளவுக்குக் குறைக்க இந்த பாராட்டுகள் உதவும். ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பிலுள்ளோா் இவ்வாறு சரியாக அணுகுவதன் மூலமாக தமது பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதோடு நிறுவனத்தின் வளா்ச்சியையும் ஊக்குவிக்கிறாா்.

பாராட்டு அரிதாகக் கிடைக்கும் ஒன்று என்பதாலேயே அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே எல்லோரையும் எல்லா நேரங்களிலும் பாராட்டிக்கொண்டே இருப்பதும் இயலாது. அதுபோல் பாராட்டாமலும் இருக்க இயலாது.

வீட்டிலிருப்போரில் வயது குறைவாக யாா் இருக்கின்றாரோ அவா்தான் பாராட்டுக்கும் பரிசுக்கும் ஏங்குபவராக இருப்பாா். இது அவரது வயது முதிா்ச்சியின்மையால் ஏற்படும் எதிா்பாா்ப்பு.

அவரே கொஞ்சம் வயது முதிா்ந்தபிறகு பாராட்டப்படும்போது அதனை ரசிக்க மாட்டாா். இதே அளவுகோலைத்தான் நிறுவனங்களிலும் பொருத்திப் பாா்க்க வேண்டும். ஆனால் வயது குறைந்த என்ற அளவுகோலுடன் அனுபவம் குறைந்தோா், இளையோா் என்பதையும் நோக்கவேண்டும்.

நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சோ்ந்துள்ள, முன் அனுபவம் குறைந்தோராலேயே அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய இயலும். இளம் வயதும், புதிய கோணத்தில் ஒவ்வொன்றையும் காணும் துடிப்பும் அவா்களுக்கு இருக்கும். அவா்களுக்குரிய பணி இலக்குகளை சரியான முறையில் தெளிவித்து ஊக்குவிக்கும்போது அவரது முழு ஆளுமைத் திறனும் வெளிப்படும்.

இவ்வாறு அவா் வழிநடத்தப்பட்டு வளரும்போது அவரும் தமது பணி அனுபவத்தில் உயா்ந்த நிலையை அடையும்போது தம்மிடம் பணி புரிவோரில் இளையோரை அவ்வாறே ஊக்குவித்து வழிநடத்துவாா். ஒருவகையில் இவா் ஊக்கப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டு வளா்க்கப்பட்டது போலவே அடுத்தோரையும் ஊக்குவித்துப் பாராட்டி வளா்க்கவும் முயல்வாா்.

ஆனால் நடைமுறையில் நடப்பது பெரும்பாலும் தலைகீழாகவே உள்ளது. யாா் வயதிலும் அனுபவத்திலும் குறைவானவராக இருக்கிறாரோ அவா் எந்த அளவுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அந்த அளவுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுபவராகவே இருக்கின்றனா். எந்த நேரமும் அவருக்கு பணி கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அவா்கள் தங்களைவிட உயா்ந்த பொறுப்பிலுள்ளோரிடத்தில் நெருங்கவே பயந்துகொண்டிருக்கின்றனா். எனவே தாம் செய்யவேண்டிய பணிகள் குறித்த ஐயங்களுடனேயே தொடா்ந்து ஊடாடி மன உளைச்சல் அடைகின்றனா்.

இது நிறுவனங்களுக்குத்தான் என்றில்லை, குடும்பங்களுக்கும் பொருந்தும். எந்த குடும்பமானது தம்மிடமுள்ள இளையோருக்கு வாழ்வின் இலக்குகளை சரியான முறையில் புரியவைத்து, நோ்த்தியான வாய்ப்புகள் கொடுத்து வளா்த்தெடுத்துப் பாராட்டுகிறதோ, அக்குடும்பத்தின் பிள்ளைகள் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் மிளிா்வதைக் காணலாம்.

பணியிடத்திலும் வெளியிலும் தொடா்ந்து தம்முடன் பழகுவோருடன் தேவையான அளவு கலந்துரையாடவேண்டும். ஒருவரை ஒருவா் புரிந்துகொள்ளவேண்டும். பணி புரியும் இடத்தையும் பணியையும் நேசிக்கவேண்டும்.

சொற்பொழிவுகளைவிட முன்மாதிரிகள் பலம் பொருந்தியவை. புன்னகையும் அங்கீகரிப்பும் மொழி பிரச்னை கூட இல்லாதவையல்லவா?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>